உரிமைத்தொகை.. வீடு தேடி வரும் அதிகாரிகள்... பயோமெட்ரிக், ஃபேஸ் ரீடிங்.. யாருக்கெல்லாம் பணம் கட்?

  • பெங்களூர்: பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக கர்நாடக அரசு செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களில் ஒன்றான 'கிருஹ லட்சுமி' திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளை மறுசரிபார்ப்பு செய்யும் பணிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளன.

    Advertisement

    தமிழ்நாட்டின் உரிமை தொகை திட்டத்தின் ஸ்டைலில் கர்நாடகாவில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், தகுதியிழந்த பயனாளிகளை பட்டியலிலிருந்து நீக்கவும் தற்போது புதிய கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஆகஸ்ட் 30 முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ள இந்த தீவிர சரிபார்ப்புப் பணி, ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும் என கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான முறையான நிர்வாக ஒப்புதல் அரசாணை ஆகஸ்ட் 28 அன்று வெளியிடப்பட்டது.

    மறுசரிபார்ப்புக்கான முக்கிய பின்னணி

    கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததும் அளித்த முக்கிய 5 தேர்தல் உத்தரவாதங்களில் கிருஹ லட்சுமி திட்டமும் ஒன்றாகும். இத்திட்டம் தொடங்கப்பட்ட 2023 ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 1.24 கோடி பயனாளிகளுக்கு 32 தவணைகளாக மொத்தம் ₹76,951.13 கோடி நிதி உதவி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில் பயனாளிகளில் சிலர் உயிரிழந்தது, இடம்பெயர்ந்தது போன்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், பயனாளிகள் அல்லது அவர்களது கணவர்கள் வருமான வரி அல்லது ஜிஎஸ்டி செலுத்தும் நிலைக்கு மாறியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. திட்டத்தின் விதிமுறைகளின்படி வரி செலுத்துபவர்கள் இதில் பயன்பெற இயலாது என்பதால், போலி மற்றும் தகுதியற்ற பயனாளிகளை நீக்கி அரசு நிதி முறைகேடாகச் செல்வதைத் தடுக்க முழுமையான கள ஆய்வு கட்டாயமாகியுள்ளது.

    வீடு தேடி வரும் கள அதிகாரிகள்

    சுமார் ₹20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த சரிபார்ப்பு திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    Advertisement

    களப்பணியாளர்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அச்சிடப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை வழங்குவார்கள். தகவல்கள் பிற வழிகளில் கிடைத்தாலும், வீடு வீடான நேரடி ஆய்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆய்வு நடக்கும் நேரத்தில் பயனாளி வீட்டில் இல்லாவிட்டால், குடும்ப உறுப்பினர் ஒருவர் அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.

    ஜிபிஎஸ் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பம்

    மின்னணு குடிமக்கள் சேவை இயக்குநரகம் இதற்கென பிரத்யேக மொபைல் மற்றும் இணைய செயலியை உருவாக்கியுள்ளது. கள ஆய்வாளர்கள் கிராமம் மற்றும் நகர வாரியாக பயனாளிகள் பட்டியலுடன் வருகை தருவார்கள்.

    பயனாளி இருக்கும் இடத்தில் அவரது நேரடிப் புகைப்படம் செயலி மூலம் பதிவு செய்யப்படும்.
    பயனாளி வசிக்கும் வீட்டின் துல்லியமான ஜிபிஎஸ் அமைவிடம் தானாகப் பதிவு செய்யப்படும்.
    பயனாளியின் முக அங்கீகாரம் செயலி மூலம் சரிபார்க்கப்படும்.

    Advertisement

    வீட்டில் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

    கள ஆய்வாளர் வரும் நேரத்தில் வீட்டில் இல்லாதவர்கள் அல்லது முக அங்கீகாரம் தொழில்நுட்பக் காரணங்களால் முழுமையடையாத பயனாளிகளுக்குத் தகுந்த தகவல்கள் பல்வேறு தகவல் தொடர்பு வழிகளில் அனுப்பப்படும். அத்தகைய நபர்கள் தங்களுக்குரிய நியாயவிலைக் கடை அல்லது அருகிலுள்ள கர்நாடகா ஒன், கிராம ஒன், பெங்களூரு ஒன் மற்றும் பாபூஜி சேவா கேந்திரா மையங்களுக்குச் சென்று தங்களது பயோமெட்ரிக் விரல்ரேகை பதிவை மேற்கொண்டு சரிபார்ப்பை எளிதாக நிறைவு செய்யலாம். மேலும் ரேஷன் கடைகளில் ஏற்கனவே பெறப்பட்டுள்ள கைரேகை தகவல்களையும் அரசு இதில் ஒருங்கிணைக்கவுள்ளது.

    Advertisement

    மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரிகள் கள ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து இப்பணிகளைச் சுமுகமாக முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உண்மையான ஏழை எளிய குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அரசின் இந்த மாத உதவித்தொகை தொடர்ந்து சென்றடைவதை உறுதி செய்வதே இந்த அதிரடி நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும்.

    English Summary

    Gruha Lakshmi Scheme: Karnataka Begins Door-to-Door Biometric and Face Verification for 1.24 Crore Women