பெங்களூர்: இஸ்ரோ நிறுவனம் தனியார்மயமாக்கப்படுவதாக கடந்த சில காலமாகவே தகவல் வெளியாகி வந்தது. இதற்கிடையே இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் விளக்கமளித்துள்ளார். அதாவது இஸ்ரோ நிறுவனம் தனியார்மயமாக்கப்படவில்லை என்றும் விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது குறித்து கவலைப்பட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக முக்கியமான ஸ்பேஸ் ஏஜென்சிக்களில் ஒன்றாக இஸ்ரோ இருக்கிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே இஸ்ரோ தனியார்மயம் ஆக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. பல்வேறு பணிகளில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
பெங்களூர் ஸ்பேஸ் எக்ஸ்போ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் அரசின் நடவடிக்கைகள் குறித்து இஸ்ரோ ஊழியர்களிடையே எழுந்துள்ள கவலைகளுக்கு விளக்கம் அளித்தார். இஸ்ரோவின் எதிர்காலம் குறித்து ஊழியர் சங்கங்கள் அதிகாரப்பூர்வ விளக்கம் கோரியுள்ளதாக கூறப்படும் நிலையில், நாராயணன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர், "விண்வெளி துறை சீர்திருத்தம் 6 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டது. அதன்படி தனியார் துறைக்கு உதவி செய்து, ஒட்டுமொத்த விண்வெளி துறை சூழலை வளர்ப்பதுதான் நமது பணி" என்றார். இந்தியாவின் விண்வெளி திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே முக்கிய பங்கு வகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ராக்கெட் தயாரிப்பிலும் நூற்றுக்கணக்கான இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே பங்களித்து வருவதாக அவர் கூறினார். அவர் மேலும், "ஒரு பிஎஸ்எல்வி அல்லது ஜிஎஸ்எல்வி விண்ணில் ஏவப்படும்போது, அதில் அனைத்து பணிகளையும் இஸ்ரோ மட்டுமே செய்கிறது என்று நினைக்க வேண்டாம். சுமார் 80 சதவீதம் இந்திய தொழில்துறையில் முதலீடு செய்யப்படுகிறது. சுமார் 450 நிறுவனங்கள் எங்களுக்காக பணியாற்றுகின்றன. அதாவது தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே மிக பெரியளவு பங்களித்தே வருகிறது" என்றார். இந்தியாவின் விண்வெளி தேவையை பூர்த்தி செய்ய ஏவுகணை ஏவுதிறனை கணிசமாக அதிகரிக்க வேண்டியிருப்பதாக நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சாட்டிலைட் தேவைகளை பூர்த்தி செய்ய இப்போதே ஆண்டுக்கு சுமார் 50 ராக்கெட்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்ட அவர், இந்த தேவையை பூர்த்தி செய்ய இஸ்ரோவுடன் இணைந்து தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் தேவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இஸ்ரோ தனியார்மயமாக்கப்படுவதாக வெளியாகும் கருத்துகளை நாராயணன் திட்டவட்டமாக மறுத்தார். இஸ்ரோவின் கொள்கை தொடர்பாக எழுத்துப்பூர்வமான விளக்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஓரிரு ஊழியர்கள் அல்லது குழுக்கள் கடிதம் அளித்ததற்காக மட்டும் அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ பதிலை வழங்குவது பொருத்தமாக இருக்காது என்றார். அவர் மேலும், "இஸ்ரோவில் நாங்கள் மொத்தம் 20,000 ஊழியர்கள் வேலை செய்து வருகிறோம்.. ஊழியர்களின் கவலைகளை நாங்கள் நிவர்த்தி செய்வோம். அதற்கு தேவையான நடவடிக்கையை சரியாக எடுப்போம்" என்றார். அதாவது விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பது, இஸ்ரோவின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காக அல்ல. மாறாக பணிகளை பகிரவே இதுபோல தனியார்மயமாக்கப்படுகிறது. அதாவது ராக்கெட் தயாரிப்பது உள்ளிட்ட வேலைகளை ஏற்கனவே தனியார் குறிப்பிடத்தக்க அளவு செய்யும் நிலையில், அது மேலும் அதிகரிக்கப்படும். இஸ்ரோ அந்த பணிகளில் இருந்து விலகி ஆய்வு பணிகளில் முழுமையான கவனத்தை செலுத்தும் என தெரிகிறது.இஸ்ரோ
தனியார் நிறுவனங்கள்
மறுப்பு
அடுத்து என்ன?