விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் இன்று கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மங்களூர் விமான நிலையத்தில் விஜய்யை, கர்நாடகா அமைச்சர் யுடி காதர் வரவேற்ற நிலையில் அவர் விஜய்யின் பெயரை கூட நினைவில் வைக்காமல் தவறாக கூறிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் 3 நாள் டெல்லி சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் விமான நிலையத்திற்கு சென்றார். உடுப்பி மாவட்டம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்வதற்காக விஜய் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

    Advertisement

    மங்களூர் விமான நிலையத்தில் கர்நாடகா அமைச்சர் யுடி காதர், விஜய்யை வரவேற்றார். விமான நிலையத்தில் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விஜய் காரில் ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பிறகு விமான நிலையத்தில் இருந்து விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டார்.

    கோவில் மரபுபடி சட்டையை கழற்றிவிட்டு சிவப்பு நிற சால்வையை உடல் மீது போர்த்தியபடி விஜய் சென்றார். 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட வெள்ளி வாள் ஒன்றை விஜய் காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்தார். விஜய்யை பார்க்க விமான நிலையம், கோவில் என்று அவரது ரசிகர்கள் ஏராளமாக திரண்டனர். அவர்களை பார்த்து விஜய் புன்னகைத்து கைகாண்பித்தும், கும்பிட்டபடியும் சென்றார்.

    Advertisement

    இந்நிலையில் தான் முதல்வர் விஜய்யை, மங்களூர் விமான நிலையத்தில் வரவேற்ற கர்நாடகா அமைச்சர் யுடி காதர் அவரது பெயரை தவறாக உச்சரித்துள்ளார். விஜய்யை வரவேற்றது பற்றி கர்நாடகா அமைச்சர் யுடி காதரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு யுடி காதர் முதலில் கன்னட மொழியில் பதிலளித்தார். பிறகு ஆங்கிலத்தில் பதில் வழங்கினார்.

    ஆங்கிலத்தில் யுடி காதர் பேசும்போது, ''கர்நாடகா அரசு, கர்நாடகா மக்கள், என்னுடைய கடலோர மாவட்ட (தட்சண கன்னடா, உடுப்பி) மக்கள் சார்பில் தமிழ்நாடு முதல்வரான மரியாதைக்குரிய விஜய குமாரை (முதல்வர் விஜய்) வரவேற்றேன். அவரை வரவேற்கிறேன். அவர் விருப்பமான நபராக உள்ளார். ப்ரண்ட்லியாக இருக்கிறார். கடலோர கர்நாடகா மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்'' என்றார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

    Advertisement

    விஜய்யின் முழு பெயர் ஜோசப் விஜய் ஆகும். இதனை அவர் கூறியிருக்கலாம். இல்லாவிட்டால் சாதாரணமாக விஜய் என்று அழைத்த இருக்கலாம். ஆனால் அவர் 'விஜய் குமார்' என்று கூறியுள்ளார். இதனால் தமிழக முதல்வர் விஜய் பெயர் கூட கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சியை (தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி) சேர்ந்த அமைச்சர் யுடி காதருக்கு தெரியவில்லையா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இன்னும் சிலரோ விஜய் நடித்த 'தெறி' திரைப்படத்தில் விஜய் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த கதாபாத்திரத்தின் பெயர் விஜயகுமார் ஆகும். இதனால் அந்த நினைவில் யுடி காதர் இப்படி தெரிவித்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    English Summary

    Karnataka Minsiter UT Khader reffered to th CM as Vijay Kumar instead of Vijay: Tamil Nadu Chief Minister Vijay visited the Kollur Mookambika Temple in Karnataka today to offer prayers. While Karnataka Minister U.T. Khader welcomed Vijay at the Mangaluru airport, a video has surfaced online showing the minister failing to recall Vijay's name and getting it wrong.