பெங்களூர்: கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் சார்பில் இன்று பந்த் நடத்தப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம் வழியாக கர்நாடகத்திற்கு இயக்கப்படும் 14 தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மைசூர், கொள்ளேகால், பெங்களூர் மற்றும் சாம்ராஜ்நகர் செல்லும் TNSTC பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்தைக் கண்டித்தும், காவிரியில் நீர் திறந்துவிடக் கூடாது என வலியுறுத்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தார்.
பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், ஆட்டோ, வாடகை கார், பேருந்துகள் ஆகியவை இயங்காது. அனைவரும் தாமாக முன்வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். எனது தலைமையில் இரு மாநில எல்லையான அத்திப்பள்ளியிலும், சுதந்திர பூங்காவிலும் போராட்டம் நடைபெறும். இதில் கன்னட ஆதரவாளர்கள், விவசாய அமைப்புகள் பங்கேற்க வேண்டும் என வாட்டாள் நாகராஜ் வேண்டுகோள் விடுத்திருந்தார். போராட்டத்தை கைவிடுமாறு கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் கோரிக்கை விடுத்தார். இதனை மீறி முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் அதற்கு மக்களின் ஆதரவு கிடைக்காது என டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இதையடுத்து, முன்னதாக பந்த்துக்கு ஆதரவு தெரிவித்த கன்னட ரக் ஷன வேதிகே, கர்நாடக தனியார் பள்ளி, கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆகியவை தங்களது முடிவை மாற்றி கொண்டுள்ளன. இதனால், இன்று நடைபெறும் பந்த் போராட்டத்தால் கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என தெரிகிறது. அதேசமயம், கர்நாடகா, தமிழ்நாடு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. எல்லைப் பகுதிகளில் மறியல் நடத்தப்படும் என்பதால், தமிழக அரசு பேருந்துகள் பல நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற வாகனங்கள் வழக்கம்போல சென்று வருகின்றன. கர்நாடகாவில் கன்னட அமைப்புகளின் பந்த் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம் வழியாக கர்நாடகத்திற்கு இயக்கப்படும் 14 தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மைசூர், கொள்ளேகால், பெங்களூர் மற்றும் சாம்ராஜ்நகர் செல்லும் TNSTC பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.