கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு மொத்தமாக தடை! சிவக்குமார் அரசு அதிரடி உத்தரவு

  • பெங்களூர்: கர்நாடகாவில் புகையிலை மற்றும் நிகோடின் கலந்த குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பான் மசாலா, குட்காவுக்கு தடை இருக்கும் நிலையில், இப்போது கர்நாடகாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    உடலுக்கு மிகவும் கெடு விளைவிக்கும் பொருட்களில் முக்கியமானது புகையிலை. இதை ஒருவர் எடுத்து கொள்ளும் போது நிச்சயம் கேன்சர் வரும். இதனால் புகையிலை பயன்பாட்டை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

    Advertisement

    ஏற்கனவே நமது தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2013ம் ஆண்டு குட்கா, பான் மசாலாவுக்கு தமிழகத்தில் முதலில் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக இந்த தடை நீட்டிக்கப்படுகிறது. இதற்கிடையே நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் இப்போது பான் மசாலா, குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் புகையிலை அல்லது நிகோடின் கலந்த குட்கா மற்றும் பான் மசாலாவை உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகிப்பது, கொண்டு செல்வது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த புதிய உத்தரவு குட்கா மற்றும் பான் மசாலாவை மட்டுமே கட்டுப்படுத்துவதில்லை. மாறாக புகையிலை அல்லது நிகோடின் சேர்க்கப்பட்டுள்ள பிற பொருட்களுக்கும் இந்த தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை எந்தவொரு பெயரிலும் சந்தையில் விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்தத் தடை பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் பேக்கிங் செய்யப்படாத பொருட்களுக்கும் பொருந்தும். நுகர்வோர் அவற்றை எளிதாக பயன்படுத்தும் வகையில் இருந்தாலும் அவை தடை செய்யப்பட்ட பொருட்களின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    குறிப்பாக புகையிலை மற்றும் நிகோடினை மூலப்பொருளாக கொண்ட குட்கா, பான் மசாலா ஆகியவை சாச்செட், பவுச், பாக்கெட், கன்டெய்னர் உள்ளிட்ட எந்த வடிவிலும் விற்கக்கூடாது என்பதை கர்நாடகா அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. புகையிலை மற்றும் நிகோடின் பயன்பாடு பொதுமக்கள் உடல்நிலையை மிக மோசமாக பாதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Karnataka bans tobacco and nicotine-containing gutka, pan masala and other related products for one year(கர்நாடகாவில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு ஓராண்டு தடை): Karnataka Bans Gutka for next one year.