58 நாட்கள் ஆச்சு.. அமைச்சரவை விரிவாக்கத்தில் டிகே சிவக்குமார் கப்சிப்.. காங்கிரஸ் திட்டம் தான் என்ன!

  • பெங்களூர்: கர்நாடக முதல்வராக டி.கே. சிவக்குமார் கடந்த ஜூன் 3ஆம் தேதி பதவியேற்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அவரது அமைச்சரவை இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் குறித்த பட்டியல் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படலாம் என்றும் புதிய அமைச்சர்கள் அடுத்த வார தொடக்கத்தில் பதவியேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளாக சித்தராமையா முதல்வராக இருந்தார். இருப்பினும், டி.கே. சிவக்குமாருக்கு முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என்று தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தச் சூழலில் தான் கடந்த ஜூன் மாதம் டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவியேற்றார். இருப்பினும், அவருடன் வெகு சில அமைச்சர்கள் மட்டுமே அப்போது பதவியேற்றனர்.

    Advertisement

    அமைச்சரவை விரிவாக்கம்

    அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் டி.கே. சிவக்குமார், துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா உள்ளிட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் அமைச்சரவை விரிவாக்கம், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த ஜூன் 3ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டி.கே.சிவக்குமாருடன் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா மற்றும் 12 அமைச்சர்கள் என மொத்தம் 14 பேர் மட்டுமே பதவியேற்றனர். விதிகளின்படி கர்நாடகாவில் முதல்வர் உள்பட 34 அமைச்சர்களாக இடம்பெறலாம். இப்போது 12 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், கூடுதலாக 20 அமைச்சர்களாக பதவியேற்கலாம்!

    Advertisement

    தாமதம் ஏன்?

    முதலில் பதவியேற்ற அமைச்சர்களுக்கு உடனடியாக இலாகா ஒதுக்கப்பட்டன. இருப்பினும், அதன் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, சாதி மற்றும் சமூக பிரதிநிதித்துவம், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய வாய்ப்பு தருவது என அனைத்தையும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    மேலும், டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா என இருவரின் ஆதரவாளர்களுக்கும் போதிய வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்தே அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.

    Advertisement

    விரிவாக்கம் எப்போது!

    பெரும்பாலும் இன்று ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் அமைச்சர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படும் என தெரிகிறது. தொடர்ந்து ஓரிரு நாடுகளில் பதவியேற்பு விழா நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி கர்நாடகாவில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே அமைச்சரவை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சிவக்குமார் தலைமையிலான அரசு, பதவியேற்று சுமார் 58 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை முழு அமைச்சரவை பதவியேற்கவில்லை. கர்நாடகாவில் இதுபோல முழு அமைச்சரவை இல்லாமல் இருந்த அரசுகளில் ஒன்றாக டிகே சிவக்குமார் அரசு மாறியிருக்கிறது.

    Advertisement

    இதர மாநிலங்கள்

    அதேநேரம் தேசியளவில் பார்க்கும்போது கடந்த 2018ல் தெலங்கானாவில் கேசிஆர் முதல்வராக பதவியேற்றபோது, அவரும் முகமது மஹ்மூத் அலியும் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர். சுமார் 68 நாட்களுக்குப் பிறகே மேலும் 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். மகாராஷ்டிராவிலும் இதேபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு சிவசேனா பிளவுக்கு பிறகு, ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய இருவர் மட்டும் பதவியேற்றனர். சுமார் 40 நாட்களுக்கு பிறகே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

    கர்நாடகாவிலும் கூட 2019ஆம் ஆண்டு பி.எஸ். எடியூரப்பா முதல்வராக பதவியேற்றபோது, 25 நாட்கள் அவர் ஒருவர் மட்டுமே அமைச்சரவையில் இருந்தார். அந்த காலகட்டத்தில் அவர் தனியாகவே அமைச்சரவை கூட்டங்களையும் நடத்தினார். அதன் பிறகே 17 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதேபோல் இமாச்சல பிரதேசம், புதுச்சேரி, பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோல பல வாரங்கள் அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Nearly two months after taking oath as Karnataka Chief Minister, DK Shivakumar is set to expand his cabinet(கர்நாடகாவில் சீக்கிரமே அமைச்சரவை விரிவாக்கம்): Karnataka Cabinet Expansion latest news in tamil.