டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி!

  • பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த சில மாதங்களாகவே புகைந்து வரும் 'சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்' இடையேயான மோதல், இப்போது உச்சக்கட்டத்தைத் தொட்டுள்ளது. இன்று டெல்லி இந்திரா பவனில் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் இறுதிக்கட்டப் பஞ்சாயத்தை எட்டியுள்ளது. இதனால் கர்நாடகாவில் சீக்கிரமே தலைமையில் மாற்றம் வரலாம் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த 2023ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இருப்பினும், அப்போது முதலே அங்கு முதல்வர் பதவியில் குழப்பம் இருந்தது. அப்போது டெல்லி தலைமை டி கே சிவக்குமாரை சமாதானப்படுத்தி துணை முதல்வர் பதவி கொடுத்தது. இருப்பினும், 2.5 ஆண்டுகளில் முதல்வர் பதவி தருவதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது..

    Advertisement

    கர்நாடகா

    ஆனால், 2.5 ஆண்டுகளுக்குப் பிறகும் முதல்வர் பதவி மாற்றப்படவில்லை. இதனால் அவ்வப்போது டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் இது தொடர்பாகப் போர்க்கொடி எழுப்புவார்கள். டெல்லிக்கும் சென்று முறையிடுவார்கள். ஆனால், இந்த முறை அதை தாண்டிவிட்டது. இம்முறை மோதல் வெறும் முதலமைச்சர் நாற்காலி யாருக்கு? என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டும் நிற்காமல், நீண்ட நாட்களாக இழுபறியில் இருக்கும் 'அமைச்சரவை மாற்றம்' மற்றும் இலாகாக்கள் ஒதுக்கீட்டை நோக்கி நகர்ந்துள்ளது கர்நாடக அரசியலை அதிரவைத்துள்ளது.

    அமைச்சரவை மாற்றியமைப்பை ஒரு அரசியல் ஸ்கோர்போர்டு போல டெல்லி மேலிடம் கையாள நினைக்கிறது. யாருடைய ஆதரவாளர்களுக்கு வெயிட் பார்ட்டி இலாகாக்கள் கிடைக்கிறதோ, அவரே கர்நாடக காங்கிரஸின் தற்போதைய பாஸ் என்பதுதான் டெல்லி கணக்கு. கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவரான டி.கே.சிவக்குமார் தரப்பு, வெறும் நம்பர்களை மட்டும் பார்க்காமல், அதிகாரம் கொண்ட போர்ட்ஃபோலியோக்களைக் கேட்கிறது

    Advertisement

    டிகே சிவக்குமார்

    குறிப்பாக, அரசியல் செல்வாக்கு மிக்க உள்துறை போன்ற பவர்ஃபுல் துறைகளைத் தங்களின் ஆதரவாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என டி.கே. சிவக்குமார் முகாம் ஒற்றைக் காலில் நிற்கிறது. 2019-ல் கட்சி உடைந்தபோது அடிமட்டத்திலிருந்து உழைத்து, 2023ல் ஒக்கலிகா சமூக வாக்குகளைத் திரட்டி வெற்றியைக் கொடுத்த தங்களுக்கு இந்த அங்கீகாரம் அத்தியாவசியம் என டெல்லி மேலிடத்திற்கு அவர்கள் பிரஷர் கொடுத்து வருகின்றனர்.

    சித்தராமையா

    மறுபுறம், முதலமைச்சர் சித்தராமையா தனது பிடியைக் கொஞ்சம் கூட தளர்த்தத் தயாராக இல்லை. முக்கிய இலாகாக்களைத் தன்னிடம் இருந்து பறித்தால், தனது லட்சியத் திட்டங்களான சமூக நல உள்கட்டமைப்புகள் மற்றும் 'அஹிந்தா' (பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தலித்) சமூகக் கூட்டணிக்கான திட்டங்கள் முடங்கி, நிர்வாகம் சீர்குலையும் என எச்சரிக்கிறார். மேலும், கர்நாடக அரசு மீது அதிருப்தி அலை இல்லாதபோது, இதுபோல மிகப் பெரிய அமைச்சரவை மாற்றம் நடந்தால் அது அரசு மீது தவறான பிம்பத்தை உருவாக்கிவிடும் என்பதையும் தலைமை கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார். இதையெல்லாம் கணக்கில் கொண்டு காங்கிரஸ் மேலிடம் 3 விஷயங்களை ஆலோசிக்கிறது.

    Advertisement

    ஃபார்முலா 1

    சித்தராமையாவே முதலமைச்சராக நீடிப்பார். ஆனால், டி.கே.சிவக்குமாருக்கு கூடுதல் பவர்ஃபுல் துறைகள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் முக்கியப் பிரதிநிதித்துவம் தரப்படும். ராஜ்யசபா தேர்தல் நெருங்குவதால், தற்காலிகமாக மோதலை ஒத்திவைக்க டெல்லி இந்த பார்முலாவை பின்பற்ற வாய்ப்பு அதிகம்.

    ஃபார்முலா 2

    ஒரு பெரிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவது. இதன்படி, சித்தராமையாவை ராஜ்யசபா எம்பி பதவியை கொடுத்துவிட்டு, கர்நாடக முதல்வர் நாற்காலியை டி.கே.சிவக்குமாரிடம் ஒப்படைப்படைப்பது பார்முலா 2.. அதன்படி ஒட்டுமொத்த அமைச்சரவையையும் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும்.

    ஃபார்முலா 3

    இரு தரப்பு மோதல்களையும் சமரசம் செய்யவே முடியாது என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கர்நாடகாவின் சமரசம் முகமாக முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பது. இது மாநிலத்தில் சமாதானத்தை ஏற்பட்டாலும் கூட டெல்லியில் ராகுல் காந்தியின் தேசிய காங்கிரஸ் கட்டமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.! எனவே, இதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

    English Summary

    Leadership rift between Karnataka CM Siddaramaiah and Deputy CM D.K. Shivakumar reached a crucial stage during a high-level meeting(கர்நாடக காங்கிரஸில் வெடித்த குழப்பம்): Karnataka Congress Crisis latest news in tamil.