பெங்களூர்: கர்நாடகாவில் சில பெட்ரோல் பங்குகளில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 31 சதவீதம் வரை எத்தனால் கலந்திருப்பதாக மாநில அரசு குற்றம்சாட்டிய நிலையில், அந்த குற்றச்சாட்டை எண்ணெய் நிறுவனங்கள் நிராகரித்துள்ளன. கர்நாடக அரசு மேற்கொண்ட சோதனைகள் முறையான நடைமுறைகளின்படி நடத்தப்படவில்லை என்றும் அந்த முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் E20 பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க அனுமதி உள்ளது. இதற்கு மக்கள் பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பழைய வாகனங்களில் E20 பெட்ரோலை பயன்படுத்தும்போது அவை பிரச்சினை ஏற்படுகிறது என்பதே பிரதான புகாராகும்.
இருப்பினும், இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என சொல்லும் மத்திய அரசு தொடர்ந்து E20 பெட்ரோலை ஊக்குவித்து வருகிறது. இதற்கிடையே கர்நாடகாவில் சில பெட்ரோல் பங்குகளில் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதாக மாநில அரசு புகார் தெரிவித்தது. குறிப்பாக, சில மாதிரிகளில் 31.2 சதவீதம் வரை எத்தனால் இருப்பது சோதனையில் குற்றஞ்சாட்டி இருந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத், "பெங்களூர், கோலார், சிக்கபள்ளாப்பூர், பெங்களூர் ரூரல், ராமநகரா, மங்களூர், துமகூரு ஆகிய மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அதில் சில பங்குகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எத்தனால் கலப்பு அதிகம் இருப்பதை கண்டறிந்தோம். இதன் அடிப்படையில் அதிகளவு எத்தனால் கலந்த பெட்ரோல் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இது தேசியளவில் பேசுபொருளான நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் கூட்டாக விளக்கமளித்துள்ளன. அதில் கர்நாடக அரசு மேற்கொண்ட சோதனைகளில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளன. கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தாங்கள் விநியோகிக்கும் E20 பெட்ரோல், இந்திய தர நிர்ணய அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டே இருப்பதாகவும் கூறியுள்ளன. மேலும் அந்த விளக்கத்தில், "பெட்ரோல் மாதிரிகளை சேகரிப்பது, பாதுகாப்பது, ஆய்வகத்துக்கு அனுப்புவது, முடிவுகளை தெரிவிப்பது ஆகியவற்றுக்கு 2005ம் ஆண்டு கட்டுப்பாட்டு உத்தரவு மற்றும் 2024-ம் ஆண்டு சந்தைப்படுத்தல் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களில் தெளிவான நடைமுறைகள் உள்ளன. இந்த விதிகளின்படி, ஒவ்வொரு சோதனைக்கும் தலா ஒரு லிட்டர் கொண்ட ஆறு மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும். அதில் இரண்டு மாதிரிகள் பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இரண்டு மாதிரிகள் எண்ணெய் நிறுவனம் அல்லது சம்பந்தப்பட்ட துறையிடம் வைக்கப்பட வேண்டும். மீதமுள்ள இரண்டு மாதிரிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்துக்கு அனுப்பப்பட வேண்டும். மாதிரிகளின் லேபிள்களில் இருதரப்பினரும் கையெழுத்திட வேண்டும். முடிவுகள் உரிய காலத்துக்குள் தெரிவிக்கப்பட வேண்டும். செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டன. ஆனால், அக்டோபர் மாத சோதனையில் எங்கள் நிறுவன பிரதிநிதிகள் இல்லாமல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும், அப்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகள் குறித்து முழுமையான அறிக்கையும் எங்களுக்கு வழங்கப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது சோதனை முறையாக நடத்தப்படவில்லை என்பதால் அந்த முடிவுகளை ஏற்க முடியாது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.அதிகளவு எத்தனால்
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்
விதிகள்
ஏற்க முடியாது