பெங்களூர்: கர்நாடகாவின் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறை அதிகாரிகளால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சிஐடி விசாரணையில் பல தடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. உடற்கூறாய்வு அறிக்கையில் துப்பாக்கிச்சூடு மிக அருகில் இருந்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தை பதிவு செய்த வீடியோவிலும் உயிரிழந்தவர்களிடம் ஆயுதம் இருந்ததாக கூறப்பட்டதற்கான ஆதாரம் தென்படவில்லை என சிஐடி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகாவின் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. தமிழர்கள் வனவிலங்குகளை வேட்டையாடியதால் துப்பாக்கி சூட்டை நடத்தியதாக கர்நாடக வனத்துறை கூறியது. இதில் 3 தமிழர்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
இதில் உயிரிழந்தவர்கள் அந்தோணி சுவாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (43), செபாஸ்டியன் டேவிட் குமார் (35) என அடையாளம் காணப்பட்டது. இந்த 3 பேரும் வன விலங்குகளை வேட்டையாட வந்தவர்கள் என்றும், அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததாகவும் கர்நாடக வனத்துறை கூறியது. மேலும், அவர்கள் தான் வனத்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை கூறியிருந்தது. ஆனால், உயிரிழந்தவர்களில் ஒருவரான அந்தோணி சுவாமியின் மனைவி லூர்து மேரி அளித்த புகாரில் வேறுவிதமான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது 4 பேரும் தொலைந்து போன கால்நடைகளை தேடுவதற்காக வனப்பகுதிக்குள் சென்றிருந்ததாகவும் நீண்ட நேரம் தேடிய பிறகு அங்கேயே தூங்கிவிட்டனர் எனவும் கூறியிருந்தார். அப்போது தான் வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக புகாரில் கூறப்பட்டது. நான்காவது நபரான ஜோசப் மகிமா தாஸ் என்ற பெஞ்சமின் (45) அங்கிருந்து தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி இந்த வழக்கை சிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டது. உயிரிழந்தோரின் உடற்கூறாய்வு அறிக்கைகள் தான் இந்த உத்தரவுக்கு முக்கிய காரணம். துப்பாக்கிச்சூடு மிக அருகில் இருந்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வனத்துறை கூறியதை போல உயிரிழந்தவர்கள் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியது போல தெரியவில்லை.. தரையில் படுத்திருந்தபோது சுடப்பட்டிருக்கலாம் என்றும் உடற்கூறாய்வு முடிவுகள் சுட்டிக்காட்டின. இதற்கிடையே செப்டம்பர் 10ம் தேதி ஹனூர் நீதிமன்றம் 3 வனத்துறை அதிகாரிகளுக்கும் முன்ஜாமீன் வழங்கியது. இந்த முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிஐடி மனு தாக்கல் செய்துள்ளது. செப்டம்பர் 24ம் தேதி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், செப்டம்பர் 30ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வனத்துறையை சேர்ந்த பீட் வன அதிகாரி சிவராஜா சசல்வாடாவுக்கு வழங்கப்பட்டிருந்ததாக சிஐடி தெரிவித்துள்ளது. அவருடன் வனத்துறை கண்காணிப்பாளர்கள் சிவலிங்க நாயகா மற்றும் கிரிஷா ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். உடற்கூறாய்வு அறிக்கையில் துப்பாக்கிச்சூடு மிக அருகில் இருந்து நடத்தப்பட்டதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சிஐடி சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சம்பவ இடத்தில் வனத்துறை பதிவு செய்த வீடியோவிலேயே கூட உயிரிழந்தவர்களிடம் ஆயுதம் காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து அகற்றப்பட்டதும், குற்றம் நடந்த இடம் பாதுகாக்கப்படாததும், அருகிலுள்ள காவல்துறைக்கு அதிகாரிகள் உடனடியாக தகவல் தெரிவிக்காததும் விதிமீறல்களை காட்டுவதாக சிஐடி கூறியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் அல்லது ஆபத்தை ஏற்படுத்தினார்கள் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் அப்படியிருக்கும்போது மிக அருகில் இருந்து 3 பேரை சுட்டுக்கொன்ற நடவடிக்கையை எப்படி நியாயப்படுத்த முடியும் என்றும் சிஐடி கேள்வி எழுப்பியுள்ளது. செபாஸ்டியன் டேவிட் குமாரின் உடலில் 2 துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. மார்பின் இடதுபுறத்தில் ஏற்பட்ட காயத்தில் தீக்காயம், முடி கருகியதற்கான தடயங்கள் இருந்ததாகவும், இது துப்பாக்கிச்சூடு மிக அருகில் இருந்து நடத்தப்பட்டதை காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்தோணி சுவாமியின் கீழ் விலா பகுதியில் வலதுபுறத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு காயமும் மிக அருகில் இருந்து ஏற்பட்டதாக உடற்கூறாய்வு அறிக்கை கூறியது. ஜான் ரோஸ் பீட்டரின் கழுத்துப் பகுதியில், காலர் எலும்புக்கு மேலே ஒரே ஒரு துப்பாக்கிச்சூடு காயம் இருந்தது. அந்த காயமும் மிக அருகில் இருந்து ஏற்பட்டதாகவும், துப்பாக்கி குண்டு மேலிருந்து பாய்ந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடற்கூறாய்வு முடிவுகள் மற்றும் சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகளின் விளக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருப்பதாக கூறியே சிஐடி முன்ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளது.தமிழர்கள் உயிரிழப்பு
சிஐடி விசாரணை
உடற்கூராய்வு அறிக்கை
துப்பாக்கி குண்டுகள்
ரத்து செய்ய வேண்டும்!