பெங்களூர்: பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் நந்தினி பால் விலை ரூ.8 வரை உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர கர்நாடகா அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். தமிழகத்தில் ஆவின் நிறுவனம் செயல்படுவது போல் கர்நாடகாவில் நந்தினி பால், கர்நாடகா அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நந்தினி பால் விலையை உயர்த்த இன்று கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் நந்தினி பால் ரூ.8 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா பத்திரிகையாளர்களிடம் உறுதிப்படுத்தினார். இதுபற்றி அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறுகையில், ''கர்நாடகாவில் நந்தினி பால் விலையை லிட்டருக்கு ரூ.8 வரை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த விலை உயர்வில் ரூ.7 கால்நடை வளர்ப்போருக்கும், ரூ.1 பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்திற்கும் செல்ல உள்ளது. கால்நடை வளர்ப்போர் தற்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அனைத்து எம்எல்ஏக்களும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர். லிட்டருக்கு பால் விலையை ரூ.10 வரை உயர்த்த வேண்டும் என்று கால்நடை வளர்ப்பு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்கள் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் தற்போது லிட்டருக்கு ரூ.8 வரை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு என்பது தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை. 2 முதல் 3 அமைச்சரவை கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு தற்போது எடுக்கப்பட்டுள்ளது. '' என்று கூறினார். அதன்படி ரூ.46க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த Basic Toned பால் இனி ரூ.54க்கு விற்பனையாக உள்ளது. இந்த விலை உயர்வால் கால்நடை வளர்ப்போர் ஹேப்பியாகி உள்ளனர். அதேவேளையில் பெங்களூர் ஹோட்டல் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்த்தும்படி கூறியிருந்தோம். ஆனால் லிட்டருக்கு ரூ.8 வரை உயர்த்தி உள்ளனர். இது ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக பால் விலை உயர்வால் டீ, காபியின் விலை மற்றும் பால் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என கவலை தெரிவித்துள்ளனர்.