‘ஹெட்லைட்' கிடையாது.. செல்போன் டார்ச் வெளிச்சத்தில் 90 கிமீ அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர்! ஷாக் வீடியோ

  • பெங்களூர்: கர்நாடகாவில் 'ஹெட்லைட்' எரியாததால் செல்போனில் டார்ச்லைட் வெளிச்சத்தில் 90 கிலோமீட்டர் தூரம் பயணிகளுடன் அரசு பஸ்சை டிரைவர் ஒருவர் ஓட்டி சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் பரவி வரும் நிலையில் பலரும் அரசு போக்குவரத்து கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    Advertisement

    நம் நாட்டில் அரசு பஸ்களை விட தனியார் பஸ்களின் கண்டிஷன் பல இடங்களில் மோசமாக உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததே இதற்கு முக்கிய காரணம். இதனால் தான் அரசு பஸ்கள் சேமதடைந்து மழை பெய்யும்போது பயணிகள் மீது தண்ணீர் கொட்டுவது, பாதி வழியில் பஸ்கள் 'பிரேக்டவுன்' ஆவது, டயர்கள் வெடிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

    Advertisement

    இந்த பிரச்சனையை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மாநில அரசால் இயக்கப்படும் அரசு பஸ்கள் எதிர்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது கர்நாடகாவில் பயணிகளின் உயிருக்கு உலைவைக்கும் வகையில் அரசு பஸ்சில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.

    கர்நாடகாவில் கல்யாண் கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து கழகம் என்பது வடகர்நாடகா மாவட்டங்களுக்கு தேவையான அரசு பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலம் கலபுரகியில் இருந்து சிஞ்சோலி பகுதிக்கு 'கல்யாண் கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம்' சார்பில் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் கடந்த 15 நாட்களாக 'ஹெட்லைட்' எரியவில்லை என்று கூறப்படுகிறது.

    Advertisement

    'ஹெட்லைட்' எரியாததால் இரவில் டிரைவர்கள் அந்த பஸ்சை ஓட்டுவதில் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. 'ஹெட்லைட்'டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யவில்லை. இந்நிலையில் தான் அந்த பஸ்சை டிரைவர் ஒருவர் செல்போன் டார்ச் லைட் உதவியுடன் ஓட்டி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

    'ஹெட்லைட்' இல்லாததால் அந்த டிரைவருக்கு ரோடு சரியாக தெரியவில்லை. இதனால் அவர் கண்டக்டரை முன்பக்க இருக்கைக்கு அழைத்து செல்போனில் டார்ச் லைட்டை அடிக்க சொல்லி 90 கிலோமீட்டர் தூரம் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டர் மட்டுமின்றி பஸ்சில் பயணித்த பயணிகளும் தங்களின் பாதுகாப்பான பயணத்திற்காக டிரைவர் இருக்கை அருகே சென்று செல்போன் டார்ச்லைட்டை 'ஆன்' செய்து வழிகாட்டி உள்ளனர்.

    Advertisement

    இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் கர்நாடகா அரசின் போக்குவரத்து கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    ''ஹெட்லைட் இல்லாமல் பஸ்சை எப்படி இரவு நேரத்தில் இயக்க முடியும்?. செல்போன் டார்ச்லைட்டில் இருந்து போதிய வெளிச்சம் கிடைக்காது. இது விபத்துக்கு வழிவகுக்கும். .உடனடியாக பஸ்சின் ஹெட்லைட்டை மாற்றம் செய்து வழங்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டிய போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கொந்தளித்துள்ளனர்.

    English Summary

    Karnataka government bus Using Mobile Torch Light: In Karnataka where a bus driver drove a government bus carrying passengers for a distance of 90 kilometers using the light from a mobile phone's torch, as the vehicle's headlights were not working. Videos of the incident are currently circulating online, drawing severe criticism from many against the state transport corporation.