பெங்களூர்: தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகா காவிரியில் திறந்து விட்டது. தற்போது கர்நாடகாவில் உள்ள கபினி, ஹாரங்கி அணைகள் முழுவதுமாக நிரம்பி விட்டன. கேஆர்எஸ் அணை வேகமாக 100 அடியை நெருங்கி வரும் நிலையில் தான் கர்நாடகாவில் இருந்து இன்று அதிகளவில் தண்ணீர் திறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த 29ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க மறுத்து உத்தரவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தது. இதனால் தமிழக அரசு சார்பில் நாளை உச்சநீதிமன்றத்தை நாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் கர்நாடகாவில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கர்நாடகாவை எடுத்து கொண்டால் காவிரி நீர் ஆதாரமாக மொத்தம் 4 அணைகள் உள்ளன. அந்த அணைகளின் பெயர்கள் ஹாரங்கி, ஹேமாவதி, கேஆர்எஸ் மற்றும் கபினி உள்ளிட்டவையாகும். இதில் ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் கேஆர்எஸ் அணைக்கு தண்ணீரை வழங்கும் அணைகளாக உள்ளன. அதேவேளையில் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து மட்டுமே தமிழகத்துக்கு நேரடியாக காவிரியில் தண்ணீர் திறக்க முடியும். இப்படியான சூழலில் தான் தற்போது அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதில் கபினி அணை தற்போது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக கேரளாவின் வயநாடு உள்ளது. தற்போது வயநாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கபினி அணைக்கான நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கபினி அணையின் மொத்த உயரம்(கடல் மட்டத்தில் இருந்து) 2,284 அடியாகும். இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,281 அடியாக உள்ளது. கபினி அணைக்கு உள்ளே தற்போது வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் அங்கிருந்து தமிழகத்துக்கு காவிரியில் 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த அணையின் பாதுகாப்பு கருதி இன்று அதிகப்படியான நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு இன்று அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் ஹாரங்கி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடியாகும். நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,857.83 அடியை எட்டி உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 9,867 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 20,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் அப்படியே கேஆர்எஸ் அணைக்கு (தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கும் அணை) வருகிறது. ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2922 அடியாகும். தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 2,910 அடியை எட்டி உள்ளது. இன்னும் 13 அடி மட்டுமே பாக்கி உள்ளது. இந்த அணையில் இருந்தும் உபரி நீர் கேஆர்எஸ் அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால் கேஆர்எஸ் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 124.80 அடியாகும். இந்தஅணையின் நீர்மட்டம் நேற்று இரவு 95.57 அடியாக இருந்தது. கேஆர்எஸ் அணைக்கு உள்ளே வினாடிக்கு 20,438 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் வெளியே 1,768 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று அல்லது நாளை கேஆர்எஸ் அணை 100 அடியை எட்ட வா்ப்புள்ளது. இதனால் கேஆர்எஸ் அணைக்கு திறந்து விடப்படுகிறது. தற்போது கேஆர்எஸ் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிநீர் உள்ளே வரும் நிலையில் 500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் இன்று தமிழகத்துக்கான தண்ணீர் திறப்பு அதிகரிக்கலாம். இதனால் காவிரி கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.