கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்

  • பெங்களூர்: இந்தியாவில் சட்டங்கள் அதன் கூர்மையை இழந்துவிட்டனவா? குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி மிக எளிதாகத் தப்பித்துவிடுகிறார்களா? இந்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை கிளப்பியிருக்கிறது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மிக முக்கியமான கருத்து. சட்டத்தை மீறுபவர்களுக்கு மத்தியக் கிழக்கு நாடுகளைப் போல கை, கால்களை வெட்டும் தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே அவர்கள் சட்டத்திற்குப் பயப்படுவார்கள் என நீதிபதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    Advertisement

    பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய மணிப்பால் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் ஜாமீன் மனுவை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். நடராஜ் சில முக்கியமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது வளைகுடா நாடுகளைப் போல கை, கால்களை வெட்டுவது போலத் தண்டனை கடுமையாக இருந்தால் மட்டுமே பயம் வரும் என நீதிபதி குறிப்பிட்டார்.

    Advertisement

    கேடயம்

    ஜனநாயக நாட்டில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைச் சட்டத்தை மீறுவதற்கு ஒரு கேடயமாக மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும், "குற்றங்கள் சாதாரணமாகவும், அன்றாட நிகழ்வு போலவும் தற்போது நடக்கத் தொடங்கியுள்ளன. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படாததே இதற்கு முக்கியக் காரணம். ஜனநாயக அமைப்பில் ஒவ்வொருவருக்கும் உரிமைகள் உண்டு. ஆனால், அந்த உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் அதிகமாகும்போது, சட்டத்தின் பிடி தளர்ந்துவிடுகிறது.

    கை, கால்களை வெட்ட வேண்டும்

    மத்திய கிழக்கு நாடுகளில் பின்பற்றப்படும் கடுமையான தண்டனை முறைகளைப் போன்ற சட்டங்கள் இங்கே இருந்தால் மட்டுமே, மக்கள் சட்டத்தை மதித்து நடப்பார்கள். கை அல்லது கால்களை வெட்டும் தண்டனை வழங்கப்பட்டால், அதன் தீவிரத்தை உணர்ந்து யாரும் தவறு செய்யத் துணிய மாட்டார்கள்" என்றார்.

    Advertisement

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 23 வயது இளைஞர் கோபி ரெட்டி கார்த்திக் ரெட்டி, கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவர் மேலும், "உப்பை தின்றால் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அவர் இன்னும் சில நாட்கள் சிறையில் இருக்கட்டும், அப்போதுதான் சட்டத்தின் அருமை புரியும்" என நீதிபதி குறிப்பிட்டார்.

    வாதம்

    முன்னதாக வழக்கு விசாரணையின்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அயந்திகா மண்டல், "குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் இருந்துவிட்டார். உண்மையில் எந்தக் குற்றமும் நடக்கவில்லை. மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்திற்காக இப்போது சிறையில் அடைப்பது மாணவரின் எதிர்காலத்தைப் பாதிக்கும்" என்றும் கூறினார்.

    Advertisement

    இருப்பினும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாணவி பெரும் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், அதற்காக மணிப்பால் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்தது. பெங்களூரில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தை அணுகிய பிறகே அவர் முறைப்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண்ணின் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இதுபோன்ற குற்றங்கள் பெருகி வருவது கவலையளிப்பதாகக் கூறி ஜாமீன் மனு மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    விசாரணை

    குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணை ஜூன் 8ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜாமீன் மனு தொடர்பாக கர்நாடக அரசு பதிலளிக்கும் எனத் தெரிகிறது.

    English Summary

    Karnataka High Court strongly criticized repeat offenders and rejected the bail plea of a 23-year-old student accused in a Manipal assault case (பாலியல் வழக்கில் தண்டனைகள் கடுமையாக்க நீதிமன்றம் உத்தரவு): Middle-East Style Punishment in India.