பெங்களூர்: உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கும் வகையில், கர்நாடக அரசு புதிய QR கோட் புகார் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோட்டல்கள் மட்டுமின்றி, விடுதிகள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே கேன்டீன்கள், விமானங்களில் வழங்கப்படும் உணவு என எங்கு உணவு சரியில்லை என்றாலும் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாகவே பல்வேறு இடங்களிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறார்கள். முறையாக அல்லது விதிகளை மீறி பராமரிக்கப்படும் உணவுகளை கைப்பற்றி அழித்து வருகிறார்கள். அதன்படி கர்நாடகாவிலும் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பல நட்சத்திர உணவகங்களும் கூட முறையாக பராமரிக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வுகளுக்கு பின்னர், உணவு துறை அமைச்சர் யு.டி. காதர் அதிகாரிகளை பாராட்டினார். மேலும், அவர் வேறு சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உணவு பாதுகாப்பு விதிமீறல்கள் எதாவது இருந்தால் அதை எளிதாக தெரிவிக்கும் வகையில் QR கோட் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இந்த QR கோட் ஹோட்டல்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்படுவதுடன், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் எளிதாகப் பொதுமக்கள் புகாரளிக்கலாம். இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், "இப்போது பொதுமக்கள் புகாரளிக்கும் நடைமுறை குழப்பமாக இருக்கிறது.. மேலும், எல்லா இடங்களிலும் நாங்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய முடியாது. எனவே QR கோட்டை உருவாக்கியுள்ளோம். உணவு பாதுகாப்பு அல்லது மருந்து தொடர்பான விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் இதன் மூலம் புகார் அளிக்கலாம். இதுபோன்ற நடைமுறையை அறிமுகப்படுத்தும் முதல் மாநிலம் கர்நாடகா. மேலும், விரைவில் கட்டணமில்லா தொலைப்பேசி எண் மற்றும் தனி கால் சென்டரும் இதற்காக அமைக்கப்படும். எந்த பகுதியில் இருந்தும் புகார் வந்தால், அதற்காக அமைக்கப்படும் குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்" என்றார். மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 63 மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், 8 உணவு சேமிப்பு இடங்கள், 4 சர்வதேச உணவகங்கள், 30 உணவு வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். உணவகங்கள் மட்டுமின்றி பப்கள், ஜெப்டோ உள்ளிட்ட டெலிவரி நிறுவனங்களின் டார்க் ஸ்டோர்களும் ஆய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார். விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும் கடுமையான விதிமீறல்கள் இருந்த சில நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "இந்த ஆய்வுகளின் நோக்கம் நிறுவனங்களை துன்புறுத்துவதோ, அவர்களின் தொழிலை மூடுவதோ அல்லது தண்டிப்பதோ அல்ல. முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் என்ன தவறு செய்கின்றன என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அரசின் நோக்கம். அதேநேரம் பொதுமக்களும் உணவு பாதுகாப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆய்வுகளின்போது பல்வேறு உணவு பொருட்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கைகள் இனி மாநிலம் முழுக்க நடத்தப்படும். பிஜியிலும் தரமான உணவுகள் வழங்கப்பட வேண்டும். அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை உங்கள் சொந்த குழந்தைகளை போல நடத்துங்கள். உங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் உணவு மற்றும் பராமரிப்பை அவர்களுக்கும் வழங்க தயாராக இருந்தால் மட்டுமே பிஜி நடத்துங்கள். இல்லையெனில் நடத்த வேண்டாம். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் துயரத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க யாருக்கும் உரிமை இல்லை. பிஜி மற்றும் ஹாஸ்டல்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஹாஸ்டல்கள் மட்டுமின்றி, தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களிலும் உணவு பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்படும். மேலும், பேருந்து நிலையங்களில் உள்ள உணவகங்கள், கேட்டரிங் மையங்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கான கேட்டரிங் நிறுவனங்கள் ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இது மட்டுமின்றி, ரயில்வே கேன்டீன்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவையும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானங்களில் வழங்கப்படும் உணவையும் பரிசோதிக்க திட்டமிட்டுள்ளோம். உணவு தயாரிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலும் உரிய விதிகள் பின்பற்றப்பட வேண்டும்" என்றார்.புகாரளிக்கலாம்
கால் சென்டர்
எதற்காக இந்த ஆய்வு
ஆய்வுகள் தொடரும்!