பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்க இருக்கிறார். அவரது பதவியேற்பு விழா சிம்பிளாக நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் நீண்ட இழுபறிக்கு பின்னர் சித்தராமையா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதனையடுத்து டி.கே.சிவகுமார் பதவியேற்க ரெடியாகி வருகிறார். ஆனால் அவரது பதவியேற்பு விழா சிம்பிளாக நடக்க இருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
கர்நாடக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.கே. சிவகுமார், ஜூன் 3-ம் தேதி மாலை 4:05 மணிக்கு பெங்களூருவில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். பொதுவாக இத்தகைய பிரம்மாண்ட அரசியல் பதவியேற்பு விழாக்கள் விதான் சவுதா மைதானத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடத்தப்படும். ஆனால், இந்த முறை இவ்விழா மிகவும் எளிய முறையில் நடைபெறும் என டி.கே. சிவகுமார் அறிவித்துள்ளார். பதவியேற்பு விழா நடைபெறும் ஜூன் 3 ஒரு வேலை நாள் என்பதால், பெங்களூரு நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ் தொண்டர்களை அழைத்து வர ஏற்கனவே 17,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த நகரமும் ஸ்தம்பிக்கக்கூடும் என காவல் துறை அச்சம் தெரிவித்தது. எனவே பொதுமக்களுக்கும், அலுவலகம் செல்வபவர்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தி எளிய முறையில் லோக் பவனில் விழாவை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த எளிய விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஐபிக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் யாரும் பெங்களூரு நோக்கி வந்து கூட்ட நெரிசலை உண்டாக்க வேண்டாம் என மாநில காங்கிரஸ் கமிட்டி கேட்டுக்கொண்டுள்ளது. நேரில் வர முடியாத தொண்டர்களுக்காக, இந்த முழு பதவியேற்பு விழாவும் மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நேரலை செய்யப்பட உள்ளது. டி.கே. சிவகுமாருடன் சேர்ந்து எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்ற கேள்விக்கு, அனைத்து முடிவுகளையும் காங்கிரஸ் மேலிடமே முடிவு செய்யும் என அவர் பதிலளித்துள்ளார். இருப்பினும், முதற்கட்டமாக 8 முதல் 10 முக்கிய அமைச்சர்கள் அவருடன் இணைந்து பதவியேற்கக் கூடும் என்றும், மீதமுள்ள அமைச்சர்கள் ஜூன் 18-ல் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலுக்குப் பிறகு பதவியேற்பார்கள் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.