பெங்களூர்: கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஹெச்.ஐ.வி பரிசோதனை மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளில் பயிலும் 7,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஹெச்ஐவி (HIV) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட 7000க்கும் மேற்பட்டவர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தி நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடகா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களில் கிட்டத்தட்ட 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த நோய் தொற்று இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு, கர்நாடகா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹெச்ஐவி பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் சுமார் 2,60,000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2,05,000 பேர் மட்டுமே இதற்கான உரிய சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். சுமார் 54,000 பேருக்கும் மேல் எய்ட்ஸ் நோய் பாதிப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே தெரியாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் இளம் வயதினருக்கு ஹெச்ஐவி தொற்று அதிகம் பரவி வருவது மாநில அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த நோய் தொற்று பரவலைத் தடுத்து தொடக்கத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகள் அளிக்கும் நோக்கில் மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளிலும் ஹெச்.ஐ.வி பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்து மேலும் நோய் தொற்று அதிகரிக்காமல் இருக்க விழிப்புணர்வு முகாம்களையும் அரசு நடத்துகிறது. அதேநேரம், ஹெச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் தனியுரிமை மற்றும் உரிமைகளுக்கு முழு மதிப்பளிக்கும் வகையிலும் , தனிநபர் அனுமதியின்றி எந்த ஒரு பரிசோதனையும் செய்யப்படாது என்றும் அரசு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.