மேகதாது அணைக்கு அடுத்தாண்டு அடிக்கல் நாட்டுவோம்.. சர்ச்சையை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!

  • பெங்களூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட கர்நாடகா இதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மேகதாது திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என்று அம்மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் என். சலுவராயசாமி கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    Advertisement

    கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றுக்கு குறுக்கே அணை அமைக்க கர்நாடகா அரசு தீவிரமாக முயன்று வருகிறது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரும் நீர் முழுமையாக தடுத்து நிறுத்தப்படும் இதனால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழ்நாடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    Advertisement

    மேகதாது அணை

    இருப்பினும், கர்நாடகாவில் உள்ள டிகே சிவக்குமார் அரசு மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி கர்நாடகா இந்த பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே மாண்டியாவில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சலுவராயசாமி, கர்நாடகத்தின் நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டார்.

    கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், நீர்ப்பாசன அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே மேகதாது திட்ட பணிகளை வேகப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக சலுவராயசாமி கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மீண்டும் மத்திய அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளோம்.

    Advertisement

    அடிக்கல் நாட்ட திட்டம்

    அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மேகதாது அணை திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்திற்கு தேவையான சுமார் 12,500 ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக, கிட்டத்தட்ட 20,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. வனப்பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதற்கு மாற்றாக பொருத்தமான நிலங்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம். மேகதாது திட்டம் காவிரி நீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும். திட்டத்திற்கான தொழில்நுட்ப மற்றும் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மத்திய அரசுடன் தினசரி ஒருங்கிணைப்பதற்காக இரண்டு நீர்ப்பாசன துறை அதிகாரிகள் டெல்லியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்" என்றார்.

    Advertisement

    காவிரி நீர்

    இதற்கிடையே கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதாக வெளியான தகவல்கள் குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்தார். அது தொடர்பாக அவர், "கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழகத்திற்கு ஜூன் மாதம் முதலே தண்ணீர் திறக்க வேண்டிய நிலை இருந்தபோதிலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை" என்றார். மேலும், இப்போது நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்றும், இது தொடர்பாக தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    Advertisement

    நீர் கிடைக்கும்

    கர்நாடகாவில் ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய சலுவராயசாமி, ஆகஸ்ட் இறுதி வரை மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அவர் மேலும், "செப்டம்பர் மாதத்திற்குள் கே.ஆர்.எஸ். அணைக்கு போதுமான நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 20 நாட்களாக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து ஏரிகள் மற்றும் நெற்பயிர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், ஹேமாவதி அணையில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கவும் உத்தரவிட்டுள்ளோம். குறுகிய கால பயிர்களுக்கு தண்ணீர் வழங்குவது குறித்து புதன்கிழமை முடிவு எடுக்கப்படும். மேலும், மாண்டியாவில் வேளாண் கல்லூரி மற்றும் பால் பண்ணை கல்லூரி. மாநிலத்தின் முதல் பால் பண்ணை கல்லூரி மாண்டியாவில் உள்ள சுத்தூர் பகுதியில் அமைக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.

    English Summary

    Karnataka Irrigation Minister N. Cheluvarayaswamy says the state plans to lay the foundation stone for the Mekedatu Dam project by August 2027(மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடகா அரசு): Karnataka Plans for Mekedatu Dam latest news in tamil.