விஜய் ஒழிக.. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது

  • பெங்களூர்: தமிழக முதல்வர் விஜய் இன்று கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 2 அடி நீளம் வாள் காணிக்கை செலுத்தினார். இந்த வேளையில் விஜய்க்கு எதிராக கர்நாடகா ரக்‌ஷண வேதிகே அமைப்பினர் திரண்டு வந்து போராட்டம் நடத்தி, 'விஜய் ஒழிக' என்று கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் 3 நாள் டெல்லி சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் விமான நிலையத்திற்கு சென்றார். உடுப்பி மாவட்டம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்வதற்காக விஜய் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

    Advertisement

    கர்நாடகா அரசு சார்பில் அமைச்சர் யுடி காதர், விஜய்யை வரவேற்றார். விமான நிலையத்தில் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விஜய் காரில் ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பிறகு விமான நிலையத்தில் இருந்து விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டார்.

    கோவில் மரபுபடி சட்டையை கழற்றிவிட்டு சிவப்பு நிற சால்வையை உடல் மீது போர்த்தியபடி விஜய் சென்றார். 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட வெள்ளி வாள் ஒன்றை விஜய் காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்தார். விஜய்யை பார்க்க விமான நிலையம், கோவில் என்று அவரது ரசிகர்கள் ஏராளமாக திரண்டனர். அவர்களை பார்த்து விஜய் புன்னகைத்து கைகாண்பித்தும், கும்பிட்டபடியும் சென்றார்.

    Advertisement

    இந்நிலையில் தான் விஜய்க்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கேஆர்வி எனும் கர்நாடகா ரக்‌ஷண வேதிகே அமைப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் உடுப்பி மாவட்டம் உதயவார் அருகே பாலைபட் என்ற இடத்தில் திரண்டு நின்று விஜய்க்கு கருப்பு கொடி காட்ட தயாராகினர். மேலும் விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்த பிளான் வைத்திருந்தனர்.

    இந்த சமயத்தில் அவர்கள் கையில் கருப்பு கொடி வைத்து,''காவிரி எங்களுடையது. மேகதாது எங்களுடையது. கன்னட விரோதி விஜய் ஒழிக ஒழிக'' என்று கோஷமிட்டனர் இதுபற்றி அறிந்த போலீசார் உடனடியாக அவர்களை கலைந்து செல்ல கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விஜய்க்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

    Advertisement

    கர்நாடகா ரக்‌ஷண வேதிகே அமைப்பினரின் இந்த எதிர்ப்புக்கு பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது காவிரி ஆற்றுக்கு குறுக்கே கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட தயாராகி வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. விவசாய அமைப்பினர், அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி கர்நாடகா அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் விஜய்யும் மேகதாது அணைக்கு எதிராக உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசியுள்ளார். கர்நாடகா அரசு அணை கட்டும் முயற்சிக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    இந்நிலையில் தான் விஜய் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றபோது கர்நாடகா ரக்‌ஷண வேதிகே அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்களை முன்கூட்டியே போலீசார் கைது செய்தததால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை.

    English Summary

    Karnataka Rakshana Vedike Protest against CM Vijay: Tamil Nadu Chief Minister Vijay visited the Kollur Mookambika Temple in the Udupi district of Karnataka today to offer prayers and presented a two-foot-long sword as an offering. A major stir was caused when members of the Karnataka Rakshana Vedike gathered to protest against him, shouting slogans such as "Down with Vijay."