‘பார்ச்சூனர்' காரில் வேலைக்கு வரும் தூய்மை பணியாளர்.. பின்னணியில் சுவாரசிய மேட்டர்

  • பெங்களூர்: கர்நாடகவில் தூய்மை பணியாளர் ஒருவர் 'டொயோட்டா பார்ச்சூனர்' காரில் வந்து தூய்மை பணிகளை செய்து வரும் போட்டோ, வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. யார் இந்த தூய்மை பணியாளர்? எப்படி 'பார்ச்சூனர்' காரில் வந்து இறங்குகிறார்? என்று பலரும் கேள்வி கேட்கும் நிலையில் அவரது பின்னணி குறித்த சுவராசிய தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா நாவூரை சேர்ந்தவர் சேசப்பா என்ற சேசப்பன்னா (வயது 55). இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் பண்ட்வால் நகரசபையில் கடந்த 1996-ம் ஆண்டு தூய்மை பணியாளராக சேர்ந்தார். அவர் தினக்கூலி அடிப்படையில் பணியில் இணைந்தார்.

    Advertisement

    தினமும் சேசப்பாவுக்கு ரூ.50 தினக்கூலியாக வழங்கப்பட்டது. அதனை வைத்து சேப்பாக மதுபானம் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டார். ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையானார். சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

    இதனால் அவரது குடும்பம் பிரச்சனையை எதிர்கொண்டது. இந்நிலையில் தான் கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு அவர் திருந்தி வாழ முடிவு செய்தார். மதுபழக்கத்தை கைவிட நினைத்தார். அப்போதைய பண்ட்வால் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த பெல்லியப்பா அறிவுரையின்படி சேசப்பா தனதுகுடிப்பழக்கத்தை கைவிட்டார்.

    அதன்பிறகு அவர் தினமும் தூய்மை பணியாளராக பணியாற்ற தொடங்கினார். அதிகாலை 5 மணிக்கே பண்ட்வாலில் உள்ள பி.சி.ரோட்டுக்கு வரும் சேசப்பா, மதியம் 12 மணி வரை நகரின் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதை வழக்கமாக்கி கொண்டார். இதனால் அவர் பணி நிரந்தரம் செய்யப்பட்டார். தூய்மை பணியாளர் மட்டுமின்றி கால்நடை மேய்ச்சல், வீட்டின் அருகே பஞ்சாயத்துக்காக தண்ணீர் வினியோகம் செய்யும் வேலையும் செய்து வந்தார்.

    Advertisement

    அவருக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதற்காக பணம் சேமித்து முதலில் மாருதி 800 காரை வாங்கினார். அதனை தொடர்ந்து மாருதி ஓம்னி, ஸ்விப்ட், ஆல்டோ மற்றும் ஸ்கார்பியோ ஆகிய கார்களையும் அடுத்தடுத்து வாங்கினார். தற்போது அவர் 2013 மாடல் 'டொயோட்டா பார்ச்சூனர்' சொகுசு காரை வாங்கியுள்ளார். தற்போது சேப்பா 'பார்ச்சூனர்' சொகுசு காரில் தூய்மை பணிக்கு வந்து செல்கிறார்.

    சேசப்பா, பார்ச்சூனர் காரில் வந்து தூய்மை பணி செய்வது தொடர்பான போட்டோ, வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

    English Summary

    Photos and videos of a sanitation worker in Karnataka arriving in a ‘Toyota Fortuner' to carry out cleaning duties have surfaced online and garnered significant attention. Amidst the curiosity regarding who this worker is and how he arrives in a ‘Fortuner,' interesting details about his background have come to light.