மேகதாது அணை! விடாபிடியாக நிற்கும் டி.கே.சிவகுமார்! எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழகத்திற்கு வராரோ!

  • பெங்களூர்: மேகதாதுவில் அணை கட்டியே தீர்வது என கர்நாடக அரசு விடாப்பிடியாக நிற்கிறது. அணைக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கெனவே சமர்ப்பித்திருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டிருந்தது. தற்போது திருத்தப்பட்ட அறிக்கையை மாநில அரசு மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறது.

    Advertisement

    தாக்கல் செய்த கையோடு, தென் மாநில முதல்வர்களின் மாநாட்டில் பங்கேற்க கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தமிழ்நாட்டிற்கு வருகிறார். தமிழகத்திற்கு தண்ணீர் தராமல், அணையை கட்ட முயற்சிகளை மேற்கொண்டு.. எந்த முகத்தை வைத்துக்கொண்டு சிவகுமார் தமிழகத்திற்கு வருகிறார்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.

    Advertisement

    தமிழ்நாட்டின் மரபும் கர்நாடகாவும்

    ஈராயிரம் ஆண்டுகளாக டெல்டாவில் விவசாயம் செய்த மரபு நம்முடையது. சோறுடைத்த பூமி என்று பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் இன்று வறண்டு போயிருக்கின்றன. நூற்றாண்டுக்கு முன்பு காவிரியின் கிளை ஆற்றில் 4 அணைகளை கட்டி.. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகா தடுத்து, 2000 கால தமிழ் மரபை காலி செய்திருக்கிறது. கர்நாடகா அணை கட்டியதிலிருந்து.. காவிரி நீருக்காக ஒவ்வொரு ஆண்டும் நாம் சண்டை செய்து வருகிறோம்.

    காவிரி நீர்

    இந்த பிரச்சனையை தீர்க்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் ஒழுங்காற்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்களிடம் தமிழக அரசு முறையிட.. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு நீண்ட நாட்களுக்கு பின்பற்றப்படாமல் இருக்க.. தற்போதுதான் வேறு வழியின்றி தண்ணீரை திறந்துவிட்டிருக்கிறது. இந்த தண்ணீரும் தமிழகத்திற்கு போதுமானதாக இல்லை.

    Advertisement

    மேகதாது அணை

    இந்த பஞ்சாயத்து ஒருபுறம் இருக்கையில்.. மறுபுறம் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதற்கான திட்ட அறிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தது. அறிக்கையை பரிசீலித்த மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் அதை ரத்து செய்தது. உண்மைக்கு புறம்பான தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறி ரத்து செய்திருந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்திருக்கிறது.

    தீவிரம் காட்டும் கர்நாடகா

    இதன் மூலம், மேகதாது குடிநீர் மற்றும் மின்சாரத் திட்டத்தை மிக விரைவாக செயல்படுத்த மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நேற்று டி.கே.சிவகுமார் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அதில் நீர்வளத்துறை அமைச்சர் என். செல்லுவராயசாமி மற்றும் வனத்துறை செயலாளர், நீர்வளத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இதில் மேகதாது அணையின் தற்போதைய நிலை, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    வேகம் பெறும் திட்டம்

    திட்டத்திற்கு தேவையான வனத்துறையினரின் அனுமதி பெறும் நடைமுறைகளை தாமதமின்றி நிறைவு செய்ய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அணை கட்டும் பகுதியில் அகற்றப்பட வேண்டிய மரங்கள் தொடர்பாக விதிகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மாற்று நிலம் ஒதுக்கப்படுவது, புதிய மரக்கன்றுகளை விதிமுறைகளின்படி நட்டு வளர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

    இவ்வளவையும் பண்ணிட்டு.. தமிழகத்தை வறட்சியாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ.. அனைத்தையும் செய்துவிட்டு எப்படித்தான் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க டி.கே.சிவகுமார் தமிழகம் வருகிறாரோ? என்று விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.

    English Summary

    Mekedatu Dam: The Karnataka government remains adamant about constructing a dam at Mekedatu. Although the project report for the dam had previously been submitted to the Central Government, it was rejected; the state government has now submitted a revised report to the Central Water Commission.