பெங்களூர்: காங்கிரஸ் தனது கூட்டங்களில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடி வந்தது. இப்படி இருக்கையில் முழு பாடலையும் பாட வேண்டும் என்று பாஜக கூற தொடங்கியிருக்கிறது. ஆனால் அப்படியெல்லாம் பாட முடியாது என்றும், முதலிரண்டு சரணங்களை மட்டுமே பாட முடியும் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் குறித்த முக்கிய மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்படி தேசிய கீதத்திற்கு இணையாக வந்தே மாதரம் பாடலுக்கும் சட்டப்பூர்வ அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த பாடலை அவமதிப்பது குற்றமாகும். ஆனால், பாடலின் முழு சரணங்களையும் கட்டாயமாக பாட வேண்டும் என்று கிடையாது. இருப்பினும் வந்தே மாதரத்தை முழுமையாக பாட வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நிலைமை இப்படி இருக்கையில்தான், டி.கே.சிவகுமார் இந்த விஷயத்தில் கட் அண்ட் ரைட்டாக பேசியிருக்கிறார். பெங்களூரில் நடைபெற்ற இந்தியா டுடே ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சிவகுமார், "நாங்கள் கட்சியின் நிலைப்பாட்டிற்கு கட்டுப்பட்டவர்கள். மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் எடுத்த முடிவின்படி, முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பாடப்படுகின்றன. அதை மட்டுமே நாங்கள் பாடுவோம்" என்று பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தனது நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. 1937ம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில்.. தற்போது வரை இந்த நடைமுறையைதான் கட்சி பின்பற்றி வருகிறது. இதைத்தான் தற்போது டி.கே.சிவகுமார் பேசியிருக்கிறார். சிவகுமாரின் பேச்சு கர்நாடகாவில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸின் இந்த முடிவை பாஜக கடுமையாக விமர்சித்திருக்கிறது. யாரையோ திருப்திப்படுத்ததான் காங்கிரஸ் இப்படி பேசுகிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. சமீபத்தில் சுதந்திர தின விழாவின்போது வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்படாதது குறித்து சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாகவே டி.கே.சிவகுமாரின் பேச்சு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.