பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமார் இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து அவரது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படி மதுரையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன், கர்நாடகா முதல்வரின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த ராஜேந்திர சோழன் யார்? டிகே சிவக்குமாரின் நம்பிக்கையை பெற்றது எப்படி? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக முதல்வராக இருந்த சித்தராமையா கடந்த மாதம் 28 ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து இன்று கர்நாடகாவின் புதிய முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்றார். கர்நாடகா ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் டிகே சிவக்குமாருக்கு கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். டிகே சிவக்குமாருடன் இன்று 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பரமேஸ்வர் துணை முதல்வரான நிலையில் மற்ற 12 பேர் அமைச்சர்களாக செயல்பட உள்ளனர். விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது இன்னும் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக செயல்பட உள்ளனர். டிகே சிவக்குமார் முதல்வரானதும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி நகர மேம்பாட்டு துறையின் கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த துஷார் கிரி நாத், கர்நாடகா முதல்வரின் கூடுதல் முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். இவர் நகர மேம்பாட்டு துறையின் கூடுதல் முதன்மை செயலாளர் பொறுப்பையும் சேர்ந்து கவனிக்க உள்ளார். அதேபோல் கர்நாடகா துணை முதல்வரின் செயலாளராக செயல்பட்டு வந்த ராஜேந்திர சோழன் ஐஏஎஸ், முதல்வரின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதில் ராஜேந்திர சோழன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். மதுரை மாவட்டம் அழகப்பம்பட்டியை சேர்ந்த இவர் கடந்த 2008 ம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வில் பாஸானார். இந்திய அளவில் 31வது இடம் பிடித்து கர்நாடகாவில் பணிக்கு சேர்ந்தார். இவர் டிகே சிவக்குமாரின் நம்பிக்கையை பெற்றவராக உள்ளார். இதனால் தான் டிகே சிவக்குமார் துணை முதல்வராக இருந்தபோது அவரை தனது செயலாளராக வைத்து இருந்தார். இப்போது டிகே சிவக்குமார் முதல்வரான நிலையில் ராஜேந்திர சோழனையும் தனது செயலாளராக பணியாற்ற வாய்ப்பு வழங்கி உள்ளார். ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன் கர்நாடகா முதல்வரின் செயலாளர் பதவியோடு கர்நாடகா மின் கார்ப்பரேஷன் லிமிடெ்டடின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிக்க உள்ளார்.