தலித் என்பதால்.. கார்கே பேசிய மேடையை சுத்தம் செய்த இந்து அமைப்பினர்! ராஜ்யசபாவில் கொந்தளித்த காங்.,

  • டெல்லி: உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய மேடையை இந்துத்துவா அமைப்பினர் சுத்தம் செய்த (Purification) சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. அவர் தலித் என்பதால் மேடையை சுத்தம் செய்து வேள்வி பூஜை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் எழுப்பி மல்லிகார்ஜுன கார்கே கவலையை பகிர்ந்த நிலையில் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜேபி நட்டா கூறினார்.

    Advertisement

    உத்தர காண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் ராம்லீலா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 8 ம் தேதி 'விஜய் சங்கநாத்' என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசினார்.

    Advertisement

    இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு 2 நாட்கள் கழித்து ஸ்ரீராம் சேனா என்ற இந்துத்துவா அமைப்பினர் பொதுக்கூட்டம் நடந்த மேடையை சுத்தம் செய்தனர். வேள்வி நடத்தினர்.

    இதுபற்றி உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியால் கூறுகையில், ''ஸ்ரீ ராமசேனை அமைப்பினருடன் சேர்ந்து பாஜகவினர் மேடையை சுத்தம் செய்தனர்'' என்று கூறினார். இது சர்ச்சையை கிளப்பியது. மல்லிகார்ஜுன கார்கே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இந்துத்துவா அமைப்பினர் இப்படி Purification செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனை இன்று நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பி பேசினார். இதுபற்றி மல்லிகார்ஜுன கார்கே, ''ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானம் என்பது பொது இடம். அனைத்து கட்சியினரும் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு பல லட்சம் பேர் முன்னிலையில் பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். அந்த சமயத்தில் நான் எந்த ஜாதி, மதத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. அரசு சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே எழுப்பினேன்.

    Advertisement

    ஆனால் என்னுடைய பேச்சுக்கு பிறகு பாஜகவினர் மேடையை சுத்தம் செய்தனர். இதுதான் ஜனநாயகமா? நீங்கள் எப்படி இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பீர்கள்? நான் ராஜ்யசபாவின் எதிர்க்கட்சி தலைவர். அங்கு நடந்த சம்பவம் இந்து மதத்திற்கு எதிரானதாகவும், ஜாதி மோதல்களை தூண்டும் வகையிலும் இருந்தது'' என்று கொந்தளித்து பேசினார்.

    இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பதிலளித்தார். ''இந்த சம்பபவம் துரதிர்ஷ்டவசமானது. அதேவேளையில் பாஜகவினர் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தப்படும்'' என்றார்.

    English Summary

    An incident in Uttarakhand, where members of a Hindutva group 'purified' the stage where Congress national president Mallikarjun Kharge had spoken, sparked a controversy. Amidst allegations that the stage was cleansed because he is a Dalit, Kharge raised the issue in the Rajya Sabha and expressed his concern; Union Minister J.P. Nadda stated that an inquiry would be conducted.