சண்டை போடும் காலம் முடிந்துவிட்டது..” திடீரென முதல்வர் விஜய்யை பார்த்து டிகே சிவகுமார் சொன்ன விஷயம்

  • பெங்களூர்: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலங்களுக்கு இடையே தண்ணீருக்காக சண்டை போடும் காலம் முடிந்துவிட்டது என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இருப்பினும், மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீர் பாதிக்கப்படும். இதனால் டெல்டா விவசாயிகள் மிக பெரிய சிக்கலை சந்திப்பார்கள் என்பதால் தமிழ்நாடு அரசு இதை கடுமையாக எதிர்த்து வருகிறது.

    Advertisement

    டிகே சிவக்குமார்

    இருப்பினும், கர்நாடகா இதில் முனைப்பு காட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக டிகே சிவக்குமார் முதல்வராக பதவியேற்ற பிறகு மேகதாது அணை விவகாரத்தில் அம்மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி கே சிவக்குமார், தமிழக அரசு தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் இந்த அணையால் தமிழ்நாட்டிற்கே அதிக பலன் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார். மேலும், மேகதாது அணை கட்டுவதற்கு யாரிடமும் தனியாக அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    அனுமதி பெற தேவையில்லை

    இது குறித்து பேசிய டி.கே.சிவகுமார், "தமிழ்நாடு முதலமைச்சருக்கு நமது நாட்டின் சட்டம் தெரியும் என்று நம்புகிறேன். யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது. கர்நாடகா தனது எல்லைக்குள் அணையை கட்டி கொள்ள உரிமை இருக்கிறது.. அதே நேரத்தில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதுதான் அந்த நிபந்தனை.

    மேகதாது அணை என்பது வெறும் நீரை சேமிக்கும் திட்டம் மட்டுமல்ல.. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை சமநிலைப்படுத்த உதவும் நீர்த்தேக்கம். மேகதாது நீர்த்தேக்கத்தால் தமிழ்நாட்டுக்குத்தான் அதிக நன்மை கிடைக்கும். இந்த திட்டத்துக்கு தேவையான சுற்றுச்சூழல் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில், ஏற்கெனவே மாற்று காடு வளர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம்.. இதற்காக மாநிலத்தின் பிற பகுதிகளில் சுமார் 5,400 ஹெக்டேர் வன நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    ஒற்றுமையாக உள்ளோம்

    இந்த பணிகள் முடிந்ததும் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு நீர் ஆணையம் உரிய முடிவை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கர்நாடகா ஒற்றுமையுடன் உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் கட்சி வேறுபாடுகளை கடந்து கர்நாடகாவில் ஆதரவு உள்ளது.. பாஜக மற்றும் என்டிஏ தலைவர்களும் இந்த விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்" என்றார்.

    சண்டை போடும் காலம் ஓவர்!

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்த சிவக்குமார், "தயவுசெய்து ஒரு டீமை அனுப்புங்கள். நாங்கள் இந்த நீரை தவறாக பயன்படுத்த மாட்டோம். நாங்கள் அளித்த வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் குழுவை அனுப்புங்கள். நாம் சண்டை போட வேண்டிய அவசியமே இல்லை. சண்டையிடும் காலம் முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. சட்டத்தை மதித்து ஒன்றாக செயல்படுவோம். தண்ணீரை பகிர்ந்து கொள்வோம். நமக்குள் ஒற்றுமையை வளர்ப்போம். நாம் அனைவரும் ஒன்றுதான்" என்றும் வலியுறுத்தினார்.

    Advertisement

    காவிரி நதி கர்நாடகா, தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் செல்வதாக அவர் சுட்டிக்காட்டினார். குடிநீர், கால்நடைகள், விவசாயம் மற்றும் தொழில்துறை என அனைத்துத் தரப்பினருக்கும் காவிரி நீர் அத்தியாவசியமானது என்றும் தெரிவித்தார்.

    English Summary

    Karnataka Deputy CM DK Shivakumar has urged Tamil Nadu Chief Minister Vijay to cooperate with the Mekedatu dam project(கர்நாடகா மேகதாது விவகாரம் டி கே சிவக்குமார்): Mekedatu Dam latest news in tamil.