பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயம் மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு சொல்லி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த சுதந்திர தின உரையிலும் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் மேகதாது அணை கட்டியே தீருவோம் என பேசியுள்ளார். கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரோ, அடுத்த சுதந்திர தினத்திற்குள் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டப்படும் என கூறியுள்ளார்.
கர்நாடகாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் பிரச்சினை நிலவுகிறது. காவிரியில் தமிழகத்திற்கு நியாய்ப்படி கிடைக்க வேண்டிய நீரை தர மறுக்கும் கர்நாடகா, உபரி நீரை மட்டுமே திறந்து விடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு அநீதி இழைத்து வருகிறது.
இன்னொரு பக்கம், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்ற நிலை இருந்தாலும் அணை கட்ட உள்ளதாக கர்நாடகா கூறி வருகிறது. மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்பதே தமிழக கட்சிகள் மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. இருந்தாலும் பெங்களூரில் குடிநீர் தேவைக்காக மட்டுமே மேகதாதுவில் அணை கட்டப்படுவதாவும் அணை கட்டினால் தமிழகமே அதிக பயன்பெறும் என்றும் கர்நாடகா கூறி வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்ககூடிய நீர் கூட காவிரியில் கிடைக்காது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலை வனம் ஆகும் என்பதால், தமிழகம் சாத்தியமான அனைத்து வழிமுறைகளிலும் எதிர்த்து வருகிறது. இந்த நிலையில்தான், நேற்று சுதந்திர தினவிழாவில் பேசிய கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் என்று கூறியுள்ளார். சுதந்தி ரதின விழாவில் டிகே சிவக்குமார் பேசியதாவது:- மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் தொடங்கப்படும். இது குடிநீருக்கான திட்டம் ஆகும். எத்தின ஒலே திட்டத்தின் பணிகள் நிறைவு பெறும். நவம்பர் மாதத்தில் துமகூரு மாவட்டத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூர் நகரின் வளர்ச்சிக்காக 1.5 லட்சம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்றார். மாண்டியாவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் செலுவராயசாமியும் இதே கருத்தினை முன்வைத்துள்ளார். இது குறித்து செலுவராயசாமி கூறியதாவது:- "அடுத்த ஆண்டு சுதந்திர தினம் முன்பாக மேகதாது அணை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும். இந்த திட்டத்திற்கு டிகே சிவக்குமார் முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகிறார். மேகதாது திட்ட விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை திட்டத்துக்கு 12,500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நிலங்களை அடையாளம் காணும் பணியானது நடைபெற்று வருகிறது. காவிரி பிரச்சினைக்கு மேகதாது திட்டமே நிரந்தர தீர்வாக அமையும். கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கபினி அணையில் இருந்துதான் தமிழகத்திற்கு தண்ணீர் செல்கிறது" என்றார்.காவிரி விவகாரம்
அணை கட்டுவோம் - டிகே சிவக்குமார்
அடுத்த சுதந்திர தினத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும்