மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா?

  • பெங்களூர்: "பெங்களூரு" என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது இதமான காலநிலையும், வானளாவிய ஐடி கோபுரங்களும் தான். ஆனால், அந்தச் சொகுசு வாழ்க்கைக்கும் பின்னால் ஒரு மாபெரும் புவியியல் சாபமும், தீர்க்க முடியாத தண்ணீர்ப் பசியும் ஒளிந்திருக்கிறது என்பதுதான் கசப்பான எதார்த்தம். தற்போது அரசியல் அரங்கில் தீவிரமாக விவாதிக்கப்படும் 'மேகதாது அணை' விவகாரத்தை அவ்வளவு எளிதாக இருமாநில மக்களாலும் கடந்து போய்விட முடியாது. அதன் பின்னணியில் உள்ள புவியியல் விசித்திரங்களையும், அரசியல் தாண்டிய நிரந்தரத் தீர்வுகளையும் இந்த பதிவில் பார்ப்போம்.

    Advertisement

    3,000 அடியில் ஒரு தாகம்: பெங்களூருவின் புவியியல் சாபம்

    சென்னை போன்ற சமவெளி நகரங்களுக்குக் கடல்நீர் குடிநீராக்கும் திட்டம், வீராணம் ஏரி திட்டம், புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, கிருஷ்ணா நதி நீர் திட்டம், என பல ஏரிகள் நகரை சுற்றி உள்ளது. சென்னைக்கு பல குடிநீர் திட்டங்கள் கை கொடுக்கிறது. ஆனால், பெங்களூருவின் கதையே வேறு. கடல்மட்டத்திலிருந்து சுமார் 3,000 அடி (920 மீட்டர்) உயரத்திலுள்ள தக்காணப் பீடபூமியில் அமர்ந்திருக்கிறது இந்த நகரம். சுற்றி ஜீவநதிகள் இல்லை; ஆக்கிரமிப்புகளால் ஏரிகள் கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன.

    Advertisement

    காவிரி ஆறு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை நோக்கி வரும்போது செங்குத்தான சரிவைச் சந்திக்கிறது. பிலிகுண்டுலுவின் உயரம் வெறும் 900 அடி தான்! பெங்களூருவின் உயரம் 3000 அடியாக உள்ளது. தற்போது கர்நாடக அரசு தன் மாநிலத்தில் உள்ள டி.கே.ஹள்ளியிலிருந்து பெங்களூருக்குக் காவிரித் தண்ணீரைக் கொண்டு வர ஏற்கனவே பல நூறு அடிகளுக்கு மேல் தண்ணீரை மேல்நோக்கி 'பம்ப்' செய்கிறது. ஏனெனில் இயற்கையாக தண்ணீர் பள்ளம் நோக்கி தான் பாயும். மேட்டிற்கு செல்ல ராட்சத மோட்டார் வைத்து தான் ஏற்ற வேண்டும். இதற்கான மின்சாரக் கட்டணம் மட்டுமே மாதத்திற்குச் சுமார் 30 முதல் 40 கோடி ரூபாய் ஆகிறது. அதனால் தான் மேகதாதுவை கர்நாடகா அரசு விரும்புகிறது.

    Advertisement

    ஒருவேளை, தமிழ்நாடு எல்லைக்குள் அணை கட்டி அங்கிருந்து பெங்களூருக்குத் தண்ணீர் தருவதாக ஒரு மனிதாபிமான மாற்றுத் திட்டத்தை யோசித்தால் கூட, 2,100 அடி உயரத்திற்குத் தண்ணீரை மேலே தள்ள வேண்டியிருக்கும். அதற்கான மின்சாரச் செலவும் தொழில்நுட்ப சவாலும் கற்பனைக்கு எட்டாதது. இதனால்தான், தமிழக எல்லைக்கு மிக அருகில் உள்ள 'மேகதாது' பகுதியில் அணை கட்டி, குறைந்த செலவில் தண்ணீர் எடுக்கக் கர்நாடகா ஒற்றைக்காலில் நிற்கிறது. ஆனால், மேகதாதுவில் அணை வந்தால், தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வரும் கடைசி வாசலும் அடைக்கப்பட்டு, டெல்டா விவசாயம் முற்றிலும் பாலைவனமாகிவிடும் என்பதே தமிழகத்தின் நியாயமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    மேகதாது தீர்வா?

    அப்படியென்றால், எவ்வளவு மக்கள் தொகை உயர்ந்தாலும் பெங்களூருவின் தாகத்தைத் தீர்க்க வழியே இல்லையா? "அண்டை மாநிலத்தோடு சண்டை போட்டு அணை கட்டுவது தற்காலிகத் தீர்வுதான். தன் ஊரில் பெய்யும் மழையைத் மண்ணில் சேமிப்பதே நிரந்தரத் தீர்வு" என்கிறார்கள் சுற்றுச்சூழல் வல்லுநர்கள். பெங்களூருவை என்றும் வாழ வைக்க வாய்ப்பு உள்ள மூன்று வழிகள் பற்றி பார்ப்போம்.

    தென்பெண்ணை ஆற்றை மீட்டெடுத்தல்

    பெங்களூரு நகரின் மையப்பகுதியில் உதித்து ஓடி, பின்னாடி தமிழ்நாட்டிற்குள் பாயும் நதிதான் தென்பெண்ணை ஆறு (விருஷபாவதி). இன்று ஒட்டுமொத்த சாக்கடை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளையும் கொட்டி, அதனை ஒரு "கூவம்" போல மாறிக்கிடக்கிறது. போர்க்கால அடிப்படையில் இந்த நதியைத் தூர்வாரி, கழிவுநீர் கலப்பதைத் தடுத்தால், பெங்களூரு நகருக்குள்ளேயே ஒரு மாபெரும் நீர் ஆதாரம் மீண்டும் உயிர்வாழும்.

    Advertisement

    விழிப்புணர்வுடன் கூடிய 'மக்கள் இயக்க' மழைநீர் சேகரிப்பு

    பெங்களூருவுக்கு இயற்கை கொடுத்த வரம், அங்கே வருடத்திற்குப் பெய்யும் 1,000 மி.மீ சராசரி மழை. நகரின் 800 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கொட்டும் இந்த மழைநீரைக் கணக்கிட்டால், சுமார் 300 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்! பெங்களூருவின் ஒட்டுமொத்த வருடத் தேவையோ வெறும் 20 டி.எம்.சி தான். விழுந்த மழைநீர் சாக்கடையில் கலப்பதைத் தடுத்து, தமிழ்நாட்டின் 2001 மழைநீர் சேகரிப்புத் திட்டம் போல, ஒவ்வொரு வீட்டிலும் 'மக்கள் இயக்கமாக' இதனை மாற்றினால், நிலத்தடி நீர்மட்டம் தானாக உயரும். 2001ல் எப்படி மழைநீர் சேமிப்பு தமிழ்நாட்டில் கட்டாயம் ஆக்கப்பட்டதோ, அதுபோல் எல்லா வீடுகளிலும், அலுவலகங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டாயம் ஆக்கலாம்.

    Advertisement

    'ஸ்பாஞ்ச் சிட்டி ஃபார்முலா

    அதேபோல் அரசும் பெங்கடுளுர் நகரம் முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் பூங்காக்கள், மைதானங்கள், காலி இடங்களில் சின்னச் சின்னக் குளங்களையும், ஆழமான மழைநீர் உறிஞ்சுகுழிகளையும் அமைக்கலாம். சர்வதேச அளவில் சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகள் பயன்படுத்தும் இந்த 'பஞ்சு நகர' முறைப்படி, மழை பெய்யும்போது இந்த நீர்நிலைகள் தண்ணீரை உறிஞ்சி பூமிக்கு அடியில் சேமித்துவிடும். 1,500 அடிக்கு ஆழ்துளைக் கிணறு தோண்ட வேண்டிய அவசியமே வராது.

    ஊருக்குள் குளம் வெட்டுவதும், மழைநீர் சேகரிப்பு செய்வதும் ஓட்டு அரசியலுக்குப் பயன்படாமல் போகலாம். ஆனால், உலகமே வியக்கும் சிங்கப்பூர் இன்று தண்ணீரில் 90 சதவீதம் அளவிற்கு தற்சார்பு அடைந்ததற்கு இந்த உள்நாட்டு நீர் மேலாண்மைதான் காரணம்.

    ஏனெனில் நம்ம ஊரை விட மக்கள் தொகை அடர்த்தி அதிகமான நாடு சிங்கப்பூர். சுற்றிலும் கடல் இருந்தாலும் குடிக்கத் தண்ணீர் இல்லை. அவர்கள் மலேசியாவிடம் இருந்துதான் தண்ணீர் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

    ஆனால், ஸ்பான்ச் சிட்டி ஐடியாவைத் தான் அவர்கள் கையில் எடுத்தார்கள். நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பரப்பளவை "மழைநீர் சேகரிப்புப் படுகையாக" மாற்றினார்கள். விழும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் பிரம்மாண்டக் குளங்களில் தேக்கினார்கள். கழிவுநீரை 100% சுத்திகரித்து 'நியூவாட்டர்' என்ற பெயரில் மீண்டும் குடித்தார்கள். இன்று சிங்கப்பூர் தண்ணீர் விஷயத்தில் மலேசியாவிடம் குறைந்த அளவே வாங்குகிறார்கள். 90 சதவீதம் தற்சார்பு அடைந்துவிட்டது. இது சிறந்த தீர்வாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் முன் வைக்கப்படுகிறது.

    இறுதியாக இயற்கை பெங்களூருவுக்குத் தேவையானதைத் தலைக்கு மேலே மழையாகக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனை எப்படி கர்நாடகா அரசு சரியாக பயன்படுத்துகிறது என்பதை பொறுத்தே பிரச்சனைகளை தீரும்.

    English Summary

    Mekedatu row peaks as Bengaluru faces water pain. Restoring Vrishabhavathi river & strict rainwater harvesting can solve it sustainably, ensuring eco-balance without affecting Tamil Nadu's rights.