பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக டிகே சிவக்குமார் இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் மொத்தம் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பரமேஸ்வர் துணை முதல்வராகவும், மற்ற 12 பேர் அமைச்சர்களாகவும் செயல்பட உள்ளனர். இதில் சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்களாக பதவியேற்ற எம்எல்ஏக்களின் ஜாதி விவரங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக இன்று டிகே சிவக்குமார் பதவியேற்றார். கர்நாடகா ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் டிகே சிவக்குமாருக்கு கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
* அதன்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி பரமேஸ்வர் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார். இதில் முதல்வர் டிகே சிவக்குமார், அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா ஆகியோர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த சமுதாயத்தினர் பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சியின் வாக்கு வங்கியாக உள்ளனர். கடந்த 2023 சட்டசபை தேர்தலில் டிகே சிவக்குமாரை நம்பி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர்.தற்போது ஒக்கலிகர் சமுதாயத்துக்கு வாய்ப்பு குறைக்கப்பட்டு இருந்தாலும் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது டிகே சிவக்குமார் தனது ஆதரவாளர்கள் மற்றும் தனது சமுதாயத்துக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் துணை முதல்வர் பரமேஸ்வர், அமைச்சர்கள் கேஎச் முனியப்பா, பிரியங்க் கார்கே ஆகியோர் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். கர்நாடகாவின் ஆதிதிராவிட மக்கள் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியாக உள்ளனர். இதனால் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர், 2 அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர்களான எம்பி பாட்டீல், ஈஸ்வர் காண்ட்ரே, ஷரண் பிரகாஷ் பாட்டீல் ஆகியோர் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர். லிங்காயத் சமுதாயத்தினர் பாஜகவினரின் ஓட்டு வங்கியாக உள்ளது. பாஜகவின் முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் பாஜகவிற்கு செக் வைக்கும் வகையில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா மற்றும் பைரதி சுரேஷ் ஆகிய 2 பேரும் குருபா சமுதாயத்தை சேர்ந்தவர். சித்தராமையா முதல்வர் பதவியை விட்டு கொடுத்த நிலையில் மகன் யதீந்திரா மற்றும் தனது வலதுகரமாக இருக்கும் பைரதி சுரேஷ் ஆகியோருக்கு அமைச்சர் பதவியை பெற்று கொடுத்துள்ளார். அமைச்சர் ராமலிங்க ரெட்டி ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர். அமைச்சர் சதீஷ் ஜார்கிகோளி பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவர். இவர்கள் தவிர 2 சிறுபான்மையினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கிறிஸ்தவரான கேஜே ஜார்ஜ், இஸ்லாமியரான யுடி காதர் ஆகியோர் அமைச்சர்களாகி உள்ளனர். பிராமண சமுதாயத்தை சேர்ந்தவருக்கு ஒரு இடம் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி பார்த்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவின் கை தான் ஓங்கி உள்ளது. ஏனென்றால் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளவர்களில் பெரும்பாலானாவர்கள் சித்தராமையவின் ஆதரவாளர்கள் ஆவார்கள். இதன்மூலம் சித்தராமையாவின் கை ஓங்கி உள்ளது. இருப்பினும் கர்நாடகாவில் ராஜ்யசபா தேர்தல் முடிவடைந்த பிறகு அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் செய்யப்படும். அந்த சமயத்தில் டிகே சிவக்குமார் தனது ஆதரவாளர்களை அமைச்சரவையில் சேர்க்க வாய்ப்புள்ளது.
டிகே சிவக்குமாருடன் மொத்தம் 13 பேர் பதவியேற்று கொண்டனர். இதில் ஒருவர் துணை முதல்வராகி உள்ளார். மற்ற 12 பேர் அமைச்சர்களாக செயல்பட உள்ளனர்.
* கேஎச் முனியப்பா - அமைச்சர்
*கேஜே ஜார்ஜ் - அமைச்சர்
* எம்பி பாட்டீல் - அமைச்சர்
* ராமலிங்க ரெட்டி - அமைச்சர்
*சதீஷ் ஜார்கிகோளி - அமைச்சர்
*கிருஷ்ணபைரே கவுடா - அமைச்சர்
*பிரியங்க் கார்கே (காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் ) - அமைச்சர்
* யுடி காதர் - அமைச்சர்
* ஈஸ்வர் காண்ட்ரே - அமைச்சர்
*யதீந்திரா சித்தராமையா (முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன்) - அமைச்சர்
* பைரதி சுரேஷ் - அமைச்சர்
* ஷரண் பிரகாஷ் பாட்டீல் - அமைச்சர் என்று மொத்தம் 14 பேர் இன்று பதவியேற்று கொண்டனர்.