பெங்களூர்: ''பட்ஜெட் நெருக்கடி மற்றும் நிதி இல்லாததால் ஒரு கோடி பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை 2 மாதம் நிறுத்தப்பட்டது. இந்த மாதாந்திர உதவித்தொகை திட்டம் என்பது முழுக்க முழுக்க அரசின் பட்ஜெட் ஒதுக்கீட்டை சார்ந்தது. இதனால் இதனை அடிப்படை உரிமை போல் கோர முடியாது'' என்ற கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். கடந்த 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் 'கிருஹலட்சுமி' என்ற திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின்படி திருமணமான ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என கூறியது.
இதையடுத்து 2023 மே மாதம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 2 மாதம் கழித்து 2023 ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பபட்டது. தற்போது சுமார் 1.20 கோடிக்கும் அதிகமான குடும்ப தலைவிகள் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த திட்டத்துக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ''கர்நாடகா அரசு 'கிருஹலட்சுமி' திட்டத்தில் ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் பணம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.4 ஆயிரம் பாக்கி உள்ளது. இதனை வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கர்நாடகா அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது. தற்போது கர்நாடகா அரசு உயர்நீதின்றத்தில் பதில் அளித்துள்ளார். அதில், ''நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2025ம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் 'கிருஹலட்சுமி' திட்ட பயணிகளுக்கு உதவித்தொகை வழங்க முடியவில்லை. அந்தந்த மாதங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் நிதித் துறைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், பட்ஜெட் கட்டுப்பாடுகள் காரணமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி இருப்பை பொறுத்தே இந்த திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை என்பது பட்ஜெட் ஒதுக்கீட்டை பொறுத்தது தான். இதனால் இதனை சட்டப்பூர்வமான அடிப்படை உரிமையாக கோர முடியாது. இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.