S.Janaki: கவலைக்கிடமான நிலையில் மைசூர் அப்பல்லோவுக்கு வந்த எஸ்.ஜானகி! CPR கொடுத்தும்..7 மணி நேர போராட்டம்

  • பெங்களூர்: பின்னணி பாடகி ஜானகி, உடல்நல பாதிப்புக்காக இன்று மதியம் மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பலமுறை முறை மாரடைப்பு ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பின்னணி பாடகி ஜானகி, உடல்நல பாதிப்பு காரணமாக இன்று மதியம் 12.49 மணிக்கு மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    Advertisement

    அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே கவலைக்கிடமான நிலையில்தான் இருந்தார். உடனடியாக அவரது உடல்நிலையை பரிசோதித்த எங்கள் மருத்துவக் குழுவினர் அவர் தீவிர சிகிச்சை பிரிவு என சொல்லப்படும் ஐசியூவிற்கு மாற்றப்பட்டார்.

    அங்கு பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. மேலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது உயிரை காக்க சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனாலும் பலனளிக்கவில்லை. அவருக்கு தொடர்ந்து சிபிஆர் சிகிச்சையை மருத்துவ நெறிக்குள்பட்டு செய்த போதிலும் அவருக்கு மீண்டும் மீண்டும் பலமுறை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பலனின்றி ஜானகி அன்று இரவு 7.30 மணிக்கு காலமானார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.ஜானகி. பிராமண குடும்பத்தில் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடிய போது ஜானகிக்கு 9 வயது!

    "விதியின் விளையாட்டு" படத்தில் "பெண் என் ஆசை பாழானது" என்ற பாடல்தான் இவர் பாடிய முதல் பாட்டு! அடுத்த நாளே கண்டசாலாவுடன் இணைந்து பாடும் வாய்ப்பு ஜானகிக்கு கிடைத்தது.

    17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர். கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர்.

    Advertisement

    இலங்கையில் 1992-ல் இவருக்கு 'ஞான கான சரஸ்வதி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. 2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.

    2016 ஆம் ஆண்டு திரைப்படங்கள், மேடைக் கச்சேரிகளில் பாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். எனினும் 2018ஆம் ஆண்டு பண்ணாடி என்ற படத்தில் மீண்டும் பாடினார்.

    இவரது கணவர் ராம் பிரசாத். இவர்களுக்கு முரளி கிருஷ்ணா என்ற மகன் இருந்தார். ராம் பிரசாத் 1997ஆம் ஆண்டில் மறைந்தார். மகன் முரளி கிருஷ்ணா அண்மையில் மறைந்தார். மகனின் இறப்பை தாங்க முடியாமல் ஜானகி தவித்து வந்தார். இவரது மருமகள் உமா, நாட்டிய கலைஞர், பரதம், குச்சிப்புடி நடனங்களில் தேர்ந்தவர். வர்ஷா, அப்சரா ஆகிய இரு பேத்திகள் உள்ளனர். ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளிலும் சரளமாக பேசுவார், எழுதவும் செய்வார்.

    Advertisement

    இதுவரை 48 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இசையரசி, கானக்குயில், தென்னிந்தியாவின் கானக்குயில், இசைக் குயில் உள்ளிட்ட பட்டப்பெயர்களால் பலர் இவரை அழைத்தாலும் ஜானகி அம்மா என்பதுதான் இவருக்கு பிடித்தமானது.