பெங்களூர்: SIR நடவடிக்கைக்கு எதிராக நேற்று டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றத்துக்கு பேரணியாக சென்றனர். இந்த சமயத்தில் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாரின் ஆடையை பிடித்து பின்னுக்கு இழுத்து ராகுல் காந்தி அவமதித்ததாக வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
SIR நடவடிக்கையை ரத்து செய்யக்கோரியும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் பேரணியாக சென்று உச்சநீதிமன்றத்தில் 'ரிட்' மனு தாக்கல் செய்தனர். இந்த பேரணியால் ராகுல் காந்தி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பேரணியின்போது அதிகளவில் மக்கள் கூடினர். இதனால் ஒவ்வொருவரும் முண்டியடித்து கொண்டிருந்தனர். அப்போது ராகுல் காந்தி அருகே பலரும் நெருக்கமாக சென்றனர். இதனால் கோபமடைந்த ராகுல் காந்தி ஒருவரின் வயிற்றில் தனது கையால் ஓங்கி குத்தினார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே தற்போது அதே பேரணி தொடர்பான இன்னொரு வீடியோ வெளியாகி விவாதமாகி உள்ளது. கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாரை ராகுல் காந்தி அவமதித்ததாக அந்த வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. வீடியோவில் ராகுல் காந்தி வேகமாக நடந் செல்கிறார். ஒரு கட்டத்தில் அவர் அருகே டிகே சிவக்குமார் நடந்து செல்கிறார். ஆனால் ராகுல் காந்தி டிகே சிவக்குமாரின் சட்டையை பிடித்து பின்னால் இழுத்துவிட்டு ராகுல் காந்தி முன்னோக்கி செல்கிறார். இந்த சமயத்தில் பின்னால் வந்தவர்கள் டிகே சிவக்குமாரை கண்டுக்கொள்ளாமல் முன்னோக்கி செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. கர்நாடகாவின் முதல்வராக டிகே சிவக்குமார் உள்ள நிலையில் அவரை ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கர்நாடகாவை சேர்ந்த பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியை சாடி வருகின்றனர். இதுதொடர்பாக பாஜகவை சேர்ந்த பெங்களூர் தெற்கு தொகுதியின் எம்பியான தேஜஸ்வி சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ''தலைமுறை தலைமுறையாக தொடரும் பரம்பரை அதிகாரத்தின் ஆணவத்திற்கு முகம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும். கர்நாடகா முதல்வர் வீரேந்திர பட்டீலை பதவியில் இருந்து நீக்குவதாக விமான நிலையத்தில் வைத்து ராஜீவ் காந்தி அலட்சியமாக அறிவித்தது முதல் சாலையின் நடுவே டிகே சிவக்குமாரின் குர்தாவை பிடித்து இழுத்தது வரை காங்கிரஸ் வம்சவாவளியினரின் 'அதிகார மனப்பான்மை' இன்றும் மாறாமல் தொடர்கிறது. அரசியலை தாண்டி பார்த்தால் டிகே சிவக்குமார் கர்நாடகாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இப்படி இருக்கும்போது அவருக்கு நேர்ந்த அவமதிப்பு 7 கோடி கன்னட மக்களின் கண்ணியத்திற்கு இழைக்கப்பட்ட அவமானமாகும். ராகுல் காந்தியை எடுத்து கொண்டால் கர்நாடகாவின் தேர்வு செய்யப்பட்ட தலைமையை போல் எந்தவொரு நிர்வாக பதவியோ அல்லது அரசியலமைப்பு ரீதியான எந்த அதிகாரமோ இல்லை. இருப்பினம் அவர் இப்படி செயல்படுகிறார். இது காங்கிரஸ் மேலிடத்துக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது'' என கூறியுள்ளார்.