பெங்களூர்: 2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கூறி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் மேம்பாலங்கள் மூடப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு பைனல் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஜிடி எனும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை ரஜத் பட்டிதாரும், குஜராத் டைட்டன்ஸ் அணியை சுப்மன் கில்லும் வழிநடத்துகின்றனர். இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போது மீண்டும் பைனல் வந்துள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். குறிப்பாக பெங்களூர் உள்பட கர்நாடகாவில் உள்ள ரசிகர்கள் பைனல் போட்டியை எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆர்சிபி வெற்றி பெற வேண்டும் என்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். மேலும் எப்படியும் ஆர்சிபி வென்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை இன்று வெல்லும் என்று பெங்களூர் உள்பட கர்நாடகா ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான் ஐபிஎல் பைனல் போட்டியையொட்டி பெங்களூர் நகரில் மேம்பாலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதறகான அறிவிப்பை பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், ''ஐபிஎல் 19 வது சீசனின் பைனலையொட்டி இன்று பெங்களூர் நகர் முழுவதும் வெற்றி கொண்டாட்டம் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுமூகமான போக்குவரத்துக்காக தெற்கு மண்ட போக்குவரத்து எல்லைக்குட்பட்ட Elevated Flyover மற்றும் Double Decker Flyover ஆகியவை இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை மூடப்படுகிறது. இதில் Elevated Flyover-யை எடுத்து கொண்டால் இருமார்க்கமாக ரூபேன அக்ரஹாராவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரையும், Double Decker Flyover-யை எடுத்து கொண்டால் ராகிகுட்டாவில் இருந்து 5வது அவுட்டர் ரிங் ரோடு மற்றும் ஒசூர் ராடு மற்றும் 5வது மெயின் அவுட்டர் ரிங் ரோட்டி் இருந்து ராகிகுட்டா வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இந்த மேம்பாலங்களுக்கு பதிலாக மாற்று சாலைகளை பயன்படுத்த வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. பெங்களூர் போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது ஆர்சிபி சாம்பியன் பட்டம் வெல்லும்போது ரசிகர்கள் பெங்களூரில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்த கொண்டாட்டம் இரவு முழுவதும் நடக்கும். சிலர் மதுபானம் அருந்துவார்கள். அதன்பிறகு மேம்பாலங்களில் வாகனங்களில் செல்லும்போது விபத்து வாய்ப்பு அதிகம். இதனால் உயிரிழப்பு ஏற்படலாம். இதனை தடுக்கவே போக்குவரத்து போலீசார் முன்னெச்சரிக்கையாக மேம்பாலங்களை மூடுவதாக அறிவித்துள்ளனர்.