இனி தேர்தலில் போட்டிடமாட்டேன்.. ஓய்வை அறிவித்த கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா

  • பெங்களூர்: ''இன்றைய அரசியல் சீர்கேடாகிவிட்டது. கடந்த காலங்களில் நான் தேர்தலில் போட்டியிட்டபோது, தொகுதி மக்களே எங்களுக்கு பணத்தை வழங்கி வெற்றியை உறுதி செய்தனர். ஆனால் இன்று மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் 2028 சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை'' என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

    Advertisement

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா இருந்தார். இந்நிலையில் தான் மே மாத இறுதியில் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

    Advertisement

    இன்றைய அரசியல் களம் சீர்கெட்டுவிட்டது. இதனால் 2028ம் ஆண்டு நடைபெறும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை. ஆனாலும் அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு மக்களின் குரலாக திகழ்வேன். வருணா தொகுதி (சித்தராமையா எம்எல்ஏவாக உள்ள தொகுதி) மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்று நான் முடிவு செய்துள்ளேன்.

    கடந்த காலங்களில் நான் தேர்தலில் போட்டியிட்டபோது, தொகுதி மக்களே எங்களுக்கு பணத்தை வழங்கி வெற்றியை உறுதி செய்தனர்.
    ஆனால் இன்று, அத்தகைய சூழல் இல்லை. எனக்கு இப்போது 79 வயதாகிறது. எங்கள் அரசாங்கத்தின் (கர்நாடகா காங்கிரஸ் அரசு) பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அதற்குள் எனக்கு 81 அல்லது 82 வயதாகிவிடும்.

    Advertisement

    எனது உடல்நிலை முன்பு இருந்ததைப் போல வலுவாக இல்லை. இதனால் முன்பிருந்த அதே உற்சாகத்துடன் பணியாற்றுவது இனி சாத்தியமில்லை. 2028ம் ஆண்டில் எனக்கு 82 வயதாகியிருக்கும். அது எனது அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் தருணமாக அமையும். 1978ல் தாலுகா வாரிய உறுப்பினராக எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன்.

    அரசியலில் வெற்றி தோல்விகளை நான் சந்தித்துள்ளேன். ஆனால், நான் நம்பிய கொள்கைகளுக்கு எதிராக செயல்படாமலும், எனது மனசாட்சிக்கு துரோகம் இழைக்காமலும் இருந்ததில் நான் மனநிறைவு கொள்கிறேன். இன்று தேர்தலில் போட்டியிட்டால் மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் அரசியல் இன்று முற்றிலும் சீர்கெட்டுவிட்டது.

    Advertisement

    நேர்மையான அரசியலுக்கு இடமில்லாத நிலை உள்ளது. இதனால் இனி வரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். கடந்த 50 ஆண்டுகளாக மாநில மக்கள் என்னை அவர்களில் ஒருவராக கருதி அன்புடன் வழிநடத்தினர். அந்த நன்றிக்கடன் எனக்கு உள்ளது. இதனால் எதிர்கால வாழ்க்கையை பொதுசே்வைக்காக அர்ப்பணிக்க உள்ளேன் - மண்டியா மாவட்டம் கேஆர்பேட்டையில் உள்ள தனியார் நிகழ்ச்சியில் நான் பேசினேன்'' என்று கூறியுள்ளார்.

    சித்தராமையா முதலில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் ஜனதாதளம் எஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்தார். அதன்பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2013 முதல் 2018 ம் ஆண்டு வரை காங்கிரஸில் முதல்வராக சித்தராமையா செயல்பட்டார். அதன்பிறகு 2023-2026 வரை மீண்டும் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Karnataka Ex CM Siddaramaiah says, ‘‘Since the political field has become corrupted today, I will not contest in the 2028 assembly elections. If we contest elections, we would have to give money to the people. Politics today is thoroughly corrupted. Honest politics seems to have no leg to stand on. In this backdrop, I have arrived at the decision not to contest in future elections''.