பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவிற்கு காங்கிரஸ் புதிய பொறுப்பு வழங்கி உள்ளது. அதன்படி சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். சித்தராமையா 3 ஆண்டுகளாக முதல்வர் பதவியை நிறைவு செய்த நிலையில் அவர் கடந்த மாதம் 28 ம் தேதி ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய முதல்வராக டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிகே சிவக்குமார் தொடர்ந்து கட்சி மேலிடத்திடம் முதல்வர் பதவி வேண்டும் என்று கூறி வந்த நிலையில் தற்போது சித்தராமையாவிடம் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவின் புதிய முதல்வராக டிகே சிவக்குமார் நாளை பொறுப்பேற்க உள்ளார். நாளை மாலை 4.05 மணிக்கு பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் டிகே சிவக்குமார் முதல்வராக பதவியேற்கிறார். அவருடன் 10 முதல் 12 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் அமைச்சரவையில் புதிதாக யாரை சேர்ப்பது? என்பது தொடர்பாக சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோரிடம் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் இன்று விவாதித்தனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அமைச்சர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவிற்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராக சித்தராமையா சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ''காங்கிரஸ் கட்சியின் தலைவர் (மல்லிகார்ஜுன கார்கே), சித்தராமையாவை காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது'' என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் செயற்குழு என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த செயற்குழுவில் தான் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். சித்தராமையாவிற்கு தற்போது 77 வயது ஆகிறது. நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். இதனால் அவரது அனுபவத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி அவரை செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.