முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா

  • பெங்களூர்: ''என்னுடைய குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வந்தது இல்லை. நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு முறை முதல்வர் பதவி (2013 -2018 மற்றும் 2023 -2026), ஒருமுறை எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்தேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு சித்தராமையா உருக்கமாக கூறினார்.

    Advertisement

    கர்நாடகா முதல்வராக கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் முதல்வர் பதவியை தனக்கு வழங்கும்படி துணை முதல்வர் டிகே சிவக்குமார் போர்க்கொடி உயர்த்தினார். இதையடுத்து சித்தராமையா இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    Advertisement

    இதற்கான கடிதத்தை இன்று பெங்களூரில் உள்ள கர்நாடகா ஆளுநர் மாளிகையில் வழங்கினார் சித்தராமையா. இதையடுத்து புதிய முதல்வராக டிகே சிவக்குமார் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு சித்தராமையா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் உருக்கமாக சில விஷயங்களை கூறினார். இதுதொடர்பாக சித்தராமையா கூறியதாவது:

    ''நான் கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆளுநர் மாளிகைக்கு சென்றேன். ஆளுநர் அங்கு இல்லை. இதனால் ஆளுநரின் சிறப்பு செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளேன். ஆளுநர் லோக் பவனுக்கு திரும்பிய உடனேயே எனது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன். ஏனென்றால் ஒருமுறை ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டால், அதனை ஏற்றுக்கொண்டு, அடுத்த முதல்வர் பதவியேற்பதற்கு வழிவகை செய்து கொடுப்பதே மாநில ஆளுநரின் பொறுப்பு.

    Advertisement

    நான் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி தான் என்னை சேர்த்தார். பெங்களூர் வந்த சோனியா காந்தியிடம், அவரது உதவியாளர் அகமது படேல் என்னை அழைத்து சென்று கட்சியில் இணைத்தனர். அப்போது கர்நாடகா மாநில தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இருந்தார்.

    நான் காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு முறை முதல்வர் பதவி (2013 -2018 மற்றும் 2023 -2026), 2 முறை எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்தேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வந்தது இல்லை. நான் தான் 'அக்சிடென்டல் அரசியல்வாதி'யாக வந்தேன்.

    Advertisement

    புத்தர், பசவண்ணர் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நான் எப்போதும் உறுதியாக நம்பி வருகிறேன். சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் இடையே பொருளாதாரம், செல்வம் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்.

    கடைசி உயிர் இருக்கும் வரை மதவாத சக்திகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவேன். ஏனென்றால் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் இல்லாவிட்டால் நான் எம்எல்ஏ ஆகி இருக்கமாட்டேன். அமைச்சராகி இருக்கமாட்டேன். முதல்வராகி இருக்கமாட்டேன். அரசியலமைப்பு சட்டம் இல்லாமல் இருந்திருந்தால் நான் என்னுடைய தாய் - தந்தையுடன் சேர்ந்து கால்நடைகள் தான் மேய்த்து இருக்க வேண்டும். இதனால் கடைசி உயிர் வரை மதவாத சக்திகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என்பதை மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.'' என்றார்.

    English Summary

    "No one from my family has ever entered politics. My entry into politics was an accident. On behalf of the Congress party, I served as Chief Minister twice (2013-2018 and 2023-2026) and as Leader of the Opposition once. I express my gratitude to Congress leaders Sonia Gandhi, Rahul Gandhi, and Mallikarjun Kharge for granting me these opportunities," Siddaramaiah stated emotionally after resigning from the post of Chief Minister of Karnataka.