தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய்

  • சென்னை: கர்நாடகாவின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமார் இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து டிகே சிவக்குமாருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக சட்டசபை தேர்தலின்போது டிகே சிவக்குமார், மெச்சூரிட்டி இல்லை என்று கூறி விமர்சித்த நிலையில் தற்போது விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக இன்று டிகே சிவக்குமார் பதவியேற்றார். கர்நாடகா ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் டிகே சிவக்குமாருக்கு கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

    Advertisement

    டிகே சிவக்குமாருடன் மொத்தம் 13 பேர் பதவியேற்று கொண்டனர். இதில் ஒருவர் துணை முதல்வராகி உள்ளார். மற்ற 12 பேர் அமைச்சர்களாக செயல்பட உள்ளனர். அமைச்சர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    இன்றைய பதவியேற்பில் டிகே சிவக்குமார் முதல்வராக பதவியேற்றார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி பரமேஸ்வர் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார். இதையடுத்து அமைச்சர்களாக கேஎச் முனியப்பா, கேஜே ஜார்ஜ், எம்பி பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜார்கிகோளி, கிருஷ்ணபைரே கவுடா , பிரியங்க் கார்கே (காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் ), யுடி காதர், ஈஸ்வர் காண்ட்ரே, யதீந்திரா சித்தராமையா (முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன்), பைரதி சுரேஷ், ஷரண் பிரகாஷ் பாட்டீல் உள்ளிட்டோர் பதவியேற்று கொண்டனர்.

    Advertisement

    இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்றுள்ள டிகே சிவக்குமாருக்கு, தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ''கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டிகே சிவக்குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

    முன்னதாக தமிழக சட்டசபை தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது விஜய் ''திமுக கூட்டணியில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் ஓட்டு போட்டுக்கொள்ள மாட்டார்கள் போல் இருக்கிறது. திமுக தனது கூட்டணியில் காங்கிரஸை வைத்துள்ளது. சில கோடிகளை கொடுத்து அந்த கட்சியை திமுக தக்கவைத்துள்ளது. இருப்பினும் உண்மையான காங்கிரஸ் தமிழக வெற்றி கழக பக்கம் நிற்கிறது" என்று கூறினார்.

    Advertisement

    இதுபற்றிய கேள்விக்க டிகே சிவக்குமார் கூறியதாவது: ''அரசியலில் விஜய்க்கு முதிர்ச்சி இல்லை. அவருக்கு மெச்சூரிட்டி இல்லை. விஜய் உடன் டிஎம்சி கட்சி இருக்கலாம். அவ்வளவு தான். எங்கள் தான் அவருடன் இல்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தான் உள்ளது. இந்த கூட்டணி 3ல் இரண்டு பங்கு வென்று மெஜாரிட்டியை பிடிக்கும்'' என்று கூறி கேலி செய்திருந்தார்.

    ஆனால் தேர்தல் முடிவடைந்த பிறகு தவெக கூட்டணியில் காங்கிரஸ் ஐக்கியமானது. விஜய் முதல்வரான பிறகு டிகே சிவக்குமார் செல்போனில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அப்போது டிகே சிவக்குமார், ''குட் ஈவினிங் விஜய்.. வாழ்த்துகள்.. நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். எல்லோரையும் ஒன்றாக வைத்து கொள்ளுங்கள். அதுதான் முக்கியம். ஏனென்றால் இளைஞர்கள் மிகுந்த உணர்வுபூர்வமான ஈடுபாடுகளையும், லட்சியங்களையும் கொண்டுள்ளனர் என்பதை அங்கீகரித்து ஒன்றிணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நாங்கள் எல்லோரும் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள். எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும், ஆதரவையும் உங்களுக்கு வழங்க நாங்கள் முயற்சிப்போம். இரு மாநிலங்களின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காகவும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்'' என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இந்நிலையில் தான் விஜய் தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்து டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் - தவெக இடையேயான பந்தம் அதிகரித்து வருகிறது. தற்போது தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. 2 அமைச்சர்கள் மட்டுமின்றி இன்று ராஜ்யசபா எம்பி பதவியையும் தவெக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் விஜய், கர்நாடகாவின் காங்கிரஸ் முதல்வர் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu CM Vijay wishes to DK Shivakumar: D.K. Shivakumar of the Congress party assumed office today as the new Chief Minister of Karnataka. Following this, Chief Minister Vijay extended his congratulations to D.K. Shivakumar. This comes after D.K. Shivakumar had previously congratulated Vijay over the phone when the latter assumed office as the Chief Minister of Tamil Nadu; now, Vijay has reciprocated by conveying his wishes to him.