பெங்களூர்: பாகிஸ்தானுக்கும், நமக்கும் மோதல் உள்ளது. கடந்த ஆண்டு கூட போர் நடந்தது. ஆனாலும் கூட தற்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக சதி வேலை செய்து தாக்குதலுக்கு ரெடியாகி வந்த இளைஞரை பெங்களூர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதன்மூலம் பாகிஸ்தான் எதிரியாக இருந்தாலும் கூட அந்த நாட்டுக்கு எதிராக நம் நாட்டில் யாரும் சதித்திட்டம் தீட்டினால் சும்மாவிடமாட்டோம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காலம் காலமாக பகை உள்ளது. இதற்கு முழு காரணம் பாகிஸ்தான் தான். பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வைத்து நம் நாட்டுக்கு சதித்திட்டம் தீட்டுவது தான் அண்டை நாடுகளாக இருந்தாலும் கூட இருநாடுகள் இடையேயான உறவு மோசமாக இருப்பதற்கு முக்கிய காரணம். கடந்த ஆண்டு பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாகிஸ்தான் நிலைக்குலைந்தது. 3 நாள் நடந்த போரில் பாகிஸ்தானில் உள்ள ராணுவ முகாம், விமானப்படை தளம், ரேடார் அமைப்புகள், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆனாலும் பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை. நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து பாகிஸ்தான் மிரட்டல் விடுத்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு கூட சிந்து நதி நீரை இந்தியா தராவிட்டால் நேரடியாக தாக்கதல் நடத்துவோம் என்று மிரட்டினார். அதேபோல் அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீரும் அவ்வப்போது நம் நாட்டை சீண்டி வருகிறார். இப்படி நமக்கான பிரதான எதிரியாக பாகிஸ்தான் உள்ளது. இருந்தாலும் கூட பாகிஸ்தான் மீது கருணையுடன் தான் இந்தியா உள்ளது. இதற்கு உதாரணமாக தான் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.அதாவது பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய நபரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் நம்முடைய எதிரிதானே என்று இல்லாமல் அந்த நாட்டின் ராணுவத்துக்கும் வலிக்கும் அல்லவா? எந்தவொரு நாட்டின் ராணுவத்தையும் தனிநபர் தாக்குதல் நடத்துவது சரியில்லை என்ற அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது கைதாகி உள்ள நபரின் பெயர் அசஃபுல் மாலிக் (வயது 25). இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பெங்களூர் ஜிகனியில் தங்கி பொம்மசந்திராவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் டிடிபி எனும் தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் (TTP or Tehreek e Taliban Pakistan) என்ற அமைப்பை சேர்ந்த இம்ரான் ஹைதர் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இவருடன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பேசி வந்துள்ளார். கடந்த 11ம் தேதி பெங்களூர் ஹெப்பகோடி போலீசார் பொம்மச்சந்திரா தொழிற்சாலைக்கு சென்று அசஃபுல் மாலிக்கை பிடித்து விசாரித்து கைது செய்தனர். இவர் பாகிஸ்தான் மற்றும் அந்த நாட்டின் ராணுவம் மீது கடும் கோபத்தில் உள்ளதோடு தாக்குதல் நடத்தவும் தயாராகி வந்துள்ளார். இதற்காக அவர் ஆப்கானிஸ்தான் செல்ல பாஸ்போர்ட் எடுத்து விசாவுக்கும் விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் அவரது பயணம் தாமதமாகி வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் உள்ள செல்போனில் இருந்து தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்புடன் தொடர்பில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான மெசேஜ் மற்றும் ஆடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். தற்போது கைதாகி உள்ள அசஃபுல் மாலிக் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். பாகிஸ்தான் நாட்டில் மசூதிகள் மீதான தாக்குதல், பாகிஸ்தான் மக்களுக்கு அரசு மற்றும் ராணுவத்தால் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு வெகுண்டெழுந்துள்ளார். அதுமட்டுமின்றி இஸ்ரேல் - பாலஸ்தீனம் காசா போரில் பாலஸ்தீன முஸ்லிம்கள் பக்கம் பாகிஸ்தான் நிற்கவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர் கோபப்பட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் ராணுவத்தை எப்படியாவது தாக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதற்காக தான் அவர் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்தி உள்ளார். இந்த தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் என்பது பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட அமைப்பாகும். ஆப்கானிஸ்தான் போல் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி பாகிஸ்தானிலும் தாலிபான்களின் ஆட்சியை கொண்டு வருவதை நோக்கமாக இந்த அமைப்பு கொண்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் குழப்பத்தை ஏற்படுத்த தெஹ்ரிக் இ தாலிபான் அடிக்கடி அங்கு குண்டுவெடிப்பு சம்பவங்கள், பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ' தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான்' என்ற அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பாக அதுமட்டுமின்றி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் அடிக்கடி தெஹ்ரிக் இ தாலிபான் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சண்டை, குண்டு வீச்சுகள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் கூட தெஹ்ரி இ தாலிபான் - பாகிஸ்தான் ராணுவம் இடையே பயங்கர சண்டைகள் நடந்தன. இதனால் தான் பாகிஸ்தான் ராணுவத்தை பழிவாங்க வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தானில் இயங்கும் தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பில் இணைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில் பெங்களூர் போலீசாரிடம் சிக்கி உள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவரையும் சும்மா விடமாட்டோம் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. நம் நாட்டை எடுத்து கொண்டால் ஆப்கானிஸ்தானுடன் நல்ல நட்பில் உள்ளது. தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கு நம் நாடு ஆதரவு அளிக்கவில்லை. அதேபோல் தனிப்பட்ட வகையில் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பை மத்திய உள்துறை அமைச்சகம் பயங்கரவாத அமைப்பு பட்டியலிலும் சேர்க்கவில்லை. தடையும் செய்யவில்லை. ஆனால் ஐநாவின் பயங்கரவாத பட்டியலில் இந்த அமைப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த அமைப்பின் ஒவ்வொரு அசைவுகளையும் நம் நாடு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பெங்களூரில் கைது
யார் இந்த இளைஞர்
பாகிஸ்தானை தாக்க சதி
பாகிஸ்தானை குறிவைத்தது ஏன்?
தெஹ்ரிக் இ தாலிபான் பின்னணி
இந்தியாவில் தடையா?