முடங்கிய வாட்டாள் நாகராஜ்.. வாயில் என்ன டேப்? வீடு புகுந்து தூக்கிய பெங்களூர் போலீஸ்.. கர்நாடகா பந்த் பரபரப்பு

  • பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பந்த் போராட்டம் அறிவித்து போராட்டத்துக்கு தயாராக இருந்த கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜை இன்று காலையில் வீடு புகுந்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    Advertisement

    தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கூடாது என்று இன்று கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் இந்த பந்த்-தை அறிவித்தார். இந்த பந்த் போராட்டம் முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது. பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் வழக்கம்போல் அரசு பஸ், தனியார் பஸ், ஆட்டோக்கள், ரயில்கள் இயங்கி வருகின்றன.

    Advertisement

    பெங்களூரில் பிஎம்டிசி பஸ், மெட்ரோ ரயில்கள், வாடகை கார்கள் இயங்கி வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், கடைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.இதனால் வாட்டாள் நாகராஜ் அறிவித்த பந்த் முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது.

    இதற்கிடையே தான் இன்று காலை 10 மணிக்கு வாட்டாள் நாகராஜ் போராட்டம் அறிவித்து இருந்தார். முதற்கட்டமாக அவர் பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையம் சென்று கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் (கேஎஸ்ஆர்டிசி), பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (பிஎம்டிசி) நிர்வாகத்திடம் ஆதரவு கோரி பஸ் சேவைகளை நிறுத்தும்படி கூற தயாராகினார். அதன்பிறகு பெங்களூர் டவுன்ஹாலில் இருந்து திறந்த வாகனத்தில் வாட்டாள் நாகராஜ் தனது ஆதரவாளர்களுடன் சுதந்திர பூங்கா வரை ஊர்வலமாக சென்று பேச திட்டமிட்டு இருந்தார்.

    Advertisement

    ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் போலீசார் போராட்டத்துக்கு முன்பாகவே பெங்களூர் டாலர்ஸ் காலனியில் உள்ள வாட்டாள் நாகராஜ் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதற்கு வாட்டாள் நாகராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ''நான் எங்கும் செல்லவில்லை. வீட்டில் தான் இருக்கிறேன். என்னை எப்படி கைது செய்யலாம்?'' என்று கேள்வி எழுப்பினார்.

    அதுமட்டுமின்றி, ''இனி நான் யாரிடமும் பேசப்போவது இல்லை'' என்று வாயில் 'டேப்' ஒட்டியபடி சேர் போட்டு வீட்டு வளாகத்தில் அமர்ந்தார். ஆனால் போலீசார் விடவில்லை வாட்டாள் நாகராஜை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் டென்ஷனான வாட்டாள் நாகராஜ் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். இருப்பினும் போலீசார் அவரை கைது செய்து ஜீப்பில் ஏற்றி சென்றனர். இப்படியாக போராட்டத்தில் இறங்கும் முன்பே வாட்டாள் நாகராஜை போலீசார் வீடு புகுந்து தூக்கினர்.

    Advertisement

    வாட்டாள் நாகராஜ் மட்டுமின்றி பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் பிற இடங்களில் உள்ள அவரது ஆதரவாளர்களும் அதிகாலையில் இருந்தே கைது செய்யப்பட்டனர். இதனால் கர்நாடகாவில் பெரிய அளவில் இன்று போராட்டம் எதுவும் நடக்கவில்லை. மண்டியா, பெங்களூர் உள்பட சில இடங்களில் மட்டுமே கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இன்றைய பந்த் போராட்டத்தால் பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    English Summary

    Karnataka Bandh Vatal Nagaraj Arrest: A bandh has been announced in Karnataka today to protest the release of Cauvery water to Tamil Nadu. Amidst this, the police conducted a surprise raid on the residence of Vatal Nagaraj-the leader of the federation of Kannada organizations who had called for the bandh and was preparing for the protest-and arrested him this morning.