உச்சமடையும் காவிரி போராட்டம்.. கர்நாடகாவில் விரட்டியடிக்கப்பட்ட தமிழர்கள்.. 1991 வன்முறையில் என்ன நடந்தது?

  • பெங்களூர்: தமிழகத்துக்கு இன்று முதல் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர், மண்டியா, மைசூர் உள்பட கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்நிலையில் தான் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த 1991ம் ஆண்டில் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக வெடித்த வன்முறையில் அரங்கேறிய கொடுமைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    தமிழ்நாடு - கர்நாடகா இடையே மீண்டும் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சனை வெடித்துள்ளது. தமிழகத்துக்கு இன்று முதல் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டது. ஆனால் அதனை வழங்க கர்நாடகா மறுத்து வருகிறது.

    Advertisement

    கர்நாடகாவில் போதிய அளவு தென்மேற்கு பருவமழை இல்லை. குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் உள்ளதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா அரசு தயக்கம் காட்டுகிறது. மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூறிய காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடகா முறையீடு செய்ய தொடங்கி உள்ளது.

    இது ஒருபுறம் இருக்க தற்போது கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இன்று கர்நாடகா தலைநகர் பெங்களூர், மண்டியா, மைசூருவில் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க கூடாது என்று அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், கர்நாடகா ரக்சண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா, அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக உள்ளிட்டவை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

    Advertisement

    இதுதொடர்பாக கர்நாடகா ரக்சண வேதிகே அமைப்பின் தலைவர நாராயண கவுடா இன்று கூறுகையில்,''கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது. இதுதொடர்பாக கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பினர் பெங்களூர், மைசூரு உள்பட காவிரியால் பலன்பெறும் மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. போராட்டங்களை நடத்த உள்ளது. எங்களுக்கு பந்த் நடத்துவதில் உடன்பாடு கிடையாது. ஆனால் எதுவுமே நடக்காவிட்டால் கடைசி அஸ்திரமாக தான் பந்த் அறிவிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

    இதனால் இருமாநிலங்கள் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முக்கியமாக பெங்களூர், மைசூரில் தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் வரலாம். குறிப்பாக தமிழர்கள் மீதான தாக்குதல்கள், தமிழர்களின் வாகனங்கள், நிறுவனங்கள் குறிவைத்து அடிக்கப்படலாம் என்ற பீதி கிளம்பி உள்ளது.

    Advertisement

    இந்த அச்ச உணர்வுக்கு முக்கிய காரணம் கடந்த 1991ம் ஆண்டில் டிசம்பர் மாதம் காவிரி நீர் விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் நடந்த வன்முறை தான் முக்கிய காரணமாக உள்ளது. அதாவது கர்நாடகா - தமிழ்நாடு இடையே பலமுறை காவிரி பிரச்சனை வந்து வன்முறை வெடித்து உள்ளன. கடந்த 1996, 2000, 2004, 2016 என்று பல ஆண்டுகளில் பிரச்சனைகள் கலரவம் வெடித்து இருந்தாலும் கடந்த 1991ம் ஆண்டில் நடந்த வன்முறை தான் இன்னும் ஆறாத வடுவாக உள்ளது. கரும்புள்ளியாக இன்று வரை கர்நாடகா வரலாற்றில் உள்ளது. ஏனென்றால் அன்றைய வன்முறை என்பது மிகவும் மோசமாக அரங்கேறியது.

    Advertisement

    இந்த வன்முறை 1991 டிசம்பர் 12-13 ஆகிய தேதிகளில் நடந்தது. அதாவது தமிழகத்துக்கு காவிரியில் ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் தீர்ப்பாயத்தின் உத்தரவு உச்சநீதிமன்றத்தால் 1991 டிசம்பர் 11ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மறுநாளான டிசம்பர் 13ம் தேதி கர்நாடகாவில் வாட்டாள் நாகராஜ் பந்த் அறிவித்தார். கன்னட அமைப்பினர் பெங்களூர், மைசூரு தெருக்களில் இறங்கி தமிழர்களை குறிவைத்து தாக்கினர்.

    பெங்களூர், பெங்களூர் புறநகர், மைசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். தமிழர்களின் வீடுகள், அலுவலகங்கள் சூறையாடப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டது. பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள பிரபலமான தமிழ் பத்திரிகை அலுவலகத்தின் உள்ள வன்முறையாளர்கள் சென்று தாக்கி அங்கிருந்தவர்களை தாக்கினர். தமிழ் படங்கள் வெளியாகும்தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. லாரிகள், சரக்கு வாகனங்கள் ஏற்றி சென்ற சரக்குகளுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

    Advertisement

    இந்த வன்முறையில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும்பல ஆயிரம் தமிழர்கள் பெங்களூரை விட்டு பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு தஞ்சமடைந்தனர். தமிழ்நாடு - கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் தமிழர்கள் நடந்தும், சொந்த வாகனங்களிலும் பெங்களூர் உள்பட கர்நாடகாவை விட்டு வெளியேறினர். ஒருவாரம் வரை பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் நடந்த மிகப்பெரிய காவிரி கலவரங்களில் ஒன்றாக இது இன்று வரை உள்ளது.

    இதுதொடர்பாக இந்திய மனித உரிமைகள் தீர்ப்பாயம் வெளியிட்ட ஒரு தகவலில் 1991ம் ஆண்டு காவிரி விவகாரத்தில் நடந்த வன்முறையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவி் மொத்தம் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தற்போது பெங்களூர் உள்பட பிற இடங்களில் நடக்கும் போராட்டங்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதில் கர்நாடகா அரசு தொடக்கத்திலேயே கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    English Summary

    The Cauvery Water Regulation Committee has ordered Karnataka to release 3,500 cubic feet of water per day into the Cauvery River for Tamil Nadu, starting today. Protests have erupted across various parts of Karnataka-including Bengaluru, Mandya, and Mysuru-in opposition to this directive. Against this backdrop, let us look back at the atrocities committed against Tamils in Karnataka during the violence that broke out over the Cauvery water-sharing issue in 1991.