கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ்

  • பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா இன்று ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்றார். கர்நாடகா துணை முதல்வராக இருக்கும் டிகே சிவக்குமார் அடுத்த முதல்வராக தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் டிகே சிவக்குமார் அருகில் இருந்தும் அவரது பெயரை டிகே சிவக்குமார் கூறாத நிலையில் இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

    Advertisement

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக இருந்த சித்தராமையா இன்று தனது பதவியை ராஜனாமா செய்தார். முதல்வர் பதவியை பெற துணை முதல்வர் டிகே சிவக்குமார் போர்க்கொடி உயர்த்தியதால் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    Advertisement

    இதற்கான கடிதத்தை இன்று ஆளுநர் மாளிகையில் வழங்கினார். ஆளுநர் இல்லாததால் ஆளுநர் மாளிகையின் தனி செயலாளரிடம் சித்தராமையா ராஜினாமா கடிதம் வழங்கினார். அதன்பிறகு சித்தராமையா தனது அரசு இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது முதல்வர் பதவி வழங்கிய சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவிற்கு நன்றி தெரிவித்தார்.

    இந்த சமயத்தில் சித்தராமையாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். முதல்வர் பதவி ராஜினாமா செய்த பிறகு எந்த பொறுப்பு வகிக்க உள்ளீர்கள்? என்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, சித்தராமையா, ''கட்சி மேலிடம் தலைவர்கள் ராஜ்யசபா செல்லும்படி கூறினார்கள். ஆனால் நான் வேண்டாம் என்று கூறினேன். எனக்கு தேசிய அரசியலில் விருப்பம் இல்லை. மாநில அரசியலிலேயே இருக்கிறேன் என்று சொன்னேன்.

    Advertisement

    என்னை 5 ஆண்டு எம்எல்ஏவாக மக்கள் தேர்வு செய்துள்ளனர். இதில் இன்னும் 2 ஆண்டு பாக்கி உள்ளது. இதனால் 2 ஆண்டுகள் வரை எம்எல்ஏவாகவே தொடர இருக்கிறேன். கர்நாடகா மக்கள் மற்றும் என்னுடைய தொகுதி மக்களுக்காக செயல்பட உள்ளேன். நான் தொடர்ந்து அரசியலில் இருப்பேன். நான் மதவாத சக்திகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளேன். அதனை தொடர்ந்து செய்வேன்'' என்றார்.

    இதையடுத்து அவரிடம், ''திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் என்ன?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ''நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். கட்சி மேலிடம் எப்போது ராஜினாமா செய்யும்படி கேட்கிறார்களோ? அப்போது ராஜினாமா செய்வேன் என்று கூறியிருந்தேன். ராஜினாமா செய்யும்படி இப்போது கட்சி மேலிடம் என்னை வற்புறுத்தவில்லை. நான் சுயவிருப்பத்தின் அடிப்படையிலும், கட்சி மேலிடம் கேட்டு கொண்டதன் அடிப்படையிலும் ராஜினாமா செய்துள்ளேன்'' என்றார்.

    Advertisement

    அதன்பிறகு பத்திரிகையாளர்கள், ''அடுத்த முதல்வர் யார்?'' என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு சித்தராமையா,''கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி மேலிடம் தேர்வு செய்யும் நபர் தான் அடுத்த முதல்வர். இப்போதைக்கு இது போதும் என்று நடக்கிறேன். விடுங்க.'' என சிரித்தபடி எழுந்து சென்றார். கர்நாடகாவின் அடுத்த முதல்வராக தற்போதைய துணை முதல்வர் டிகே சிவக்குமார் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் பத்திரிகையாளர்கள் சித்தராமையாவிடம் கேள்வி கேட்டனர். ஆனால் சித்தராமையா டிகே சிவக்குமார் தான் அடுத்த முதல்வர் என்பதை கூற மறுத்துவிட்டு நழுவி சென்றார்.

    Advertisement

    அதேபோல் டிகே சிவக்குமார் தொடர்பான செய்திகளுக்காக தனியாக வாட்ஸ்அப் குழு உள்ளது. இந்த குழுவில் பத்திரிகையாளர்கள் உள்ளனர். இன்று மதியம் சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உடன் இந்த குழுவில் டிகே சிவக்குமாரின் முழுமையான பயோடேட்டா விவரம் பகிரப்பட்டது. அடுத்த முதல்வர் டிகே சிவக்குமார் தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தகவல் பகிரப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் இந்த மெசேஜ் அழிக்கப்பட்டது. இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இருப்பினும் அடுத்த முதல்வர் டிகே சிவக்குமார் தான். இன்னும் அவரது பெயரை கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் தான் சித்தராமையா அவரது பெயரை கூறவில்லை. அதேபோல் வாட்ஸ்அப் குழுவிலும் டிகே சிவக்குமார் பயோ தொடர்பான விவரம் பகிரப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டிகே சிவக்குமார் தான் அடுத்த முதல்வர்.. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Siddaramaiah of the Congress party resigned as the Chief Minister of Karnataka today. Following this, he met with journalists. However, when asked who the next Chief Minister would be, he left without providing an answer. It is reported that D.K. Shivakumar, the current Deputy Chief Minister of Karnataka, is likely to be selected as the next Chief Minister. Yet, the fact that Siddaramaiah did not mention D.K. Shivakumar's name-despite the latter being present right beside him-has now sparked a debate.