1947ல் தங்கத்தில் ரூ.1,000 முதலீடு.. இன்று 1,711 மடங்கு லாபம்.. தங்கம் vs வெள்ளி எது பெஸ்ட்?

  • சென்னை: இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டில் வெறும் 1000 ரூபாயை நாம் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் இன்று நமக்கு எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் தெரியுமா? தங்கம் என்பது எப்போதுமே இந்தியர்களின் முக்கிய முதலீடாக இருக்கும் சூழலில், 1947ல் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் அது எந்தளவுக்கு உயர்ந்திருக்கும் என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    நமது நாட்டில் பொதுமக்கள் எப்போதுமே முதல் சேமிப்பாக தங்கத்தையே பார்ப்பார்கள். ஏழை மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை அனைவருமே முடிந்த வரை முதலில் தங்கத்தையே வாங்க பார்ப்பார்கள். அப்படி சுதந்திரம் அடைந்தபோது நாம் 1000 ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால் இப்போது அது எந்தளவுக்கு நமக்கு லாபம் கொடுத்திருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    எவ்வளவு லாபம்?

    1947ல் நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் ரூ.88.62. இப்போதே அதே 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.51 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மற்றும் மத்திய அரசின் டேட்டாவின்படி, 1947ல் 10 கிராம் தங்கத்தின் சராசரி விலை ரூ.88.62ஆக இருந்தது. இப்போதைய ரேட் உடன் ஒப்பிட்டால் 79 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 1,711 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, 1947ல் 1,000 ரூபாய்க்கு தங்கத்தை வாங்கியிருந்தால் இன்று அது ரூ.17.1 லட்சமாக இருக்கும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் தங்கம் சராசரியாக சுமார் 9.9 சதவீதம் நமக்கு லாபம் கொடுத்திருக்கும்.

    Advertisement

    தங்கம் விலை

    அதேநேரம் இங்கு நாம் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தங்கத்தின் விலை சுதந்திரத்துக்கு பிறகு தொடர்ந்து ஒரே வேகத்தில் உயரவில்லை. 1950ல் 10 கிராம் தங்கம் ரூ.99.18ஆக இருந்த தங்கம் விலை, 1964ல் ரூ.63.25 ஆக சரிந்தது. அதன் பிறகு விலை மீண்டும் உயர தொடங்கியது. 1970ல் ரூ.184.50ஆக இருந்த தங்கம், 1980ல் முதல்முறையாக ரூ.1000ஐ கடந்து, ரூ.1,330ஆக விற்கப்பட்டது.

    அதன் பிறகு ஆண்டுகள் செல்ல செல்ல தங்கம் உயரும் வேகமும் அதிகரித்தது. 2000-01ல் 10 கிராம் தங்கத்தின் சராசரி விலை ரூ.4,473.60ஆக இருந்தது. 2010-11ல் இது ரூ.19,227.08ஆகவும், 2020-21ல் ரூ.48,723.22 ஆகவும் உயர்ந்தது. 2024-25 இது ஜெட் வேகத்தில் உயர்ந்து ரூ.75,841.87ஐ தொட்ட நிலையில், அதன் பிறகு மேலும் வேகமாக உயர்ந்து இப்போது ரூ.1.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

    Advertisement

    வெள்ளி விலை

    தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் பல ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை 1970 முதல் நமக்கு டேட்டா கிடைக்கிறது. அப்போது ஒரு கிலோ வெள்ளியின் சராசரி விலை வெறும் ரூ.536.08. இப்போது வெள்ளி விலை ரூ.2 லட்சத்திற்கு மேல் போய்விட்டது. அதாவது 1970-71 உடன் ஒப்பிடும்போது வெள்ளியின் விலை சுமார் 370 மடங்கு உயர்ந்துள்ளது.

    தங்கத்தை விட வெள்ளியின் விலையே அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. 1979ல் ஒரு கிலோவுக்கு ரூ.2,000ஐ கடந்த வெள்ளி அதன் பிறகு பல முறை சரிந்துள்ளது. 2012ல் ரூ.57,315.87க்கு விற்கப்பட்ட வெள்ளியின் விலை, 2016ல் ரூ.36,318.10 ஆகக் குறைந்தது. அதன் பிறகே மெல்ல அதிகரித்தது. கடந்த சில ஆண்டுகளில் தான் வெள்ளியும் தங்கத்தை போலவே உச்சம் தொட்டது.

    Advertisement

    தங்கம் vs வெள்ளி

    1980களில் இருந்து இப்போது வரை உள்ள டேட்டாவை வைத்து பார்க்கும் போது வெள்ளியை விட தங்கம் தான் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தங்கம் சுமார் 76 மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம் வெள்ளி சுமார் 55 மடங்கு வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்!

    English Summary

    A ₹1,000 investment in gold in 1947 could have grown to around ₹17.1 lakh today(லாபத்தை அள்ளி கொடுக்கும் தங்கம்): Gold vs Silver Returns latest news in tamil.