ஐடி மேனேஜர்களுக்கு வேட்டு வைக்கும் AI.. கான்டெக்ஸ்ட் இன்ஜினியரிங் தொழில்நுட்பம்.. CTS செய்த புரட்சி!

  • கார்ப்பரேட் நிறுவனங்களில் காலம் காலமாகப் பேசப்பட்டு வரும் ஒரு பெரும் பிரச்சனை 'அலுவலக அரசியல்'. குறிப்பாக, இரவு பகலாக உழைக்கும் கீழ்மட்ட ஊழியர்கள் அல்லது தங்கள் அணியைச் சேர்ந்தவர்கள் கொடுக்கும் புதுமையான பிசினஸ் ஐடியாக்கள் மற்றும் திட்டங்களை, சில ஐடி மேனேஜர்கள் மேல்மட்ட நிர்வாகத்திடம் கொண்டு செல்லவே மாட்டார்கள்.

    Advertisement

    இதற்குத் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோ அல்லது வேறு சில நிர்வாகக் காரணங்களோ பின்னணியில் இருக்கலாம், இல்லையெனில் ஊழியர்கள் சொல்லும் ஐடியாவை மேனேஜர்கள் புரிந்துக்கொள்ள கூடிய திறன் இல்லாமலும் இருக்கலாம். இத்தகைய மேனேஜர்களின் பாகுபாடான மனபான்மைக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நிரந்தர செக் வைத்துள்ளது.

    Advertisement

    இனி மேனேஜர்களைத் தாண்டி சாதாரண ஊழியர்களின் திறமையான ஐடியாக்களையும், கருத்துக்களையும் நிர்வாகம் நேரடியாகக் கண்டறிந்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வர்த்தகத்தை பெற முடியும் என்பதை ஏஐ நிதர்சனமாக நிரூபித்துக் காட்டியுள்ளது.

    ரகசியங்களைக் கண்டறியும் 'கான்டெக்ஸ்ட் இன்ஜினியரிங்'

    ஐடி சேவை துறையில் முன்னணியில் இருக்கும் காக்னிசன்ட் (Cognizant) நிறுவனம் இந்த புதிய ஏஐ புரட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் 'கான்டெக்ஸ்ட் இன்ஜினியரிங்' (Context Engineering) என்ற அதிநவீன ஏஐ தொழில்நுட்ப அமைப்பைப் பயன்படுத்தி, தனது ஊழியர்களின் அன்றாட மின்னஞ்சல்கள் (official Emails), ஆன்லைன் மீட்டிங்குகள், ஊழியர்கள் மத்தியிலான Chat-கள் மற்றும் பிற உள் நிர்வார உரையாடல்களைத் துல்லியமாக ஆய்வு செய்துள்ளது.

    Advertisement

    இதன் மூலம் விற்பனை, டெலிவரி, வாடிக்கையாளர் ஆதரவு எனப் பல பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களின் தொடர்புகளில் புதைந்து கிடக்கும் நுட்பமான பிசினஸ் சிக்னல்களை இந்த ஏஐ அமைப்பு கண்டறிந்துள்ளது.

    நடைமுறையில் இருக்கும் விற்பனை வழிகளில் (Traditional Sales Channels) ஒருபோதும் வெளிவராத பல புதிய வர்த்தக வாய்ப்புகளை, ஊழியர்களின் இந்தச் சிதறிய தகவல்களிலிருந்து ஏஐ சாதுரியமாக ஒருங்கிணைத்து நிர்வாகத்தின் கைகளில் கொடுத்துள்ளது.

    200 மில்லியன் டாலர் வருவாய்.. சிஇஓ ரவி குமார் அதிரடி!

    ஊழியர்களின் இந்த சாதாரண மின்னஞ்சல்கள் மற்றும் சாட்களை ஏஐ மூலம் அலசி ஆராய்ந்ததன் விளைவாக, காக்னிசன்ட் நிறுவனம் சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    கடந்த வாரம் நடைபெற்ற காக்னிசென்ட் நிறுவனத்தின் 'ஏஐ கூட்டத்தில்' (AI Forum) பேசிய இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ரவி குமார் இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஊழியர்களின் கணினிகளில் உள்ள தகவல்களை சல்லடை போட்டுத் தேடிய இந்த முயற்சியின் மூலமே 200 மில்லியன் டாலர் வருவாய் வாய்ப்பு ஈட்டப்பட்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    மேலும், இந்த ஏஐ வேட்டையின் மூலம் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய பிசினஸ் வாய்ப்புகளை உருவாக்கக் காக்னிசன்ட் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    தனிநபர் தகவல் பாதுகாப்பு

    இந்த சாட் மெசேஜ் மற்றும் ஈமெயில் மூலம் ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் எடுக்கப்படாது, காரணம் காக்னிசென்ட் நிறுவனத்தின் இந்த கான்டெக்ஸ்ட் இன்ஜினியரிங் ஏஐ தளம் ஊழியர்களின் அதிகாரப்பூர்வ ஈமெயில், அதிகாரப்பூர்வ அலுவலக கம்பியூட்டர்/லேப்டாப் ஆகியவற்றில் இருந்து தான் தகவல்களை சேர்க்கிறது.

    Advertisement

    பொதுவாக ஐடி நிறுவனங்களில் கொடுக்கப்படும் கம்பியூட்டர்/லேப்டாப் ஆகியவற்றில் தனிப்பட்ட விபரங்கள் எதையும் சேர்க்க முடியாது. இதேபோல் இவை ஏற்கனவே நிறுவனத்தால் கண்காணிக்கப்படுபவை என்பதால் தனிநபர் தகவல்களுக்கு பாதிப்பு இல்லை.

    காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த ஏஐ தொழில்துறையிலும் ஒரு மிகப் பெரிய மாற்றத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

    Meta நிறுவனத்தில் ஆரம்பம்

    காக்னிசென்ட் நிறுவனத்தை தொடர்ந்து தற்போது மெட்டா (Meta) நிறுவனமும் இதே பாணியில் ஒரு புதிய மென்பொருளைத் தனது ஊழியர்களின் கணினிகளில் நிறுவிச் சோதனை செய்யத் தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

    ஊழியர்களின் மவுஸ் அசைவுகள் (Mouse Movements), கிளிக்குகள் மற்றும் கீஸ்ட்ரோக்குகளை (Keystrokes) துல்லியமாகப் படம்பிடித்து, பணியிடப் பணிகளை அப்படியே நகலெடுக்கக்கூடிய புதிய ஏஐ முகவர்களை (AI Agents) பயிற்றுவிக்கும் நோக்கில் மெட்டா களமிறங்கியுள்ளது.

    Advertisement

    ஏஐ-க்கு நன்றி

    டெக் நிறுவனங்களின் இத்தகைய அதிரடி ஏஐ நகர்வுகளால், கார்ப்பரேட் உலகில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஐடி மேனேஜர்களின் நிலைமை இனி வரும் காலங்களில் மிகவும் கவலைக்கிடமாக மாறும் என்று மனிதவள நிபுணர்கள் கருதுகின்றனர்.

    திறமையான ஊழியர்களின் ஐடியாக்களை முடக்கி வைத்துத் தங்களின் பதவியைத் தக்கவைக்க நினைக்கும் சில மேனேஜர்களின் ஆதிக்கம் முற்றிலுமாகக் குறைந்து, உண்மையான உழைப்புக்கும் திறமைக்கும் ஏஐ மூலமாக நேரடி அங்கீகாரம் கிடைக்கும் புதிய கார்ப்பரேட் சகாப்தம் ஏஐ மூலம் தற்போது பிறந்துள்ளது.

    English Summary

    Cognizant has used its advanced ‘Context Engineering’ AI system to analyze employee emails, meetings, chats and internal communications, unlocking an additional $200 million in sales pipeline by identifying hidden business opportunities. The company expects this figure to reach $1 billion by year-end, while Meta is also deploying similar AI tools to capture workplace activities for training autonomous agents.