இந்த கையில் தங்கம்.. அந்த கையில் காசு! படபடவென உயரும் தங்க நகைக் கடன்! இவ்வளவு பெரிய வளர்ச்சியா?

  • டெல்லி: இந்தியாவில் தங்க நகையை அடமானமாக வைத்து பெறப்படும் கடன்கள் கடந்த ஒரு ஆண்டில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. பாதுகாப்பான கடன்களை நோக்கி மக்கள் அதிகம் நகர்ந்து வந்த சூழலில், தங்க நகைக் கடன்களே தற்போது சில்லறை கடன் சந்தையின் மிகப்பெரிய வளர்ச்சி சக்தியாக மாறியுள்ளதாக க்ரிஃப் ஹை மார்க் (CRIF High Mark) கூறியுள்ளது.

    Advertisement

    கடன் தகவல் மற்றும் மதிப்பீட்டு நிறுவனமான க்ரிஃப் வெளியிட்டுள்ள "இந்தியாவின் கடன் நிலவரம்" அறிக்கையின்படி, 2026 மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் மொத்த சில்லறை கடன் நிலுவை தொகை 170.2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    Advertisement

    இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 16.6 சதவீத வளர்ச்சியாகும். காலாண்டு அடிப்படையில் 4.6 சதவீத உயர்வும் பதிவாகியுள்ளது. இதில் அதிக வளர்ச்சி கண்டிருப்பது தங்கக் கடன்கள் தான். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தங்கக் கடன் நிலுவை தொகை 50.4 சதவீதம் உயர்ந்து 18.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    க்ரிஃப் ஹை மார்க் அறிக்கை

    மூன்று மாத கால அளவிலேயே 15 சதவீத உயர்வு ஏற்பட்டிருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. சர்வதேச சந்தையில் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, அதிக தொகைக்கான கடன்கள் வழங்கப்படுவது மற்றும் விதிமுறை மாற்றங்கள் போன்றவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. அதேநேரத்தில், வீட்டு கடன் சந்தையும் நிலையான வளர்ச்சியைத் தொடர்ந்து வருகிறது. வீட்டு கடன் நிலுவை தொகை 44.4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 9.4 சதவீத வளர்ச்சியாகும்.

    Advertisement

    தங்க நகை கடன்

    இதுகுறித்து கடன் வளர்ச்சித் துறை நிபுணரான மோகித் ஜெயின் கூறுகையில், "வீட்டு கடன்களுக்கு அடுத்தபடியாக தங்கக் கடன்களே தற்போது சில்லறை கடன் சந்தையில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளன. மக்கள் தங்கத்தை எதிர்கால பாதுகாப்பாக மட்டுமல்லாமல், உடனடி நிதி தேவைகளுக்கான நம்பகமான ஆதாரமாகவும் பார்க்க தொடங்கியுள்ளனர்" என்றார். மேலும், "சிறிய தொகை கடன்களை விட பெரிய அளவிலான தங்கக் கடன்களை மக்கள் அதிகம் பெற தொடங்கியுள்ளனர். தொழில், வருமானம் உருவாக்கும் தேவைகள் போன்றவற்றுக்கும் தங்கக் கடன்கள் பயன்படுத்தப்படுகின்றன" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தனிநபர் கடன்

    அதேபோல், Aditya Birla Housing Finance நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பங்கஜ் கட்கில் கூறுகையில், "இந்தியாவின் வீட்டு கடன் சந்தை இன்னும் வலுவாக உள்ளது. நகரமயமாக்கல், மக்கள் தொகை உயர்வு மற்றும் வாங்கும் திறன் அதிகரிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள்" என்றார். தனிநபர் கடன்களும் 12.9 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. மின்சாதன பொருட்கள் வாங்கும் கடன்கள் 20.8 சதவீதம் உயர்ந்துள்ளன. வாகனக் கடன்களிலும் வளர்ச்சி இருந்தாலும், பண்டிகை காலத்துக்குப் பிறகு புதிய கடன் பெறும் வேகம் குறைந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

    இருசக்கர வாகனக் கடன்

    குறிப்பாக இருசக்கர வாகனக் கடன் விண்ணப்பங்கள் 22 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளன. கார் மற்றும் பிற வாகனக் கடன்களும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது சரிவைக் கண்டுள்ளன. இதற்கிடையில், பாதுகாப்பற்ற கடன்களுடன் ஒப்பிடும்போது, தங்கம் மற்றும் வீடு போன்ற சொத்துகளை அடமானமாக வைத்து வழங்கப்படும் பாதுகாப்பான கடன்களில் தவணை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம், இந்தியாவில் மக்கள் தற்போது அதிக ஆபத்தில்லாத பாதுகாப்பான கடன்களையே தேர்வு செய்ய தொடங்கியிருப்பதையும், அதில் தங்கக் கடன்கள் முன்னிலை வகித்திருப்பதாக அந்நிறுவனத்தை காட்டுவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    Gold loans in India surged over 50 percent in a year as rising gold prices and demand for secured borrowing boosted retail credit growth sharply.