ஆயில் நிறுவனங்களின் ‘அதிர்ஷ்ட லாபத்திற்கு’ செக் வைத்த மத்திய அரசு.. ஏற்றுமதி வரி உயர்வு

  • சென்னை: டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான 'விண்ட்ஃபால்' வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. எனினும், பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ. 13.5-லிருந்து ரூ. 14-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ. 9.5-லிருந்து ரூ. 12.5-ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ. 1.5 என்ற அளவில் மாற்றமின்றி தொடர்கிறது.

    Advertisement

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எகிறும்போது, உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் 'அதிர்ஷ்ட லாபத்தில்' திளைப்பது வழக்கம். பின்னர் மத்திய அரசு தலையிட்டு அதற்கு முட்டுக்கட்டை போடுவதும் உலகளாவிய எரிசக்தி அரசியலில் ஒரு தொடர்கதை. அந்த வகையில், தற்போது ஜூன் 16 முதல் அமலுக்கு வரும் வகையில், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான விண்ட்ஃபால் வரியை (Windfall Tax) மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

    Advertisement


    யாருக்கு லாபம்

    மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இந்த அதிரடி மாற்றங்கள் என்னென்ன? இதனால் யாருக்கு லாபம்? உலக நாடுகளை இது எப்படிப் பாதிக்கும்? எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியச் சாமானியர்களின் பாக்கெட்டை இது பதம் பார்க்குமா? என்பதை பொருளாதார நிபுணர்களின் பார்வையில் தெளிவாக பார்ப்போம்.

    புதிய வரி விகிதங்கள் என்னென்ன?

    மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அடுத்த இரண்டு வாரங்களுக்கான மாற்றி அமைக்கப்பட்ட வரி விபரம் : டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் உற்பத்தி வரி (SAED) லிட்டருக்கு ரூ.13.5-ல் இருந்து ரூ.14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஏடிஎஃப் எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.9.5-ல் இருந்து ரூ.12.5 ஆக கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரி லிட்டருக்கு ரூ.1.5 என்ற பழைய நிலையிலேயே நீடிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை.

    Advertisement

    மத்திய அரசு ஏன் இந்த வரியை உயர்த்தியது?

    இந்த வரி உயர்வுக்குப் பின்னால் இருக்கும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் காரணங்களை உற்று நோக்கினால், அதில் மத்திய அரசின் தெளிவான சாணக்கியத்தனம் புலப்படும். மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு நாடுகள்) நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பகட்டத்திலேயே முடங்கிக் கிடப்பதால், கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஒரு தேக்கநிலை உள்ளது. இதைப் பயன்படுத்தி, இந்தியாவின் முன்னணி தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் (உதாரணமாக ரிலையன்ஸ், நயாரா போன்றவை) தங்களுக்குக் கிடைக்கும் கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து, வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்க்க முயல்கின்றன. உழைப்பே இல்லாமல் போர்ச் சூழலால் கிடைக்கும் இந்த 'அதிர்ஷ்ட லாபத்திற்கு' (Windfall Profit) செக் வைக்கவே அரசு வரியைக் கூட்டியிருக்கிறது.

    Advertisement

    உள்நாட்டு விநியோகப் பாதுகாப்பு

    தனியார் நிறுவனங்கள் லாப வெறியில் மொத்த எரிபொருளையும் வெளிநாடுகளுக்குக் கப்பல் ஏற்றிவிட்டால், இந்தியாவிற்குள் டீசல் மற்றும் ஏடிஎஃப் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்றுமதி வரியை உயர்த்தும்போது, நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் விற்பதை விட உள்நாட்டில் விற்பதே லாபகரமாகத் தோன்றும். இதன் மூலம் இந்தியாவின் எரிசக்தித் தேவை தடையின்றிப் பூர்த்தியாகும்.

    உலக அளவில் இதன் தாக்கம் என்ன? எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்?

    இந்தியாவின் இந்த அதிரடி உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கை, சர்வதேச சந்தையில் சில மாற்றங்களை ஏற்படுத்தப் போவது உறுதி. முக்கியமாக, ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட டீசலை பெருமளவில் நம்பியிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதனால் பாதிக்கப்படலாம். மேலும், இந்தியாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் சில ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும், இந்திய நிறுவனங்கள் வரியைக் காரணம் காட்டி விலையை உயர்த்தினால், இறக்குமதிச் செலவு அதிகரிக்கும்.

    Advertisement

    இந்திய சாமானிய மக்களை இது பாதிக்குமா?

    நிச்சயமாக இல்லை! இந்திய மக்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை, மாறாக நன்மையே அதிகம்.

    பொதுவாக எரிபொருள் மீதான வரி உயர்வு என்றதும், "ஐயோ! நாளை முதல் வண்டிக்கு டீசல் போட கூடுதல் காசு கொடுக்க வேண்டுமா?" என்ற பயம் நடுத்தர மக்களிடம் எழுவது இயல்பு தான். ஆனால், இந்த அறிவிப்பில் மத்திய அரசு மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் - உள்நாட்டுச் சந்தையில் விற்கப்படும் பெட்ரோல், டீசலுக்கான வரிகளில் எந்த மாற்றமும் இல்லை.

    நிதர்சனம் என்ன

    இது முழுக்க முழுக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் பங்குச்சந்தையில் இருக்கும் ரிலையன்ஸ் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வரம்பு சற்றே குறையுமே தவிர, இந்தியச் சாமானியர்களின் பாக்கெட்டில் இருந்து ஒரு பைசா கூடக் கூடுதலாகப் போகாது. மாறாக, நம் நாட்டு டீசல் நமக்கே கிடைப்பது உறுதி செய்யப்படுவதால், உள்நாட்டில் தட்டுப்பாடோ அல்லது விலை உயர்வோ வராமல் தடுக்கப்படும் என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.

    English Summary

    Govt hiked export duties on diesel to Rs 14/litre & ATF to Rs 12.5/litre to check oil firms' windfall profits and secure domestic supply. Domestic fuel prices remain unaffected.