விஜய் அரசு தரும் 8 கிராம் தங்கம் ஆண்டுக்கு எத்தனை பேருக்கு கிடைக்கும்.. டிகோடிங்

  • சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்களை கவரும் வகையில், அண்ணன் சீர் திட்டம், தாய்மாமன் மோதிரம் திட்டம் என்று கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர் அண்ணன் சீர்திட்டத்தின் மூலமாக 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என்றும் இதற்காக 812 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரியா வில்சன் அறிவித்துள்ளார். எத்தனை பேருக்கு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

    Advertisement

    அண்ணன் சீர்திட்டத்தின் படி வழங்கப்படும் 8 கிராம் தங்க நாணயம் என்பது ஒரு சவரன் ஆகும். ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் திருமணம் நடைபெறுவதாக கணக்கிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை பெறும் குடும்பங்களே மொத்தமாக 1.31 கோடி குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு தான் அரசு தங்க நாணயம் வழங்க அரசு முன்னுரிமை வழங்கும்.

    Advertisement

    இப்போது நேரடியாக கணக்கிற்கு செல்வோம்.. 2025 ஆம் ஆண்டு இறுதி வரை தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 2.25 கோடி முதல் 2.27 கோடி ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில், 2026-ல் மொத்தக் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2.28 கோடியைக் கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், 2025 உடன் ஒப்பிடுகையில், 2026-ல் புதிய ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2 லட்சம் தம்பதிகள் புதிய ரேஷன் கார்டு பெறுகிறார்கள். அதாவது தம்பதிகளாக கார்டு பெறுகிறார்கள். இவர்களில் 21வயது கடந்த மகளிருக்கு தான் 8 கிராம் தங்கம் என்று அரசு அறிவித்தால் பெருமளவு, இந்த எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    21 வயதுக்குட்பட்ட மணப்பெண்கள் சுமார் 30% எனக் கணக்கிட்டால் 60,000 பேர் தகுதியை இழப்பார்கள். 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மணப்பெண்கள் என்றால், சுமார் 70% எனக் கணக்கிட்டால் கூட 1,40,000 பேர் மட்டுமே தகுதி பெறுவார்கள், 2 லட்சம் தம்பதிகளில் சுமார் 50,000 முதல் 70,000 தம்பதிகள் வரை இந்தத் திட்டத்தின் கீழ் தங்கம் பெறத் தகுதியற்றவர்களாக மாறுவார்கள். மகளிர் உரிமை தொகை போல், இதற்கும் 21 வயது நிபந்தனை விதிக்கப்படலாம். பெண் கல்வியை ஊக்குவிக்கவும், இளம் வயது திருமணங்களைத் தவிர்க்கவும் உதவியாக இருக்கும் என அரசு நியாயப்படுத்த வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 1.40 லட்சம் பேர் தகுதியானவர்களாக இருப்பார்கள்.. இவர்களில் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் என்று அரசு நிபந்தனை வைத்தால் சுமார் 50,000 முதல் 55,000 பேர் தகுதி பெற மாட்டார்கள். இறுதியாக சுமார் 85,000 முதல் 90,000 பேர் மட்டுமே இறுதியாக 8 கிராம் தங்க நாணயம் பெற தகுதி பெறுவார்கள்.

    பட்டுப்புடவை செலவு: ரூ.2,000

    8 கிராம் தங்க நாணயம் செலவு: ரூ.85,000 முதல் ரூ.90,000 வரை

    குறைந்தபட்சக் கணக்கீடு (தங்கம் ரூ.85,000): ரூ.85,000 + ரூ.2,000 = ரூ.87,000

    Advertisement

    அதிகபட்சக் கணக்கீடு (தங்கம் ரூ.90,000): ரூ.90,000 + ரூ.2,000 = ரூ.92,000

    85,000 முதல் 90,000 பேருக்கு வழங்கும் பட்சத்தில் தேவைப்படும் நிதி
    85,000 பயனாளிகளுக்கு:

    குறைந்தபட்சச் செலவு (ரூ.87,000 வீதம்): ரூ.739.5 கோடி

    அதிகபட்சச் செலவு (ரூ.92,000 வீதம்): ரூ.782 கோடி

    90,000 பயனாளிகளுக்கு

    குறைந்தபட்சச் செலவு (ரூ.87,000 வீதம்): ரூ.783 கோடி

    அதிகபட்சச் செலவு (ரூ.92,000 வீதம்): ரூ.828 கோடி

    அதிகபட்சமாக 93,333 பேருக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கிவிட முடியும். இன்னும் சில பயனாளிகள் கூடுதலாக வந்தாலும் வரலாம். சுமார் ஒரு லட்சம் பேர் என்ற இலக்குடன் அரசு 8 கிராம் தங்க நாணயம் திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதாகவே தெரிகிறது. அதேநேரம் தங்கம் விலை எதிர்காலத்தில் உயரும் பட்சத்தில், அரசு பட்டுப்புடவையின் டெண்டர் தொகையைக் குறைக்கவோ அல்லது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவோ வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

    English Summary

    How many people receive the 8 grams of gold provided by the Vijay government annually? — Decoding the details.