மாத சம்பளம் வாங்குவோருக்கு இனி டபுள் தான்.. பிஎஃப் பங்களிப்பு இனி எப்படி இருக்கும்.. விவரம்

  • டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பிடித்தம் செய்வதற்கான மாதாந்திர அடிப்படைச் சம்பள உச்சவரம்பை மத்திய அரசு ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்தியுள்ளது. இது கடந்த செப்டம்பர் 17-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு அடிப்படைச் சம்பள உச்சவரம்பு ₹15,000 ஆக இருந்தபோது, ஊழியர்கள் தங்களின் பிஎஃப் சேமிப்பிற்காக மாதம் ₹1,800 வரை செலுத்தி வந்தனர். இனி ₹25,000 வரை சம்பளம் பெறுபவர்கள் ₹3,000 (சம்பளத்தில் 12%) பிஎஃப் கணக்கிற்குப் பங்களிப்பார்கள். இதுதவிர, வேலை வழங்கும் நிறுவனத்தின் பங்களிப்பு (3.67%) ₹550-லிருந்து ₹917 ஆக உயரும். இதன் மூலம் கட்டாய மாத பிஎஃப் பங்களிப்புத் தொகை ₹3,917 ஆக உயர்ந்துள்ளது.

    Advertisement

    வேலை வழங்கும் நிறுவனங்களின் பங்களிப்பிலிருந்து 8.33% பங்களிப்பான ₹2,083 இனி ஓய்வூதிய நிதியத்திற்கு (EPS) செல்லும் (இதற்கு முன்பு இது ₹1,250 ஆக இருந்தது). ஒரு ஊழியரின் மாத அடிப்படைச் சம்பளம் ₹20,000 ஆக இருந்தால், அவரது கட்டாய பிஎஃப் பங்களிப்பு ₹3,134 ஆக இருக்கும். இதில் ஊழியரின் பங்கு ₹2,400 மற்றும் வேலை வழங்கும் நிறுவனத்தின் பங்கு ₹734 ஆகும். மேலும், நிறுவனத்தின் பங்கிலிருந்து இனி ₹1,666 ஓய்வூதிய நிதியத்திற்குச் செல்லும்.

    Advertisement

    அதேவேளையில், ஒரு ஊழியர் மாதம் ₹35,000 சம்பாதித்தால், அவரது கட்டாய பிஎஃப் பங்களிப்பு ₹6,000 ஆக இருக்கும் (ஊழியர் மற்றும் வேலை வழங்குநர் இருவரிடமிருந்தும் தலா ₹3,000). ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது EPFO ஊதிய உச்சவரம்பை மீறாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், உச்சவரம்பைத் தாண்டி ஊதியம் பெறுபவர்களுக்கு இதில் எந்தத் தொகையும் ஓய்வூதிய நிதியத்திற்குச் செல்லாது என்று அரசு வெளியிட்டுள்ள கேள்வி-பதில் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில், மாத அடிப்படைச் சம்பளம் ₹15,000-க்கும் குறைவாக உள்ள தொழிலாளர்கள் பிஎஃப் அமைப்பில் சேருவதைக் கட்டாயமாக்கியுள்ளது. அதுபோல 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    Advertisement

    முன்பு ₹15,000-க்கும் மேல் அடிப்படைச் சம்பளம் பெறும் தொழிலாளர்கள் பிஎஃப் அமைப்பில் கட்டாய உறுப்பினராகச் சேர்க்கப்படாமல் இருந்தனர். இந்த ₹15,000 ஊதிய உச்சவரம்பு என்பது கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்பு 2004-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை இந்த உச்சவரம்பு உயர்த்தப்படாமல் இருந்தது.

    2014-ல் ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டதிலிருந்து தற்போது வரை பல மாநிலங்களிலும், பல்வேறு தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமும் தற்போதைய வரம்பிற்கு நெருக்கமாக உயர்ந்தது. இதனிடையே, கடந்த 16-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதிய உச்சவரம்பை ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதலின் மூலம் கூடுதலாக 51 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிஎஃப் அமைப்பில் புதிய உறுப்பினர்களாகச் சேரவுள்ளனர்.

    Topics: #epfo #pf

    English Summary

    If an employee earns ₹35,000 per month, the mandatory PF contribution amounts to ₹6,000 (comprising ₹3,000 each from the employee and the employer). With the increase in the wage ceiling, the monthly PF contribution is expected to rise to ₹3,917.