சொந்த வீடு இல்லாமலேயே வாடகை வருமானம்.. அது எப்படி தெரியுமா! அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

  • சென்னை: நிலையான வருமானம் வாடகையாக வரும் என்ற சிந்தனையே இந்தியர்கள் ரியல் எஸ்டேடில் முதலீடு செய்ய பிரதான காரணமாக இருக்கிறது. இப்போது அனைத்து ஊர்களிலும் ரியல் எஸ்டேட் விலை தாறுமாறாக எகிறிவிட்ட நிலையில், அனைவராலும் கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டு வீடுகளை வாங்க முடியாது. ஆனால், சொந்தமாக வீடு இல்லாமலேயே வாடகை வருமானத்தை ஈட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    சொந்தமாக வீடு வைத்திருப்போருக்கு மாதம் மாதம் வாடகை வருமானம் வரும் என்பது உண்மை தான். ஆனால் பராமரிப்பு செலவு, வாடகைக்கு ஆள் கிடைக்காத காலங்கள், வாடகையில் இருப்போர் பிரச்சினை செய்வது என பல சவால்களும் உள்ளன. ஆனால், இந்த சவால்கள் எதுவுமே இல்லாமல் வாடகை வருமானம் கிடைக்குமா.. கிடைக்கும்! அதுதான் REIT மற்றும் InvIT.

    Advertisement

    ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு REIT மற்றும் InvIT ஆகியவை பிரதான ஆப்ஷனாக இருக்கிறது.

    REIT என்றால் என்ன?

    REIT என்பது Real Estate Investment Trust என்பதன் சுருக்கம். வருமானம் ஈட்டும் அலுவலக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், கிடங்குகள், ஹோட்டல்கள் போன்ற ரியல் எஸ்டேட் சொத்துகளை இந்த ரீட் நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. உதாரணமாக, ஒரு பெரிய அலுவலக வளாகத்தில் பல நிறுவனங்கள் வாடகைக்கு இடம் எடுத்திருக்கலாம். அந்த நிறுவனங்கள் செலுத்தும் வாடகை மூலம் வருமானம் உருவாகும். அதன் ஒரு பகுதி முதலீட்டாளர்களுக்கு திரும்ப தரப்படும். அதாவது நீங்கள் ஒரு முழு அலுவலக கட்டிடத்தையே வாங்க வேண்டியதில்லை. நம்மால் முடிந்த தொகையை ரீட்டில் முதலீடு செய்தால் அது நமக்கு வாடகை போன்ற வருமானத்தை கொடுக்கும்!

    Advertisement

    InvIT என்றால் என்ன?

    அடுத்து InvIT.. அதுவும் கிட்டத்தட்ட இதுபோல தான். ஆனால், இவை ரியல் எஸ்டேட்களுக்கு பதிலாக நெடுஞ்சாலைகள், மின் பரிமாற்ற கட்டமைப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் போன்ற உள்கட்டமைப்பு சொத்துகளில் முதலீடு செய்கின்றன. அந்த திட்டங்களிலிருந்து கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி முதலீட்டாளர்களுக்கு செல்லும்.

    வருமானம் எப்படி கிடைக்கும்?

    ரீட்டில் உள்ள கட்டிடங்களில் நிறுவனங்கள் வாடகை செலுத்துவார்கள். அதுவே வருமானத்தை உருவாக்குகிறது. InvITல் நெடுஞ்சாலை கட்டணம், மின் பரிமாற்ற கட்டணம் அல்லது நீண்டகால உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் போன்றவற்றின் மூலம் வருவாய் கிடைக்கும். அதில் ஒரு பகுதி முதலீட்டாளர்களுக்கு திரும்ப தரப்படும். எனவே, இவை மாதாமாதம் வருமானம் தரக்கூடிய முதலீடுகளாக மாறுகின்றன.

    Advertisement

    அதேநேரம் இந்த வருமானம் கண்டிப்பாக எல்லா மாதமும் ஒரேபோல இருக்கும் என சொல்லிவிட முடியாது. மார்கெட் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை பொறுத்து இதுவும் மாறும்!

    உங்களிடம் ரூ.50,000 அல்லது ரூ.1 லட்சம் இருந்தால், அந்த பணத்தில் ஒரு அலுவலகத்தையோ அல்லது வீட்டையோ வாங்க முடியாது. ஆனால், ரீட்டில் அதை முதலீடு செய்யலாம். இதன் மூலம் அதுபோன்ற சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருமானம் மறைமுகமாக உங்களுக்கும் கிடைக்கும். மேலும், நேரடியாக சொத்து வாங்கும்போது இருக்கும் பராமரிப்பு பணிகளை கவனிப்பது, வாடகை வசூலிப்பது போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். முக்கியமாக, பணம் தேவைப்படும் நேரத்தில் ரீட் அல்லது இன்விட் யூனிட்களை விற்பது, ரியல் எஸ்டேட்டை விற்பதை விட ஈஸி!

    Advertisement

    REIT vs InvIT.. எது சிறந்தது?

    இரண்டில் எது சிறந்தது என்பதை ஒரே வரியில் சொல்லிவிட முடியாது. ரீட்களின் வருமானம் என்பது தேவை, வாடகை வளர்ச்சி, கட்டிடங்களை பொறுத்து மாறுபடும் மறுபுறம், இன்விட்களின் வருமானம் என்பது நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து, மின்சார தேவை மற்றும் நீண்டகால உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் போன்வற்றை சார்ந்து இருக்கும்.

    இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்!

    English Summary

    You can earn income from real estate and infrastructure without buying an entire property(சொந்த வீடு இல்லாமல் வாடகை வருமானம் ஈட்டும் முறை): Learn how REITs and InvITs work, how investors earn returns.