அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி!

  • சென்னை: உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்கா, தற்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. வெளிநாட்டு அரசுகள் மற்றும் மத்திய வங்கிகள் அமெரிக்க அரசுப் பத்திரங்களை (US Treasuries) பெருமளவு விற்று வரும் செய்தி, பலரையும் "அமெரிக்கப் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறதா?" என்ற கேள்வியை எழுப்பச் செய்துள்ளது. இந்த மாற்றம் ஒரு தற்செயல் நிகழ்வு இல்லை, உலகளாவிய நிதி அமைப்பில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஒருபக்கம் அமெரிக்கா ஈரான் போர் காரணமாக பாதுகாப்பு துறைக்கு அதிகளவில் செலவு செய்து வருகிறது, ஏஐ முதலீடுகள் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை, அனைத்து துறையிலும் பணிநீக்கம் என ஒட்டுமொத்த அமெரிக்க சந்தையும் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்க பத்திர சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஜகா வாங்குவது முதலீட்டு சந்தையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    13 ஆண்டுகளில் குறைந்த அளவு

    அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வில் வெளிநாட்டு நிறுவனங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அரசுப் பத்திரங்களின் மதிப்பு தற்போது 2.68 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது 2012-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும். 2025 மார்ச் மாதத்திலிருந்து மட்டும் சுமார் 265 பில்லியன் டாலர் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளிநாட்டு நிறுவனங்களும், மத்திய வங்கிகளும், வெளிநாட்டு அரசுகளும் தங்களது முதலீட்டை குறைந்துள்ளன. குறிப்பாக, ஈரான் போர் தொடங்கிய பிறகு கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 120 பில்லியன் டாலர் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    பொதுவாக பத்திர சந்தை முதலீடு என்பது வங்கி வைப்பு நிதியை காட்டிலும் மிகவும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படும் வேளையில், பெரும் அமைப்புகள் ஏன் அமெரிக்க அரசு பத்திரங்களை விற்கிறது என்ற கேள்வி எல்லோருக்கும் எழும்.

    2021 மார்ச் மாதத்தில் இந்த மதிப்பு 3.14 டிரில்லியன் டாலராக உச்சத்தில் இருந்து தற்போது 2.68 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி வெறும் தற்காலிக ஏற்ற இறக்கம் அல்ல. உலக நாடுகள் தங்கள் பாதுகாப்பான நிதிகளை சேமிக்கும் முறையில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றத்தின் வெளிப்பாடாக இது கருதப்படுகிறது. டாலரின் உலகளாவிய ஆதிக்கம் ஒரே நாளில் முடிவுக்கு வராது என்றாலும், இப்படிப்பட்ட விற்பனைகள் அந்த ஆதிக்கத்தின் அடித்தளத்தில் விரிசலை ஏற்படுத்தும் அறிகுறியாகும்.

    Advertisement

    ஈரான் போர் மற்றும் எண்ணெய் விலை உயர்வு

    ஈரான் உடனான போர் தீவிரமடைந்த பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. இதனால் பல நாடுகளின் நாணயங்கள் பலவீனமடைந்தன. காரணம் எண்ணெய் உற்பத்தி நாடுகள் அனைத்தும் டாலரில் தான் வர்த்தகம் செய்கிறது, வளைகுடா நாடுகள் மட்டும் மாற்று நாணயத்தில் பேமெண்ட் பெற்றால் டாலரின் ஆதிக்க சகாப்தம் முடிந்துவிடும்.

    கச்சா எண்ணெய் உயர்ந்துள்ள நிலையில் தங்கள் நாணய மதிப்பைத் தக்க வைக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அமெரிக்க டாலரைத் திரட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. அதற்காக அவர்கள் வைத்திருந்த அமெரிக்க அரசுப் பத்திரங்களை விற்று டாலரைப் பெற்றனர்.

    Advertisement

    இந்த விற்பனை அதிகரித்ததால் அமெரிக்கப் பத்திரங்களின் விளைவு (yields) உயர்ந்துள்ளது. இது அமெரிக்க அரசின் கடன் வட்டிச் செலவை அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும், இந்த நிலை உலகப் பொருளாதாரத்தில் புதிய அழுத்தங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது?

    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒருபுறம் அமெரிக்க அரசுப் பத்திரங்களை விற்று வரும் நிலையில், மற்றொருபுறம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இது "பத்திரங்களை விற்று அமெரிக்காவை வாங்குவது" (sell bonds, buy America) என்ற புதிய போக்கை காட்டுகிறது.

    குறிப்பாக, எண்ணெய் மற்றும் பாதுகாப்புத் துறைப் பங்குகள் லாபம் ஈட்டும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்கள் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் அபாயமும் உள்ளது.

    Advertisement

    இந்தியர்கள் என்ன செய்ய வேண்டும்?

    அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் உலகம் முழுவதும் எதிரொலிக்கும். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஏற்றுமதி, முதலீடு மற்றும் நாணய மதிப்பு இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தங்கம், டாலர் மற்றும் பிற முதலீடுகளைத் தேர்வு செய்யும் பொதுமக்கள், இந்த சர்வதேச நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

    தற்போதைக்கு அமெரிக்கப் பொருளாதாரம் இன்னும் வலுவான நிலையிலேயே உள்ளது. ஆனால், அதீத கடன், வட்டி சுமை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இந்த பத்திர விற்பனை போக்கு நீண்ட காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மேலும் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வட்டி விகிதம் உயர்த்தினால் மொத்த கதையும் முடிந்துவிடும் என்பது தான் தற்போதைய எச்சரிக்கை அறிகுறியாகும். ஈரான் மோதல் மற்றும் எண்ணெய் விலை உயர்வு ஆகியவை எப்படி தொடர்கின்றன என்பதைப் பொறுத்தே அடுத்த கட்டம் அமையும்.

    பொருளாதார நிபுணர்களின் அறிவுரைபடி, இந்த மாற்றங்கள் உலக நிதி அமைப்பில் புதிய சமநிலையை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் அவசரப்படாமல், முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.

    English Summary

    Foreign holdings of US Treasuries have plummeted to $2.68 trillion, the lowest level since 2012, as central banks sell bonds to secure dollars amid surging oil prices and the Iran conflict. This structural shift raises serious questions about the future of dollar dominance and signals potential risks to the world’s largest economy, even as foreign investors continue rotating into US stocks.