வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்!

  • இந்தியாவின் மிகப்பெரிய கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ் சந்தையான 'மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா' (MCX), ரீடைல் முதலீட்டாளர்கள் மற்றும் சிறு வணிகர்களும் எளிதாக வெள்ளியில் முதலீடு செய்யும் வகையில், 'சில்வர் 100' (Silver 100) என்ற ஒரு புதிய 100 கிராம் வெள்ளி ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்த புதிய 'சில்வர் 100' ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்களின் வர்த்தகம் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. எம்சிஎக்ஸ் (MCX) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் முடிவடையும் (Expiry contracts) பல்வேறு கால வரம்புகளுக்குள் இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் தற்போது முதலீட்டாளர்களுக்குக் வர்த்தகம் செய்ய திறந்து விடப்பட்டு உள்ளன.

    Advertisement

    ரீடைல் முதலீட்டாளர்களுக்கு மெகா வாய்ப்பு

    எம்சிஎக்ஸ் (MCX) சந்தையில் ஏற்கனவே 30 கிலோ, 5 கிலோ மற்றும் 1 கிலோ எடை அடிப்படையிலான வெள்ளி ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்களும், அதேபோல 5 கிலோ மற்றும் 30 கிலோ எடையிலான மாதாந்திர வெள்ளி ஆப்ஷன்ஸ் ஒப்பந்தங்களும் புழக்கத்தில் உள்ளன. இந்த வரிசையில் ஒரு புதிய விரிவாக்கமாக இந்த 'சில்வர் 100' அறிமுகமாகியுள்ளது.

    இந்திய வெள்ளித் தொழில்துறையில் உள்ள சிறு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நகைக்கடை வியாபாரிகள், சந்தையில் ஏற்படும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்தின் (Price Volatility) அபாயங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் இருப்புத் தேவைக்கு ஏற்ப துல்லியமான அளவுகளில் டெலிவரி பெறவும் இந்த 100 கிராம் ஒப்பந்தம் பெரிதும் உதவும்.

    Advertisement

    இதேவேளையில், ரீடைல் முதலீட்டாளர்களும் ஒரு பாதுகாப்பான, அரசால் நிர்வாகம் செய்யும் உள்கட்டமைப்பின் கீழ், தங்களின் வசதிக்கேற்ப மிகக் குறைந்த அளவுகளில் சிறுகச் சிறுக வெள்ளியில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த வழியாக மாறியுள்ளது.

    'SILVER100' ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

    இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ் வர்த்தக அளவு (Trading unit) 100 கிராம் ஆகும். இதற்கான விலையை 10 கிராமை அடிப்படையாகக் கொண்டு, அகமதாபாத் சந்தை விலையின்படி நிர்ணயம் செய்யப்படும். இந்த விலையில் இறக்குமதி வரி மற்றும் சுங்கக் கட்டணங்கள் உள்ளடங்கி இருக்கும், ஆனால் ஜிஎஸ்டி (GST) மற்றும் இதர உள்ளூர் வரிகள் விலக்கப்பட்டு இருக்கும்.

    Advertisement

    இந்த ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ குறியீடு "SILVER100" என்பதாகும். கமாடிட்டி சந்தை நேரங்களின்படி, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9:00 மணி முதல் இரவு 11:30 மணி அல்லது 11:55 மணி வரை இதற்கான வர்த்தகம் நடைபெறும்.

    இந்த ஒப்பந்தம் மாதத்தின் முதல் நாளன்றே வர்த்தகம் தொடங்கும். முதல் நாள் விடுமுறையாக இருந்தால், அதற்கு அடுத்த வேலை நாளில் வர்த்தகம் துவங்கும். அதேபோல, ஒப்பந்தம் முடிவடைவது மாதத்தின் கடைசி காலண்டர் நாள், ஒருவேளை கடைசி நாள் விடுமுறையாக இருந்தால், அதற்கு முந்தைய வேலை நாள் இறுதி நாளாகக் கருதப்படும்.

    Advertisement

    வெள்ளியின் குறைந்தபட்ச விலை அசைவு (Tick Size) 10 கிராமுக்கு 1 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் அதிகபட்சமாக 600 கிலோ வரை மட்டுமே ஆர்டர் செய்ய அனுமதிக்கப்படுவார்.

    விலை வரம்பு

    வெள்ளி விலையில் ஏற்படும் திடீர் அதிரடி மாற்றங்களைக் கட்டுப்படுத்த எம்சிஎக்ஸ் (MCX) பல அடுக்கு தினசரி விலை வரம்பு அமைப்பை (Daily Price Limits) வகுத்துள்ளது. அதன்படி, ஆரம்பத்தில் 4% விலை வரம்பு விதிக்கப்படும். இந்த வரம்பு மீறப்பட்டால், Cooling-off period எதுவுமின்றி அது 6% ஆகத் தளர்த்தப்படும்.

    ஒருவேளை இந்த 6% எல்லையையும் விலை தாண்டினால், வர்த்தகம் 15 நிமிடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் விலை வரம்பு 9% ஆக விரிவுபடுத்தப்படும்.

    Advertisement

    சர்வதேசச் சந்தையில் வெள்ளியின் விலை இந்த வரம்புகளையும் தாண்டிச் சென்றால், எக்ஸ்சேஞ்ச் தனது வரம்புகளை மேலும் 3% என்ற விகிதத்தில் படிப்படியாகத் தளர்த்தும்.

    இந்த வர்த்தகத்தில் பங்கேற்க நுகர்வோர் குறைந்தபட்சம் 10% ஆரம்ப மார்ஜின் (Initial Margin) அல்லது ஸ்பான் (SPAN) மார்ஜின், இதில் எது அதிகமோ அதைச் செலுத்த வேண்டும். இவற்றுடன் குறைந்தபட்சம் 1% தீவிர நஷ்ட மார்ஜினும் (Extreme loss margin) அவசியமாகும்.

    டெலிவரி, கட்டாய செட்டில்மென்ட்

    'சில்வர் 100' ஒப்பந்தங்கள் அனைத்தும் கட்டாயப் உலோக டெலிவரி முறை (Compulsorily physical delivery) மூலமாகவே முழுமையாக செட்டில் செய்யப்படும். எம்சிஎக்ஸ் கிளியரிங் கார்ப்பரேஷன் அங்கீகாரம் பெற்ற அகமதாபாத் மையமே இதற்கான அதிகாரப்பூர்வ டெலிவரி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டெலிவரி அலகு 100 கிராம் என்பதால், பெரிய முதலீட்டு ஒப்பந்தங்களுடன் ஒப்பிடும் போது இது சிறு நகைக்கடைக்காரர்களுக்கு மிகவும் வசதியான ஒன்றாகும்.

    இந்த பியூச்சர்ஸ் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முந்தைய கடைசி மூன்று வர்த்தக நாட்களில் (Staggered delivery tender period), வாங்குபவர்களும் விற்பனையாளர்களும் தங்களின் டெலிவரி விருப்பங்களைத் தெரிவிக்கலாம். ஒப்பந்தம் முடிவடையும் நாளில், செட்டில் செய்யப்படாத அனைத்து ஓபன் பொசிஷன்களும் (Open positions) கட்டாயமாக டெலிவரி செட்டில்மென்ட்டிற்கு மாற்றப்படும்.

    இறுதி செட்டில்மென்ட் விலையானது (Due Date Rate - DDR), அகமதாபாத் சந்தையின் 999 தூய்மை கொண்ட 1 கிலோ வெள்ளியின் ஸ்பாட் விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, பின்னர் அது விகிதாச்சார அடிப்படையில் 100 கிராம் மதிப்பாக மாற்றப்படும். இந்த ஒட்டுமொத்தக் கிளியரிங் மற்றும் செட்டில்மென்ட் பணிகளை மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் கிளியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (MCXCCL) முழுமையாகக் கையாள்கிறது.

    English Summary

    MCX has introduced the new Silver 100 futures contract, a 100-gram product aimed at making silver investment and hedging easier for retail investors and small jewellers. Trading began on June 1, 2026, with physical delivery options and lower capital requirements compared to larger contracts.