ராணிப்பேட்டை எம்எல்ஏ கருத்து முட்டாள்தனமானது.. டிஆர்பி ராஜா ஆவேசம். அமைச்சர் கீர்த்தனா பதில்

  • சென்னை: ராணிப்பேட்டை தவெக எம்எல்ஏ ஜேகே டயர் ஆலையை நேரடியாக மூடக் கோருவது புதிய முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும், அதில் குறைகள் இருந்தால் சட்டப்படி சரிசெய்யப்பட வேண்டுமே தவிர மூடக் கூடாது என்று திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியிருந்தார். இதுபோன்ற அவசரக் கோரிக்கைகள் தமிழ்நாட்டின் தொழில் வளம் மற்றும் முதலீட்டுச் சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கடுமையாக சாடியுள்ளார். இதற்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அளித்த பதிலை பார்ப்போம்.

    Advertisement

    ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, இன்று சட்டசபையில் பேசும்போது, "இங்கு ஜே.கே. டயர் கம்பெனி இருக்கிறது. இவர்கள் இரவெல்லாம் டயர்களை எரிய விடுகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அங்குள்ள மக்களும் போராட்டம் செய்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை கடந்த ஆட்சியிலிருந்தே வைத்து வருகிறார்கள். கண்டிப்பாக நமது ஆட்சியில் அந்த கம்பெனியை இழுத்து மூட வேண்டும். அந்த கம்பெனி நமக்குத் தேவையில்லை. அங்கிருக்கும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியிருந்தார்.

    Advertisement

    ஆனால் ராணிப்பேட்டையில் அவர் கூறியது ஒரு டயர் ஏஜென்சி தான் என்றும் அங்கு டயர்கள் எரிப்பது தான் சிக்கல் என்றும், அதனை மூட சொல்வதற்கு பதில் தவறுதலாக ஜே.கே. டயர் கம்பெனி எம்எல்ஏ மூட சொல்லிவிட்டதாகவும் நெட்டிசன்கள் விளக்கம் அளித்து வருகிறார்கள்.

    இதனிடையே ஜேகே டயர் நிறுவனத்தை மூட வேண்டும் என்று தவெக எம்எல்ஏ சட்டசபையில் கூறிய கருத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "இப்போது இந்தத் தவெக எம்.எல்.ஏ ஜே.கே. டயர் நிறுவனத்தையே மூடிவிட வேண்டும் என்று கூறுகிறாரா!

    Advertisement

    இவர்களுக்கெல்லாம் என்னதான் ஆயிற்று! ஒருவேளை அங்கே ஏதேனும் சுற்றுச்சூழல் மாசுபாடு அல்லது பிரச்சினை இருந்தால், அதற்கான தகுந்த நடவடிக்கை எடுத்து அதைச் சரிசெய்ய வேண்டும்! அதை விடுத்து, ஒரு தொழிற்சாலையை முழுமையாக மூட வேண்டும் என்று கோருவது முற்றிலும் முட்டாள்தனமானது. இது தொழில் துறையினருக்கு மிகவும் தவறான ஒரு சமிக்ஞையை அனுப்பிவிடும்!

    நமது தமிழ்நாட்டின் தொழில்முறை கௌரவமும், நன்மதிப்பும் இதுபோன்ற முதிர்ச்சியற்ற, அறிவீனமான பேச்சுகளால் பாழாக்கப்படுவதையும் சீரழிக்கப்படுவதையும் கண்டு நான் மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அடைகிறேன்." என்று காட்டமாக பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்துள்ள தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "உங்களுக்குச் சாதகமாக உண்மைகள் இல்லாதபோது 'தொழில்துறையில் அரசியலைக் கலக்கக் கூடாது' என்று பிரசங்கம் செய்வதும், அதே நேரத்தில் உங்களுக்குச் சாதகமான பிம்பத்தைக் கட்டியெழுப்ப அதே உத்தியைப் பயன்படுத்துவதும் உங்களுக்கு மிக வசதியாகப் போய்விட்டது.

    Advertisement

    நல்லாட்சி என்பதற்கு நுட்பமான புரிதல் தேவை. நாங்களும் அப்படிப்பட்ட அணுகுமுறையையே பின்பற்றுகிறோம்; எந்தவொரு விஷயத்தையும் 'சரி அல்லது தவறு' என்ற ஒற்றைப் பார்வையில் அணுக மறுக்கிறோம். கவலைப்படாதீர்கள் சார், வேலைவாய்ப்பையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் எங்களால் சமமாகப் பேண முடியும். இதுகுறித்துச் சட்டமன்றத்தில் நான் பேசிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

    ஒரு தொழிற்சாலையை மூடுவது தொழிலாளர்களைப் பாதிக்கும்; அதே நேரத்தில், கட்டுப்பாடற்ற சுற்றுச்சூழல் மாசுபாடு ஒட்டுமொத்தச் சமூகத்தையும் பாதிக்கும். நமது மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யின் தலைமையில், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழில்துறையின் வளர்ச்சியை விநியோகிக்க நாங்கள் உறுதியளித்துள்ளோம். நிலையான வளர்ச்சி என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல; அது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய தலையாய பொறுப்பு."இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா பதில் அளித்துள்ளார்.

    Advertisement

    முன்னதாக ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிராவிற்கு சட்டசபையிலேயே பதில் அளித்த அமைச்சர் கீர்த்தானா, ஆலையை மூட முடியாது என்றும், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இருந்தால் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையே தெளிவாக பதிலாக கூறினார். அமைச்சர் கீர்த்தனா கூறும் போது, "ஜே.கே. டயர்ஸ் ஆலையை மூட வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால், கண்டிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்; எல்லா கம்பெனிகளும் இயங்க வேண்டும். அதேநேரத்தில், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுத்து, நிறுவனங்களுக்கான சட்டத் திருத்தங்களை வழங்கி, அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கும்; அதேநேரம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்" என்றார்.

    English Summary

    Minister Keerthana has responded to TRB Raja's remarks, calling the Ranipet MLA's suggestion to close the JK Tyre plant foolish.