ரிலையன்ஸ் அனில் அம்பானிக்கு அடுத்த செக்.. நெருக்கமான 2 விஐபிக்கள் அமலாக்கத்துறையால் அதிரடி கைது

  • மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்திற்கு மீண்டும் ஒரு பேரிடி இறங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சதீஷ் சேத் மற்றும் கௌதம் தோஷி ஆகிய இரு முக்கியப் புள்ளிகளை அமலாக்கத்துறை மும்பையில் அதிரடியாகக் கைது செய்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவர்களை, டெல்லியில் பதிவாகியுள்ள வழக்கு விசாரணைக்காக டிரான்சிட் ரிமாண்ட் எடுத்து டெல்லிக்குத் தூக்கியுள்ளது அமலாக்கத்துறை. இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பது வங்கிக் கூட்டமைப்பை ஏமாற்றிய ஒரு பகீர் கதை. அது எப்படி வெளிச்சத்திற்கு வந்தது தெரியுமா? பார்ப்போம்.

    Advertisement

    ஒரு நிறுவனத்திற்காக வாங்கிய கடனை, அந்தத் தொழிலில் முதலீடு செய்யாமல், நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த தனது மற்றுமொரு நிறுவனத்தின் கடனை அடைக்க அனில் அம்பானி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்தத் தவறான நிதி மேலாண்மைதான், இன்று அவரது நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர்களை ஜெயிலுக்கு அனுப்பும் அளவிற்கு நிலைமையைக் மோசமாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுபற்றி பார்ப்போம்.

    Advertisement

    வழக்கின் தொடக்கம்

    ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தொழில் விரிவாக்கத்திற்காக, பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 11 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பிடம் இருந்து மொத்தம் 735 கோடி ரூபாய் டெர்ம் லோன் வாங்கியிருந்தது.

    எஸ்பிஐ வங்கி கொடுத்த அதிரடி புகார்

    வாங்கிய கடனில், எஸ்பிஐ வங்கிக்கு மட்டும் தர வேண்டிய 114.98 கோடி ரூபாய் கடனில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதை அந்த வங்கி கண்டுபிடித்தது. வாங்கிய பணம் குறிப்பிட்ட திட்டத்திற்குப் பயன்படுத்தப்படாமல், முறைகேடாகத் திருப்பிவிடப்பட்டது அல்காரிதம்களாலும் தணிக்கையினாலும் அம்பலமானது.

    சிபிஐ என்ட்ரி மற்றும் ரெய்டு

    எஸ்பிஐ கொடுத்த புகாரின் பேரில், கடந்த மார்ச் மாதம் சிபிஐ இந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, இவர்களது அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தியது. சிபிஐ வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதை உறுதி செய்த அமலாக்கத்துறை , இப்போது களமிறங்கி இருவரையும் தூக்கியுள்ளது.

    Advertisement

    இனி அனில் அம்பானிக்கு வரப்போகும் புது சிக்கல்கள் என்ன?

    இந்த இருவரின் கைது என்பது வெறும் ஆரம்பம்தான். இதன் நிழல் நேரடியாக அனில் அம்பானியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் சேத், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் துணைத் தலைவராகவும் இருந்தவர். கௌதம் தோஷியும் அனில் அம்பானியின் நிழல் போலச் செயல்பட்டவர். இவர்களிடம் டெல்லியில் வைத்து நடத்தப்படும் கிடுக்கிப்பிடி விசாரணையில், "யார் சொல்லிக் கடனைத் திருப்பிவிட்டீர்கள்?" என்ற கேள்விக்கு வரும் பதில்கள் அனில் அம்பானிக்கு நேரடியாகக் கண்ணிவெடியாக மாற வாய்ப்பு உள்ளது.

    அடுத்தடுத்து பாயும் சம்மன்கள்

    ஏற்கனவே நிதி முறைகேடு வழக்குகளில் அமலாக்கத்துறை முன்னிலையில் அனில் அம்பானி ஆஜராகியுள்ளார். இப்போது, 11 வங்கிகள் கூட்டமைப்பில் நடந்த இந்த 735 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில், குழுமத்தின் தலைவரான அனில் அம்பானிக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர அதிக வாய்ப்புகள் உள்ளன.

    Advertisement

    கார்ப்பரேட் இமேஜுக்கு பெரும் முட்டுக்கட்டை

    அனில் அம்பானி தனது நிறுவனங்களை மீண்டும் தூக்கி நிறுத்தப் போராடி வரும் வேளையில், அவரது வலது கை, இடது கையாக இருந்த மாஜி இயக்குநர்கள் இருவர் டெல்லி போலீஸ் காவலுக்குச் சென்றிருப்பது, அவரது எஞ்சியிருக்கும் கார்ப்பரேட் கிரெடிட் ரேட்டிங்கையும், ரிலையன்ஸ் பங்குகளையும் சந்தையில் கடுமையான சரிவை நோக்கித் தள்ளும் என்றே பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    11 வங்கிகளை வளைத்து வாங்கிய கடனில், எஸ்பிஐ கொடுத்த புகார்தான் இந்த இரு முக்கிய அதிகாரிகள் சிக்கியுள்ளனர். இவர்கள் கொடுக்கும் வாக்குமூலம், ரிலையன்ஸ் அனில் அம்பானியின் சிம்மாசனத்தையே உலுக்கப் போகிறது என்பது நிச்சயம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

    English Summary

    Satish Seth, then Director of M/s Reliance Telecom Ltd arrested by ED in the alleged bank fraud money laundering case. Seth also served as Vice Chairman of M/s Reliance Infrastructure.